Agri Grievance Day Petition

செ.வெ.எண்: 85/2025
நாள்: 28.02.2025
திண்டுக்கல் மாவட்டம்
விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம், மாவட்ட ஆட்சித்தலைவர் திரு. செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது.
திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம், மாவட்ட ஆட்சித்தலைவர் திரு. செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் இன்று(28.02.2025) நடைபெற்றது.
இக்கூட்டத்தில், விவசாயத்திற்கு தேவையான உரங்கள் தாராளமாக வழங்கிட வேண்டும், நில அளவை செய்து தர பட்டா மற்றும் பட்டா பெயர் மாற்றம் குறித்தும், மழை நீரை சேமித்திட தேவையான ஆக்கிரமைப்புகளை அகற்றி குளங்களை சீரமைக்க வேண்டியும், மின் இணைப்பு கோரிய விண்ணப்பங்களுக்கு பதிவு மூப்பு அடிப்படையில் மின் இணைப்பு வழங்கிட வேண்டும், என்பது உட்பட பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக மனுக்கள் பெறப்பட்டன.
மாவட்ட ஆட்சித்தலைவர் திரு. செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் கோரிக்கை மனுக்களை பெற்று, சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் வழங்கி, உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள உத்தரவிட்டார். இன்றைய கூட்டத்தில் விவசாயிகளிடமிருந்து 101 மனுக்கள் பெறப்பட்டன.
இக்கூட்டத்தில், மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்ததாவது:-
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள், தமிழ்நாட்டில் விவசாயத்தை மேம்படுத்துவதற்காகவும், விவசாயிகளின் நலனுக்காகவும் பல்வேறு திட்டங்களை அறிவித்து தொடர்ந்து செயல்படுத்தி வருகிறார்கள். தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் விவசாயத்திற்காக தனியாக வேளாண் நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டு வருகிறது.
எங்கள் குடும்பம் விவசாய குடும்பம். எனது பெற்றோர் கிராமத்தில் வசித்து வருகிறார்கள். நான் விவசாய குடும்பத்தில் இருந்து கலெக்டர் ஆகிவிட்டேன், அதனால் விவசாயத்தில் உள்ளனவற்றை பற்றி அறிந்திருக்கிறேன்.
காலநிலைகள் மாறினாலும் விவசாயம் மட்டும் மாறாது. ஏனெனில் மனிதர்கள் உயிர்வாழ உணவு அவசியம் தேவை. அந்த உணவை உற்பத்தி செய்வது விவசாயிகள்தான். விவசாயம் என்பது ஒரு தொழில் அல்ல, சேவை. இதைவிட சிறந்த சேவை இல்லை. மனிதர்களின் பசியாற்றக்கூடிய சமூக சேவை ஆகும்.
“உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார்மற்றெல்லாம் தொழுதுண்டு பின்செல் பவர்“ என திருவள்ளுவர் விவசாயம் மற்றும் விவசாயிகளின் முக்கியத்தும் குறித்து கூறியிருக்கிறார்.
விவசாயம் தான் முதன்மையான தொழில். அதை சார்ந்துதான் மற்ற தொழில்கள் அனைத்தும் உள்ளன. விவசாயத் தொழில்களில் தற்போது புதிய அறிவியல் தொழிநுட்பங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.
திண்டுக்கல் மாவட்டம் விவசாயம் சார்ந்த மாவட்டம். ரெட்டியார்சத்திரத்தில் இந்தியா – இஸ்ரேல் காய்கறி மகத்துவ மையம் செயல்படுகிறது. இங்கு நவீன தொழில்நுட்பங்கள் குறித்து விவசாயிகளுக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது. இங்குள்ள விவசாயிகளின் கோரிக்கைகள், தேவைகளை நிறைவேற்றுவதற்கும், குறைகளை களைவதற்கும் உரிய நடவடிக்கைகள் மாவட்ட நிர்வாகம் சார்பில் மேற்கொள்ளப்படும்.
திண்டுக்கல் மாவட்டத்தில் 2025-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் வரை பெய்ய வேண்டிய சராசரி மழையளவு 44.7 மி.மீட்டர். பிப்ரவரி மாதம் வரை பெய்த சராசரி மழையளவு 36.12 மி.மீட்டர், பிப்ரவரி மாவதம் வரை (01.01.2025 முதல் 26.02.2025 வரை) இயல்பான மழையளவைக் காட்டிலும் 8.58 மி.மீட்டர் குறைவு ஆகும்.
திண்டுக்கல் மாவட்டத்தில் 01.04.2024 முதல் 25.02.2025 வரை யூரியா உரம் விநியோகம் 32,337 மெ.டன், இருப்பு 6,988 மெ.டன், டிஏபி விநியோகம் 7,494 மெ.டன், இருப்பு 1,560 மெ.டன், பொட்டாஷ் விநியோகம் 4,859 மெ.டன், இருப்பு 3,458 மெ.டன், சூப்பர் பாஸ்பேட் விநியோகம் 5,335 மெ.டன், இருப்பு 876 மெ.டன், காம்ப்ளக்ஸ் விநியோகம் 34,689 மெ.டன், இருப்பு 5,820 மெ.டன், அம்மோனியம் சல்பேட் மற்றும் அம்மோனியம் குளோரைடு விநியோகம் 421 மெ.டன், இருப்பு 316 மெ.டன், கலப்பு உரங்கள் விநியோகம் 4,132 மெ.டன், இருப்பு 3,157 மெ.டன் என மொத்தம் 89,267 மெ.டன் உரம் விநியோகம் செய்யப்பட்டுள்ளன. 22,175 மெ.டன் உரம் இருப்பு உள்ளன. அதேபோல், விதை உள்ளிட்ட இடுபொருட்கள் தேவையான அளவு இருப்பு உள்ளன.
தமிழக அரசின் திட்டங்களை விவசாயிகள் அறிந்து, நல்ல முறையில் பயன்படுத்தி, வேளாண் தொழிலை மேம்படுத்தி, விவசாய பொருட்களை அதிகளவில் உற்பத்தி செய்து, தங்கள் வாழ்வாதாரங்களை மேம்படுத்திக்கொள்ள வேண்டும், என மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்தார்.
இக்கூட்டத்தில், வேளாண்மை இணை இயக்குநர் திரு.அ.பாண்டியன், இணை இயக்குநர் (கால்நடை பராமரிப்புத்துறை) திரு.எம்.எஸ்.ராஜா, கூட்டுறவு சங்கங்கள் இணைப்பதிவாளர் திரு.சி.குருமூர்த்தி, தோட்டக்கலைத்துறை துணை இயக்குநர் திருமதி காயத்ரி, துணை இயக்குநர்(வேளாண் வணிகம்) திருமதி ரெ.உமா, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர்(வேளாண்மை) திருமதி கி.லீலாவதி உட்பட துறை அலுவலர்கள், விவசாயிகள் பலர் கலந்து கொண்டனர்.
செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.