AGRI DEPARTMENT (AGRI BUDGET)
செ.வெ.எண்:-41/2023
நாள்:-21.03.2023v
திண்டுக்கல் மாவட்டத்திற்கு தமிழக அரசின் 2023-2024-ஆம் ஆண்டிற்கான மூன்றாம் வேளாண் நிதிநிலை அறிக்கையில் ஒதுக்கீடு செய்யப்பட்ட திட்டங்களின் விபரம்
தமிழக அரசின் 2023-2024-ஆம் ஆண்டிற்கான மூன்றாம் வேளாண் நிதிநிலை அறிக்கை மாண்புமிகு வேளாண்மை – உழவர் நலத்துறை அமைச்சர் திரு.ஆ.சு.மு.பன்னீர் செல்வம் அவர்கள் இன்று சட்டமன்ற பேரவையில் தாக்கல் செய்தார். இதில் திண்டுக்கல் மாவட்டத்திற்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட திட்டங்களின் விபரம்:
1.முருங்கை இயக்கம்: தேனி, திண்டுக்கல், கரூர், தூத்துக்குடி, திருப்பூர், அரியலூர், மதுரை போன்ற மாவட்டங்களை உள்ளடக்கிய முருங்கை ஏற்றுமதி மண்டலத்தில் 1000 எக்டரில் முருங்கை சாகுபடியினை உயர்த்திட ரூ.11 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. முருங்கை விவசாயிகளுக்கு மதிப்பு கூட்டுதல், ஏற்றுமதி குறித்து விவசாயிகளுக்கும் ஏற்றுமதியாளர்களுக்கும் வேளாண் மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுப் பொருட்கள் ஏற்றுமதி மேம்பாட்டு ஆணையம் (APEDA) மூலம் பயிற்சி வழங்கப்பட உள்ளது.
2.தக்காளி: ஆண்டு முழுவதும் தக்காளி சீராக கிடைப்பதற்காக கிருஷ்ணகிரி தர்மபுரி, சேலம், திண்டுக்கல், தேனி, திருப்பூர் மற்றும் கோயம்புத்தூர் மாவட்டங்களில் சொட்டுநீர் பாசனம் உயர் மகசூல் ரகங்கள், மூடாக்கு இடுதல் போன்ற உத்திகளை பிரபலப்படுத்துவதற்காக ரூ.19 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
3.வெங்காயம்: வெங்காயம் வரத்தை ஆண்டு முழுவதும் உறுதி செய்யும் வகையில் பெரம்பலூர், நாமக்கல், சேலம், தூத்துக்குடி, திருச்சி, திண்டுக்கல் மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் விதைப்பு இயந்திரங்கள், அறுவடை இயந்திரங்கள், சொட்டுநீர், பாசனம், சேமிப்பு கட்டமைப்புகள் போன்ற வசதிகளை செய்து தருவதற்காக ரூ.29 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
4.மல்லிகை இயக்கம்: ஆண்டு முழுவதும் மல்லிகை உற்பத்திக்காக, தரமான மல்லிகை செடிகளை இராமநாதபுரத்தில் உற்பத்தி செய்து விநியோகம் செய்யவும் மதுரை, விருதுநகர், திண்டுக்கல், தேனி மற்றும் தென்காசி மாவட்டங்களில் மல்லிகைபயிர் மேலாண்மை முறைகளை விவசாயிகளுக்கு கற்றுத்தரவும் ரூ.7 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படஉள்ளது.
5.பலா இயக்கம்: பண்ருட்டி பலாவிற்கு ஒருங்கிணைந்த தொகுப்பு அமைத்து, நடவு செடிகள், இடுபொருட்களை விநியோகம் செய்து, மதிப்பு கூட்டும் கட்டமைப்புகள் உருவாக்கி தந்து உலகளாவிய சந்தை வாய்ப்புகளை ஏற்படுத்துவதற்காக பலாவில் பன்னாட்டு கருத்தரங்குகள் அமைக்கப்பட உள்ளது. பகுதிகளுக்கு ஏற்ற பலா ரகங்களை அறிமுகம் செய்து அரியலூர், திண்டுக்கல், கடலூர், கன்னியாகுமரி, புதுக்கோட்டை, சேலம், தென்காசி மற்றும் தேனி உள்ளிட்ட மாவட்டங்களில் பலா சாகுபடியினை 5 ஆண்டுகளில் 2500 எக்டரில் உயர்த்திட இவ்வாண்டு ரூ.3 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
6.பாதுகாக்கப்பட்ட சாகுபடிக்கு முன்னுரிமை: பசுமை குடில், நிழல் வலைக் குடிலில் உயர் மதிப்புள்ள காய்கறிகள், பூக்களை ஆண்டு முழுவதும் சாகுபடி செய்து அதிக வருமானம் பெறுவதற்கு வரும் ஆண்டில் ரூ.22 கோடி ஒதுக்கீட்டில் திண்டுக்கல், தர்மபுரி, ராணிப்பேட்டை, சேலம், சிவகங்கை, தேனி, ஈரோடு, திருப்பத்தூர், திருப்பூர், திருச்சி, திருநெல்வேலி மற்றும் மதுரை மாவட்டங்களுக்கு முன்னுரிமை வழங்கப்பட உள்ளது.
7.உழவர் சந்தை புதுப்பித்தல் : திண்டுக்கல், கள்ளக்குறிச்சி, நாமக்கல், புதுக்கோட்டை, திருப்பூர் மற்றும் திருவண்ணாமலை மாவட்டங்களில் உள்ள 25 உழவர் சந்தைகளில் அடிப்படை வசதிகளை செய்து தருவதற்காக ரூ.9 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
8.செங்காந்தள் மலர் விதைகள் வர்த்தகம்: செங்காந்தள் மலர் அதிகம் சாகுபடி செய்யப்படும் திண்டுக்கல், திருப்பூர், ஈரோடு, திருச்சி, கரூர்,அரியலூர், பெரம்பலூர், நாகப்பட்டினம் மற்றும் சேலம் ஆகிய மாவட்ட விவசாயிகள் விளைவிக்கும் செங்காந்தள் மலர் விதைகளை ஒழுங்குமுறை விற்பனைக்கூடங்கள் மூலம் வர்த்தகம் செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
9.மின்னனுமாற்றத்தகுகிடங்கு ரசீது: திண்டுக்கல், கோயம்புத்தூர், தேனி, திருநெல்வேலி ஆகிய மாவட்டங்களில் அமைந்துள்ள குளிர் பதனகிடங்குகளுக்கு கிடங்கு மேம்பாடு ஒழுங்கு முறை ஆணையத்தின் அங்கீகாரம் பெற்று மின்னனுமாற்றத்தகுகிடங்கு ரசீது பெற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.
செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.