Close

Agri GDP

Publish Date : 26/11/2021
.

..

செ.வெ.எண்:-70/2021

நாள்:26.11.2021

விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம், மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் ச.விசாகன், இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது.

திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம், மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் ச.விசாகன், இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் இன்று(26.11.2021) நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்ததாவது:-

திண்டுக்கல் மாவட்டத்தில் நடப்பு ஆண்டிற்கான பருவமழை துவங்கியுள்ளதால் அனைத்து விவசாயிகளும் பயனடையும் வகையில், மாவட்டத்தில் உள்ள மொத்தம் 197 தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள் வாயிலாக விவசாய கடன்கள் வழங்கப்பட்டு வருகிறது. மேலும், விவசாயிகளுக்கு கடன்கள் வழங்குவதற்கு தமிழ்நாடு மாவட்ட தொழில்நுட்பக் குழுவினால் 2021-22-ஆம் ஆண்டிற்கு திண்டுக்கல் மாவட்டத்தில் சாகுபடியாகும் பல்வேறு பயிர்களுக்கு, கால்நடை வளர்ப்புக்கு மற்றும் மீன் வளர்ப்புக்கு தேவையான கடன் அளவு, கடன் வழங்கும் காலம் மற்றும் தவணை காலம் ஆகியவை அங்கீகரிக்கப்பட்டுள்ளது. எனவே, அனைத்து விவசாயிகளும் தங்களது பகுதியில் உள்ள தொடக்க வேளாண்மை சுட்டுறவு கடன் சங்கத்தை உரிய ஆவணங்களுடன் அணுகி கடன் பெற்ற பயன்பெறலாம்.

சங்கத்தில் பயிர்க்கடன் பெறும் விவசாயிகள் உரிய தவணை தேதிக்குள் கடனை திருப்பி செலுத்துவதன் மூலம் வட்டி இல்லாத பயிர்க்கடன் பெற்று பயன் அடையலாம்.

திண்டுக்கல் மாவட்டத்தில் தேசிய உணவு பாதுகாப்பு இயக்கத்தின் கீழ் 2021-2022-ஆம் ஆண்டுக்கு எண்ணெய் வித்து பயிர்களின் (நிலக்கடலை) உற்பத்தியை அதிகரிக்க ரூ.45.08 இலட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

விவசாயிகள், ஒரே வகையான பயிர்களை தொடர்ந்து சாகுபடி செய்யாமல், பயிர் சுழற்சி முறையை கையாள வேண்டும். இதன்மூலம் மகசூல் பாதிப்பு ஏற்படுவதை தவிர்க்கலாம்.

விவசாயிகள், பிரதம மந்திரியின் புதுப்பிக்கப்பட்ட பயிர் காப்பீடு திட்டத்தில் இணைந்து பயிர் காப்பீடு செய்யலாம். அதற்காக தங்கள் அருகாமையில் உள்ள பொது சேவை மையங்கள் அல்லது தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள் அல்லது வர்த்தக வங்கிகளை அணுகி, பிரீமியம் தொகை செலுத்தி பயன்பெறலாம். மேலும் விபரங்களுக்கு தங்கள் பகுதி உதவி வேளாண்மை அலுவலர்கள் மற்றும் வேளாண்மை உதவி இயக்குநர் அலுவலகத்தை தொடர்பு கொண்டு தெரிந்துகொள்ளலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் ச.விசாகன், இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்தார்கள்.

இக்கூட்டத்தில், இந்திய அரசியலமைப்பு தினத்தை முன்னிட்டு, மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் ச.விசாகன், இ.ஆ.ப., அவர்கள் தலைமையில், அனைத்துத்துறை அரசு அலுவலர்களும் இன்று(26.11.2021) இந்திய அரசியலiமைப்பு தின உறுதிமொழியேற்றனர்.

முன்னதாக மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் அமைக்கப்பட்டிருந்த வேளாண் கண்காட்சியினை மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் ச.விசாகன், இ.ஆ.ப., அவர்கள் பார்வையிட்டார்கள்.

இந்நிகழ்ச்சிகளில், மாவட்ட வருவாய் அலுவலர் திருமதி வே.லதா, கூடுதல் ஆட்சியர்(வளர்ச்சி) திரு.ச.தினேஷ்குமார், இ.ஆ.ப., அவர்கள், இணை இயக்குநர் (வேளாண்மை) திரு.எஸ்.பாண்டித்துரை, துணை இயக்குநர் (வேளாண்மை மாநில திட்டம்) திரு.பி.சுருளியப்பன், துணை இயக்குநர் (தோட்டக்கலை) திரு.ஜெ.பெருமாள்சாமி உள்ளிட்ட தொடர்புடைய அலுவலர்கள் மற்றும் ஏராளமான விவசாயிகள் கலந்துகொண்டார்கள்.

செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.