Close

75 Independence Day – Mini Marathan

Publish Date : 13/04/2022
.

செ.வெ.எண்:-29/2022

நாள்:13.04.2022

திண்டுக்கல் மாவட்டம்

75வது சுதந்திர திருநாள் அமுத பெருவிழாவை முன்னிட்டு செய்தி மக்கள் தொடர்பு துறை – மாவட்ட விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் ஆகியவை சார்பில் நடைபெற்ற மினி மாரத்தான் ஓட்டத்தை மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் ச.விசாகன், இ.ஆ.ப., அவர்கள், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.வி.ஆர்.சீனிவாசன் ஆகியோர் கொடியசைத்து துவக்கி வைத்தனர்.

திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் முகாம் அலுவலகத்தின் பின்புறம் (வருவாய் கோட்டாட்சியர்) அலுவலக வளாகத்தில் 75வது சுதந்திர திருநாள் அமுத பெருவிழாவை முன்னிட்டு செய்தி மக்கள் தொடர்பு துறை- மாவட்ட விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் இணைந்து நடத்திய மினி மாரத்தான் ஓட்டத்தை மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் ச.விசாகன், இ.ஆ.ப., அவர்கள், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.வி.ஆர்.சீனிவாசன் அவர்கள் ஆகியோர் இன்று(13.04.2022) கொடியசைத்து துவக்கி வைத்தனர். திண்டுக்கல் மாவட்ட நிர்வாகம் சார்பில் 75-வது சுதந்திரத் திருநாள் அமுதப் பெருவிழா, பல்துறை பணி விளக்க கண்காட்சி, திண்டுக்கல் குமரன் பூங்கா கலையரங்கம் மைதானத்தில் 15.04.2022 முதல் 7 நாட்கள் தினமும் மாலை 04.00 மணி முதல் இரவு 09.00 மணி வரை நடைபெறவுள்ளது. கண்காட்சியில், அரசின் திட்டங்களை பொதுமக்கள் அறிந்துகொள்ளும் வகையில் துறைவாரியாக அரங்குகள் அமைக்கப்பட்டு, பல்துறை பணி விளக்க கண்காட்சி அமைக்கப்பட்டு துறை அலுவலர்கள் சார்பில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்படவுள்ளது. கண்காட்சியில், தினமும் மாலை 04.00 மணி முதல் பல்சுவை கலைநிகழ்ச்சிகள், விழிப்புணர்வு நாடகங்கள், நாட்டுப்புற கலைநிகழ்ச்சிகள் நடைபெறுகிறது. கண்காட்சியை காண நுழைவு கட்டணம் இல்லை. கண்காட்சியில் பொழுதுபோக்கு அம்சங்களும் அமைக்கப்பட்டுள்ளன.இந்தக்கண்காட்சியை பொதுமக்கள் அனைவரும் குடும்பத்துடன் வந்து கண்டுகளிக்க ஏதுவாக விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக இன்று(13.04.2022) மினி மாரத்தான் ஓட்டம் நடைபெற்றது. இந்த மினி மாரத்தான் ஓட்டம், மாவட்ட ஆட்சியர் முகாம் அலுவலகத்தின் பின்புறம்(கோட்டாட்சியர் அலுவலகம்) துவங்கி, தலைமை தபால் நிலையம், பேருந்து நிலையம், டட்லி பள்ளி, திண்டுக்கல் நகராட்சி அலுவலகம், வெள்ளை விநாயகர் கோவில் வளைவு, புனித வளனால் பெண்கள் மேல்நிலைப்பள்ளி, அரசு மருத்துவமனை, காவல் நிலையம் வழியாக சென்று மீண்டும் மாவட்ட ஆட்சியர் முகாம் அலுவலகத்தின் பின்புறம் முடிவடைந்தது.

இந்நிகழ்ச்சியில், திண்டுக்கல் வருவாய் கோட்டாட்சியர் திரு.பிரேம்குமார், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் திரு.வெ.சீனிவாசன், மாவட்ட விளையாட்டு அலுவலர் திருமதி ரோஸ் பாத்திமா மேரி மற்றும் பள்ளி கல்லூரிகளைச் சேர்ந்த தடகள மாணவ, மாணவிகள் 500க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.