Close

”முத்தமிழ்த்தேர்” அலங்கார ஊர்தி

Publish Date : 20/11/2023

செ.வெ.எண்:-46/2023

நாள்: 18.11.2023

திண்டுக்கல் மாவட்டம்

முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் அவர்களின் நூற்றாண்டு விழாவினை முன்னிட்டு கலைஞர் அவர்களின் புகழை போற்றிடும் வகையில் ”எழுத்தாளர் – கலைஞர்” குழுவின் சார்பில் ”முத்தமிழ்த்தேர்” என்ற அலங்கார ஊர்தி திண்டுக்கல் மாவட்டத்திற்கு வருகின்ற 20.11.2023 அன்று வருகை தர உள்ளது – மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் தகவல்

முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் அவர்களின் நூற்றாண்டு விழாவினை முன்னிட்டு அவ்விழாவினை தமிழகம் முழுவதும் சிறப்பாக கொண்டாடிடும் வகையில் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் 12 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.

அதில் ஒன்றாக ”எழுத்தாளர் – கலைஞர்” குழுவின் சார்பில் முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் அவர்கள் தமிழ்நாட்டிற்கு ஆற்றிய அரும்பணிகள் மற்றும் அவரது, பரிமாணங்களை போற்றிடும் வகையில் பல்வேறு முன்னெடுப்புக்கள் சிறப்பாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

அந்த வகையில் முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் அவர்களின் புகழுக்கு புகழ் சேர்க்கின்ற வகையிலும், இன்றைய இளம் தலைமுறையினர்களுக்கு முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் அவர்களின் பன்முகத்தன்மையை எடுத்துக்கூறும் வகையிலும் எழுத்தாளர் கலைஞர் குழுவின் சார்பில், கலைஞர் அவர்களின் புகழ் பாடும் ”முத்தமிழ்த்தேர்” அலங்கார ஊர்தி தயார் செய்யப்பட்டுள்ளது.

இந்த அலங்கார ஊர்தியின் வாயிலாக முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் அவர்களின் பன்முக ஆற்றலையும், அவர் தமிழ் சமூக மேம்பாட்டிற்காக செயல்படுத்திய மக்கள் நலத்திட்டங்களையும் தமிழகம் முழுவதும் பறைசாற்றுகின்ற வகையில் தமிழ்நாடு முழுவதும் கலைஞரின் பேனா வடிவில் வடிவமைக்கப்பட்ட முத்தமிழ்த்தேர் என்ற அலங்கார ஊர்தி 04.11.2023 முதல் 05.12.2023 வரை அனைத்து மாவட்டங்களுக்கு பயணிக்கின்ற வகையில் திட்டமிடப்பட்டுள்ளது.

அதன்படி, கடந்த 04.11.2023 அன்று கன்னியாகுமரி மாவட்டத்தில் ”முத்தமிழ்த்தேர்” அலங்கார ஊர்தி துவக்கி வைக்கப்பட்டது. அதனைத்தொடர்ந்து பல்வேறு மாவட்டங்களில் இந்த அலங்கார ஊர்தியானது பயணிக்கப்பட்டு, அதன் தொடர்ச்சியாக வருகின்ற 20.11.2023 அன்று திண்டுக்கல் மாவட்டத்திற்கு வருகை தர உள்ளது. திண்டுக்கல் மாவட்டத்தில் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களான 1.திண்டுக்கல் காமராஜர் பேருந்து நிலையம். 2.ஒட்டன்சத்திரம் பேருந்து நிலையம். 3. பழனி பேருந்து நிலையம் ஆகிய மூன்று இடங்களில் காட்சிப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.

முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் அவர்களின் நூற்றாண்டு விழாவினை முன்னிட்டு அவர்களின் புகழை போற்றுகின்ற வகையில் ”எழுத்தாளர் – கலைஞர்” குழுவின் சார்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு நிகழ்வுகளில் பொதுமக்கள் பெருமளவில் கலந்து கொண்டு முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் அவர்களின் படைப்புக்கள் குறித்து அறிந்து கொள்ள வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்.

செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.