Close

The Hon’ble Co-operation Minister Function (Corona relief fund 2000)

Publish Date : 16/06/2021
co-op

செ.வெ.எண்:11/2021

நாள்:15.06.2021

திண்டுக்கல் மாவட்டம்

மாண்புமிகு கூட்டுறவுத்துறை அமைச்சர் திரு.இ.பெரியசாமி அவர்கள் அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு கொரோனா நிவாரணநிதி இரண்டாம் தவணையாக ரூ.2000 மற்றும் 14 வகையான மளிகைபொருட்களின் தொகுப்பினை வழங்கி துவக்கி வைத்தார்.

கூட்டுறவுத்துறையின் மூலமாக அனைத்து விவசாயிகளுக்கும் பயிர்கடன் வழங்க நடவடிக்கை – மாண்புமிகு கூட்டுறவுத்துறை அமைச்சர் திரு.இ.பெரியசாமி அவர்கள் தகவல்.

திண்டுக்கல் மாவட்டம், திண்டுக்கல் வட்டம், கன்னிவாடி பேரூராட்சி மற்றும் புதுக்கோட்டை ஊராட்சியில் இன்று (15.06.2021) மாண்புமிகு கூட்டுறவுத்துறை அமைச்சர் திரு.இ.பெரியசாமி அவர்கள், அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு கொரோனா நிவாரணநிதி இரண்டாம் தவணையாக ரூ.2000 மற்றும் 14 வகையான மளிகை பொருட்களின் தொகுப்பினை வழங்கி துவக்கி வைத்து தெரிவித்ததாவது:

தமிழகத்தின் முதலமைச்சராக பொறுப்பேற்று தமிழக மக்களுக்கு அல்லும் பகலும், அயராது உழைத்துக்கொண்டு இருக்கின்ற மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்கள், எந்த மாநிலத்திலும் அறிவிக்காத பல அறிவிப்புகளை அறிவித்து, அத்திட்டங்கள் அனைத்தும் செயல்படுத்தி வருகின்றார். கொரோனா காலத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டுமென்று உயர்ந்த நோக்கத்தோடு, கடந்த காலத்தில் பாதிக்கப்பட்ட மக்கள் எவ்வளவு துன்பப்பட்டார்கள் என்பதை உணர்ந்து, தேர்தல் காலத்தில் தமிழகத்தின் முதல்வராக வந்தால், தமிழ்நாட்டில் இருக்கின்ற மக்களுக்கு கொரோனா நிவாரண நிதி ரூ.4000 வழங்கப்படும் என்ற அறிவிப்பை வெளியிட்டார். அதனை நிறைவேற்றுகின்ற வகையில், ஆட்சி பொறுப்பேற்றவுடன் இத்திட்டத்திற்காக முதல் கையெழுத்திட்டார். கடந்த 2006-ல் முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞர் அவர்கள் ஆட்சிக்கு வந்தவுடன் தேர்தல் வாக்குறுதியில் முதல் கையெழுத்து விவசாயிகளின் கடன் அனைத்தையும் தள்ளுபடி செய்வேன் என்று அறிவித்து செயல்படுத்தினார். தேர்தல் காலங்களில் அறிவித்த அறிவிப்புகள் அனைத்தையும் “சொன்னதை செய்கின்ற அரசு, செய்வதை செல்கின்ற அரசு” என்ற கோட்பாடுக்கேற்ப ஏழை, எளிய மக்களின் வீடுகளில் வண்ண தொலைகாட்சி வழங்கும் திட்டத்தினை கொண்டு வந்தவர் முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞர் என்பதை மகிழ்ச்சியோடு நான் தெரிவித்துக்கொள்கிறேன்.

