Kodaikanal Collector Inspection

Publish Date : 09/05/2019
3

2 1

செ.வெ.எண்:-9/2019 நாள்:- 09.05.2019
திண்டுக்கல் மாவட்டம்

கொடைக்கானல் நகராட்சிக்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் நடைபெற்று வரும் சீரமைப்பு பணிகள் குறித்து, மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர்.டி.ஜி.வினய், இ.ஆ.ப., அவர்கள் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் நகராட்சிக்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் நடைபெற்று வரும் சீரமைப்பு பணிகள் குறித்து, இன்று (09.05.2019) மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர்.டி.ஜி.வினய், இ.ஆ.ப., அவர்கள் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு தெரிவித்ததாவது:-

மலைகளின் இளவரசி எனப்படும் கொடைக்கானல் சுற்றுலாத்தளத்தில் பொதுமக்கள் மற்றும் சுற்றுலாப்பயணிகளின் நலன் கருதி பல்வேறு அடிப்படை வசதிகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

தற்சமயம் கோடைகாலம் தொடங்கியுள்ளதை முன்னிட்டு, கொடைக்கானல் பகுதிக்கு அதிகளவில் உள்நாட்டு, வெளிநாட்டு சுற்றுலாப்பயணிகள் வரத்தொடங்கியுள்ளனர். சுற்றுலாப் பயணிகளை கவரும் வகையில், தோட்டக்கலை மற்றும் வேளாண் பொறியியல் துறையின் மூலம் ரூபாய் 6 கோடி மதிப்பீட்டில் 1,500 வகையான ரோஜா செடிகள் நடப்பட்டு வருகிறது. பிரையண்ட் பூங்காவில் சீரமைக்கப்பட்டு வரும் கழிப்பறைகள் ஒரு வார காலத்திற்குள் சுற்றுலாப்பயணிகளின் பயன்பாட்டிற்கு கொண்டுவரவும் மற்றும் பூங்காவில் உள்ள நீரூற்றினை செயல்படுத்தவும் அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

கொடைக்கானல் ஏரிக்கு அருகில் நடைபாதை மற்றும் கழிப்பறைகள் சீரமைக்கவும், ஏரியின் கரையோரங்களில் தூய்மைப் பணிகள் தொடர்ந்து மேற்கொள்ளவும் அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேலும், வெள்ளி நீர்வீழ்ச்சி பகுதியில் மேலிருந்து வரும் இயற்கை குப்பைகளை நகராட்சியின் மூலம் அப்புறப்படுத்துவதற்கும், அலங்கார மின்விளக்கு வசதிகளை மேம்படுத்தவும் அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. தற்சமயம் தேர்தல் நன்னடத்தை விதிமுறைகள் நடைமுறையில் உள்ளதால், மலர் கண்காட்சி மற்றும் கோடைவிழா – 2019 நடைபெறவுள்ள தேதி, பின்னர் அறிவிக்கப்படும்.

கொடைக்கானல் பகுதிக்கு வருகை தரும் சுற்றுலாப்பயணிகள், நகராட்சியின் சார்பில் ஆங்காங்கே நிறுவப்பட்டுள்ள குப்பைத் தொட்டிகளில் குப்பைகளை போட்டு, சுற்றுப்புறத்தை தூய்மையாக வைத்துக்கொள்ள முழு ஒத்துழைப்பு தர வேண்டும். இவ்வாறு மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர்.டி.ஜி.வினய், இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்தார்.

இந்த ஆய்வின்போது, கொடைக்கானல் வருவாய் கோட்டாட்சியர் திரு. சுரேந்திரன், நகராட்சி ஆணையாளர் திரு. முருகேசன், செயற்பொறியாளர் (வேளாண் பொறியியல் துறை) திரு. பார்த்தசாரதி, துணை இயக்குநர் (தோட்டக்கலைத்துறை) திரு. நாராயணசாமி, வட்டாட்சியர் திரு. வில்சன் தேவராஜ் உள்ளிட்ட தொடர்புடைய அலுவலர்கள் உடனிருந்தனர்.

செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்