Close

Agri GDP

Publish Date : 24/12/2021
.

செ.வெ.எண்:-61/2021

நாள்:24.12.2021

விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம், மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் ச.விசாகன், இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது.

திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம், மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் ச.விசாகன், இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் இன்று(24.12.2021) நடைபெற்றது. இக்கூட்டத்தில், தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் பொருளாதார மேம்பாட்டுக் கழகம் சார்பில் நீர்ப்பாசனக்கடன் திட்டத்தின் கீழ் 10 விவசாயிகளுக்கு தலா ரூ. 1.00 இலட்சம் வீதம் ரூ.10.00 இலட்சம் மதிப்பில் கடன் தொகைகளை வழங்கி மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்ததாவது:-

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள் வாயிலாக விவசாய கடன்கள் வழங்கப்பட்டு வருகிறது. மேலும், விவசாயிகளுக்கு கடன்கள் வழங்குவதற்கு தமிழ்நாடு மாவட்ட தொழில்நுட்பக் குழுவினால் 2021-22-ஆம் ஆண்டிற்கு திண்டுக்கல் மாவட்டத்தில் சாகுபடியாகும் பல்வேறு பயிர்களுக்கு, கால்நடை வளர்ப்புக்கு மற்றும் மீன் வளர்ப்புக்கு தேவையான கடன் அளவு, கடன் வழங்கும் காலம் மற்றும் தவணை காலம் ஆகியவை அங்கீகரிக்கப்பட்டுள்ளது. எனவே, அனைத்து விவசாயிகளும் தங்களது பகுதியில் உள்ள தொடக்க வேளாண்மை சுட்டுறவு கடன் சங்கத்தை உரிய ஆவணங்களுடன் அணுகி கடன் பெற்ற பயன்பெறலாம். சங்கத்தில் பயிர்க்கடன் பெறும் விவசாயிகள் உரிய தவணை தேதிக்குள் கடனை திருப்பி செலுத்துவதன் மூலம் வட்டி இல்லாத பயிர்க்கடன் பெற்று பயன் அடையலாம்.

கொரோனா வைரஸ் நோய்த்தொற்று காரணமாக, விவசாயிகள் தங்கள் விளைபொருட்களை சரியான முறையில் சந்தையில் விற்பனை செய்ய ஏதுவாக, பழங்கள் மற்றும் காய்கறிகளை இரயில்களில் 50 சதவீதம் மானியத்துடன் அனுப்ப வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. அரசின் நெறிமுறைகளுக்குட்பட்ட உற்பத்திக் குழுக்களுக்கு அனுமதி வழங்கப்படுகிறது. இதுகுறித்த விபரங்களை www.agricoop.nic.in என்ற இணையதளத்தில் தெரிந்துகொள்ளலாம்.

மேலும், வேளாண் உற்பத்தியாளர்கள் (FPO/FPC) , கூட்டுறவு சங்கங்கள், தனிப்பட்ட விவசாயிகள், விவசாயிகள் குழு, உரிமம் பெற்ற கமிஷன் முகவர், ஏற்றுமதியாளர்கள், சந்தைப்படுத்துபவர்கள், கூட்டுறவு கூட்டமைப்பு, சில்லறை விற்பனையாளர்கள், பழங்கள் மற்றும் காய்கறிகளை பதப்படுத்துபவர்கள், விற்பனையாளர்கள் உட்பட தகுதியான நிறுவனங்களுக்கு அனுமதி வழங்கப்படுகிறது.

அத்தியாவசிய நிபந்தனைகளுக்குட்பட்ட தகுதியான நிறுவனங்கள், அறிவிக்கப்பட்ட உற்பத்p பகுதிகளிலிருந்து(கிளஸ்டர்) பழங்கள் மற்றும் காய்கறிகளை அனுப்ப https://www.sampada-mofpi.gov.in/Login.aspx என்ற இணையதளத்தில் படிவத்தை தரவிறக்கம் செய்து, பூர்த்தி செய்த விண்ணப்பத்துடன் அவர்கள் உரிமைகோரல் படிவத்தில் தேவையான தகவல்களை நிரப்ப வேண்டும். சுயசான்றளிக்கப்பட்ட துணை ஆவணங்களை போர்ட்டலில் பதிவேற்றம் செய்ய வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் ச.விசாகன், இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்தார்கள்.

இந்நிகழ்ச்சிகளில், மாவட்ட வருவாய் அலுவலர் திருமதி வே.லதா, கூடுதல் ஆட்சியர்(வளர்ச்சி) திரு.ச.தினேஷ்குமார், இ.ஆ.ப., அவர்கள், இணை இயக்குநர் (வேளாண்மை) திரு.எஸ்.பாண்டித்துரை, திண்டுக்கல் மண்டல கூட்டுறவு இணைப்பதிவாளர் திரு.கோ.காந்திநாதன், தென்னக ரயில்வே மண்டல வணிக மேலாளர் திரு.டி.எல்.கணேஷ், தலைமை வணிக ஆய்வாளர் திரு.ஏ.ஜெ.ஜெயச்சந்திரன், துணை இயக்குநர் (வேளாண்மை மாநில திட்டம்) திரு.பி.சுருளியப்பன், துணை இயக்குநர் (தோட்டக்கலை) திரு.ஜெ.பெருமாள்சாமி, தமிழ்நாடு ஊரக புத்தாக்கத் திட்டம் திரு.வேல்முருகன் உள்ளிட்ட தொடர்புடைய அலுவலர்கள் மற்றும் ஏராளமான விவசாயிகள் கலந்துகொண்டார்கள்.

செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.