Close

Additional EVMs – General Observer and Collector Inspection

Publish Date : 29/03/2021
.

செ.வெ.எண்:-38/2021

நாள்:-27.03.2021

திண்டுக்கல் மாவட்டம்

திண்டுக்கல் மாவட்டத்திற்கு கூடுதலாக வரவழைக்கப்பட்ட 1060 மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை பரிசோதனை செய்யும் பணிகளை தேர்தல் பொது பார்வையாளர் திருமதி சோமா பட்டாச்சார்ஜி, இ.ஆ.ப., அவர்கள், மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மு.விஜயலட்சுமி, இ.ஆ.ப., அவர்கள் ஆகியோர் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர்.

தமிழ்நாடு சட்டமன்ற பொதுத்தேர்தல்-2021ஐ முன்னிட்டு திண்டுக்கல் மாவட்டத்தில் 5 சட்டமன்ற தொகுதிகளின் தேவைக்காக கூடுதலாக வரவழைக்கப்பட்ட 1060 மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை பரிசோதனை செய்யும் பணியை தேர்தல் பொது பார்வையாளர் (129-ஆத்தூர் மற்றும் 130-நிலக்கோட்டை சட்டமன்ற தொகுதி) திருமதி சோமா பட்டாச்சார்ஜி, இ.ஆ.ப., அவர்கள், மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மு.விஜயலட்சுமி, இ.ஆ.ப., அவர்கள் ஆகியோர் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர். ஆய்வின்போது, மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் பார்வையிட்டு தெரிவித்ததாவது:-

இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவிப்பின்படி, தமிழ்நாடு சட்டமன்ற பொதுத்தேர்தல்-2021 வருகின்ற 06.04.2021 அன்று நடைபெறவுள்ளது. அதன்படி, திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள 7 சட்டமன்ற தொகுதிகளிலும் தேர்தல் முன்னேற்பாடு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள 7 சட்டமன்ற தொகுதிகளிலும் 25,000-க்கும் மேற்பட்ட பணியாளர்கள் தேர்தல் பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர். மாவட்டத்தில் பழனி சட்டமன்ற தொகுதியில் 405, ஒட்டன்சத்திரம் சட்டமன்ற தொகுதியில் 352, ஆத்தூர் சட்டமன்ற தொகுதியில் 407, நிலக்கோட்டை சட்டமன்ற தொகுதியில் 342, நத்தம் சட்டமன்ற தொகுதியில் 402, திண்டுக்கல் சட்டமன்ற தொகுதியில் 397 மற்றும் வேடசந்தூர் சட்டமன்ற தொகுதியில் 368 என மொத்தம் 2673 வாக்குச்சாவடிகள் அமைக்கப்படவுள்ளன.

திண்டுக்கல் மாவட்டத்தில் மொத்தம் உள்ள 7 சட்டமன்ற தொகுதிகளில், திண்டுக்கல், பழனி, ஆத்தூர், நிலக்கோட்டை, வேடசந்தூர் 5 தொகுதிகளில் 15-க்கும் அதிகமான வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். ஒரு வாக்குப்பதிவு இயந்திரத்தில் 15 வேட்பாளர்களின் பெயர் மட்டுமே இடம்பெற முடியும் என்பதால் மேற்கண்ட 5 சட்டமன்ற தொகுதிகளுக்குட்பட்ட வாக்குச்சாவடி மையங்களில் கூடுதல் வாக்குப்பதிவு இயந்திரம் அமைக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் 5 சட்டமன்ற தொகுதிகளிலும் கூடுதலாக 2305 வாக்குப்பதிவு இயந்திரங்கள் அமைக்க அமைக்கப்பட உள்ளது.

அதையடுத்து கூடுதல் வாக்குப்பதிவு இயந்திரங்கள் கோரி, இந்திய தேர்தல் ஆணையத்தின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. அதையடுத்து கன்னியாகுமரி மாவட்டத்தில் கூடுதலாக இருந்த 1060 மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள், இந்திய தேர்தல் ஆணையத்தின் அனுமதி பெற்று திண்டுக்கல் மாவட்டத்திற்கு கொண்டுவரப்பட்டுள்ளன.

இந்த மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை பரிசோதனை செய்யும் பணிகள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள பாதுகாப்பு அறையில் அனைத்துக்கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில், பெல்(BHEL) நிறுவன பொறியாளர்களால் இன்று மேற்கொள்ளப்பட்டு வருகிறது. பரிசோதனை பணி முடிவடைந்த பின்னர் 2305 மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் தேர்தல் பணிக்கு பயன்படுத்துவதற்கான அந்தந்த சட்டமன்ற தொகுதிகளுக்கு அனுப்பி வைக்கப்படும் என மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மு.விஜயலட்சுமி, இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்தார்.

இந்த ஆய்வின்போது, தேர்தல் வட்டாட்சியர் திரு.சரவணன், அனைத்துக் கட்சி பிரதிநிதிகள் பலர் உடனிருந்தனர்.

செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.