இந்த அரசு மக்களுக்காக உருவாக்கப்பட்ட அரசு “எல்லாரும் எல்லாமும் பெறவேண்டும்” என்ற உயரிய கொள்கைக்கு சொந்தமான அரசாக நமது அரசு உள்ளது. முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞர் வழியில் அடிபிறழாமல் டாக்டர் கலைஞர் அவர்கள் காலையில் எழுந்ததிலிருந்து ஒரு நாளைக்கு 22 மணி நேரம் மக்களைப்பற்றி சிந்தித்து, காரியங்களை எப்படி நிறைவேற்றினாரோ,அதைவிட ஒருபடி மேலாக இன்றைக்கு நம்முடைய தமிழகத்தின் முதலமைச்சர் அவர்கள் மக்களுக்காக 5 திட்டங்களை அறிவித்து, வீடு தேடி சென்று பொதுமக்களுக்கு உதவிகளை வழங்கிட வேண்டும் என்ற நோக்கத்தோடு, அரசுனுடைய இயந்திரங்கள் இயங்குவதோடு மட்டுமல்லாமல், தானும் தொடர்ந்து பயணித்து கொண்டு இருக்கிறார்.

பொதுமக்களுக்கு கல்வி, மருத்துவம், வேலைவாய்ப்பு, விவசாயம் மற்றும் கிராமங்களில் வாழும் ஏழை, எளிய மக்களுக்கு எல்லாம் எல்லா மக்களுக்கு கிடைக்க வேண்டும் என்ற உயரிய நோக்கத்தோடு அரசு இன்றைக்கு செயல்பட்டுக் கொண்டியிருக்கிறது என்பதை நீங்கள் அறிவீர்கள். டாக்டர் கலைஞர் ஆட்சி காலத்தில் பெண்கள் எல்லாம் தாங்கள் சொந்த காலில் நிற்க வேண்டும் என்பதற்காக சுய உதவிக்குழுவை உருவாக்கியவர் டாக்டர் கலைஞர் அவர்கள். அதை மிக அற்புதமாக செயல்படுத்தியவர் அப்பேதைய துணை முதல்வராக இருந்த தளபதியார் அவர்கள்.

பெண்களுக்காக எண்ணற்ற ஏராளமான திட்டங்கள் எதிர்காலத்தில் தமிழ்நாட்டில் உருவாக்கப்படும். பெண்களுக்கு சமத்துவம் என்ற நிலை உருவாக்க கல்வி, பொருளாதாரம், மருத்துவம், வேலைவாய்ப்புகளை உருவாக்குவதற்கு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் தலைமையிலான அரசு பாடுபடும் உயர்ந்த எண்ணத்தோடு மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் திறன்படி செயலாற்றி கொண்டியிருக்கிறார்.இந்த கொரோனா நிவாரண நிதி 99.5 சதவீதம் கூட்டுறவு நியாயவிலைக்கடைகளின் மூலமாக வீடு தேடி சென்று மக்களுக்கு தொடர்ச்சியாக டோக்கன் வழங்கப்பட்டு, அரசு நிவாரணங்கள் இல்லை என்ற நிலை இல்லாமல் வழங்கி கொண்டியிருக்கின்ற அரசுதான் மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்களின் தலைமையலான அரசு என்பதை நான் மக்களுக்கு தெரிவித்து கொள்கிறேன்.

நியாயவிலைக்கடைகளின் மூலமாக கிடைக்ககூடிய அனைத்து பொருட்களும் கடந்த கால திமுக ஆட்சியில் மாதத்தின் அனைத்து நாட்களிலும் பொதுமக்களுக்கு உண்டான பொருட்களை பெற்று செல்லலாம் என்கின்ற நிலை இருந்ததோ, அதே நிலை தற்போது எல்லா கிராமத்திற்கும் கொண்டு சேர்க்கின்ற பணியினை கூட்டுறவுத்துறை உறுதிப்படுத்திக் கொண்டியிருக்கிறது.கூட்டுறவுத்துறையின் மூலமாக அனைத்து விவசாயிகளுக்கும் பயிர்கடன் வழங்க நடவடிக்கை எடுக்கபட்டு வருகிறது. உறுப்பினாராக இல்லாத விவசாயிகளை புதிய உறுப்பினராக சேர்த்து பயிர்கடன் வழங்கவும் நடவடிக்கை எடுக்கபட்டு வருகிறது.

மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்களின் 07.05.2021-ந் தேதி அறிவிப்பின்படி, கொரோனா நோய் தொற்று காரணமாக பொதுமக்களுக்கு ஏற்பட்டுள்ள சிரமங்களை குறைக்கும் வகையிலும், பொதுமக்களின் வாழ்வாதாரத்திற்கு உதவும் வகையிலும் திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள மொத்தம் 6,49,083 குடும்ப அட்டைதாரர்களுக்கு தலா ரூ.2000/-ம் வீதம் இரண்டாம் தவணையாக அனைத்து அரிசி பெறும் குடும்ப அட்டைதாரர்களுக்கும் ரூ.129.81 கோடி ரூபாய் கொரனா வைரஸ் நிதி உதவியாக ஒதுக்கீடு செய்யப்பட்டு, முதல் தவணையாக 6,45,782 குடும்ப அட்டைதாரர்களுக்கு தலா ரூ.2000 வீதம் ரூ.129.15 கோடி வழங்கப்பட்டுள்ளது.

தற்பொழுது மாண்புமிகு முதலமைச்சர் அவர்களின் அறிவிப்பின்படி கொரோனா நிவாரணம் இரண்டாம் தவணை தொகை ரூ.2000/- மற்றும் 1 கிலோ கோதுமை மாவு, 1 கிலோ உப்பு, 1 கிலோ ரவை, ½ கிலோ சர்க்கரை, 500 கிராம் உளுந்தம் பருப்பு, 250 கிராம் புளி, 250 கிராம் கடலை பருப்பு, 100 கிராம் கடுகு, 100 கிராம் சீரகம், 100 கிராம் மஞ்சள் தூள், 100 கிராம் மிளகாய் தூள், 200 கிராம் டீ தூள், குளியல் சோப்பு மற்றும் துணி சோப்பு அடங்கிய 14 அத்தியாவசிய பொருட்கள் அடங்கிய மளிகை தொகுப்பினையும் இலவசமாக வழங்கிட ஆணையிடப்பட்டு அனைத்து அரிசி பெறும் குடும்ப அட்டைதாரர்களுக்கு ஜுன் 2021 மாதத்தில் இரண்டாம் தவணையாக ரூ.2000/- வீதம் வழங்கிட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இத்தொகையினை சுழற்சிமுறையில் வழங்கும் பொருட்டு குடும்ப அட்டைதாரர்களுக்கு டோக்கன்கள் வழங்கும் நாள், நேரம், இடம் ஆகியன குறிக்கப்பட்டு 11.06.2021 முதல் 14.06.2021 வரை வழங்கப்பட்டு வருகிறது. இந்த டோக்கன்களில் 15.06.2021 முதல் 18.06.2021 முடிய நிவாரண தொகை மற்றும் மளிகைப் பொருட்கள் வழங்கப்படவுள்ள அட்டைதாரர்களுக்கு தினசரி 100 டோக்கன்கள் வழங்கப்பட்டு வருகிறது. 19.06.2021 முதல் தினசரி 150 அட்டைதாரர்களுக்கு டோக்கன் வழங்கிட அறிவுறுத்தப்பட்டுள்ளது.

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள 12 வட்டாரங்களில் உள்ள 1016 நியாயவிலைக் கடைகள் மற்றும் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் நடத்தம் 19 நியாயவிலைக் கடைகள் ஆக மொத்தம் 1035 நியாயவிலைக் கடைகள் மூலம் இந்நிதி உதவித் தொகை வழங்கப்படவுள்ளது. இத்தொகையினை 170 தொடக்க வேளாண்மை கடன் சங்கங்கள், 7 பிரதம கூட்டுறவு பண்டகசாலைகள், 2 கூட்டுறவு வேளாண் விளைபொருள் உற்பத்தியாளர் கூட்டுறவு விற்பனைச் சங்கம், 1 மொத்த விற்பனை பண்டகசாலை ஆக மொத்தம் 180 கூட்டுறவு நிறுவனங்கள் மூலம் வழங்கப்படவுள்ளது என்று மாண்புமிகு கூட்டுறவுத்துறை அமைச்சர் திரு.இ.பெரியசாமி அவர்கள் தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் திரு.இரா.கோவிந்தராசு, மாவட்ட கூட்டுறவு சங்கங்களின் இணைபதிவாளர் திரு.முருகேசன், மேலாண்மை இயக்குநர் திரு.ராமகிருஷ்ணன், ரெட்டியார்சத்திரம் ஒன்றிய துணைத்தலைவர் திருமதி.ராஜேஸ்வரி, திண்டுக்கல் வருவாய் கோட்டாட்சியர் திருமதி.காசிசெல்வி ஆகியோர் கலந்து கொண்டனர்.

செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்