Close

Agri Grievance Day Petition

Publish Date : 02/06/2025
.

செ.வெ.எண்: 97/2025

நாள்: 30.05.2025

திண்டுக்கல் மாவட்டம்

விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம், மாவட்ட ஆட்சித்தலைவர் திரு. செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது.

திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம், மாவட்ட ஆட்சித்தலைவர் திரு. செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் இன்று(30.05.2025) நடைபெற்றது.

இக்கூட்டத்தில், பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக விவசாயிகள் மனுக்கள் அளித்தனர். மாவட்ட ஆட்சித்தலைவர் திரு. செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் கோரிக்கை மனுக்களை பெற்று, சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் வழங்கி, உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள உத்தரவிட்டார். இன்றைய கூட்டத்தில் 54 மனுக்கள் பெறப்பட்டன.

இக்கூட்டத்தில், தாடிக்கொம்பு அருகே வரட்டாறு தடுப்பணையில் சேதம் ஏற்பட்டுள்ளதை உடனடியாக சீரமைக்க வேண்டும், ஒட்டன்சத்திரம் பகுதியில் உள்ள சின்னக்குளத்தில் குப்பைக் கழிவுகள் கொட்டுவதால் குளம் மாசுபடுகிறது. இதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும், நத்தம், அய்யம்பாளையம் பகுதிகளில் மாம்பழம் அதிகளவில் உற்பத்தி செய்யப்படுகிறது. மாம்பழக்கூழ் தயாரிக்கும் தொழிற்சாலைகள் வாயிலாக மாம்பழங்கள் கொள்முதல் செய்ய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும், குடகனாற்றில் இருந்து தண்ணீரை பிள்ளையார்நத்தம் கண்மாய்க்கு கொண்டு வர நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும், விவசாயத்திற்கு இலவச மின் இணைப்பு வழங்க வேண்டும் என்பது உட்பட பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக மனுக்கள் அளித்தனர்.

இக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்ததாவது:-

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள், தமிழ்நாட்டில் விவசாயத்தை மேம்படுத்துவதற்காகவும், விவசாயிகளின் நலனுக்காகவும் பல்வேறு திட்டங்களை அறிவித்து தொடர்ந்து செயல்படுத்தி வருகிறார்கள்.

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள், “உழவரைத் தேடி வேளாண்மை – உழவர் நலத்துறை“ திட்டத்தை சென்னையிலிருந்து காணொலிக்காட்சி வாயிலாக 29.05.2025 அன்று தொடங்கி வைத்தார். இத்திட்டமானது வேளாண்மை நலத்துறையின் கீழ் இயங்கி வரும் தோட்டக்கலைத் துறை, வேளாண்மை பொறியியல் துறை, வேளாண் விற்பனைத் துறை, பட்டு வளர்ச்சித் துறை, மீன் வளத்துறை வட்டார அலுவலர்கள், சார்புத் துறைகளான கால்நடை பராமரிப்புத் துறை, கூட்டுறவுத் துறை, வேளாண் அறிவியல் நிலைய விஞ்ஞானிகள் ஆகியோர்களால் உழவர்களை அவர்களது வருவாய் கிராமங்களிலேயே நேரடியாக சந்தித்து அவர்களுக்கு தேவையான ஆலோசனை வழங்குவதோடு வேளாண்மையினை அடுத்த நிலைக்கு எடுத்துச் செல்லும் பயிர் சார்ந்த தொழில்நுட்பங்களையும் சார்புத் துறை திட்டங்களை பற்றியும் எடுத்துக்கூறி பயன்படும் வகையில் உள்ளது.

இத்திட்டத்தில் திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள ஒவ்வொரு வட்டாரத்திலும் வட்டார அளவில் வேளாண்மை உதவி இயக்குநர் தலைமையில் ஒரு குழுவும், வட்டார தோட்டக்கலை உதவி இயக்குநர் தலைமையில் ஒரு குழுவும் ஆக மொத்தம் 2 குழுக்கள் அமைக்கப்பட்டு, ஒவ்வொரு மாதமும் இரண்டாம் மற்றும் நான்காம் வெள்ளிக் கிழமைகளில் முகாம் நடத்தப்படும்.

அந்த வகையில், விவசாயிகளின் தேவைகளை நிறைவேற்றவதற்காகவும், அவர்களின் குறைகளை கேட்டறிந்து, தீர்வு காண்பதற்காகவும் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாதந்தோறும் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடத்தப்பட்டு வருகிறது. திண்டுக்கல் மாவட்டத்தில் கடந்த ஏப்ரல் மாதம் நடைபெற்ற விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 110 மனுக்கள் பெறப்பட்டதில் 104 மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டன. 6 மனுக்கள் பரிசீலனையில் உள்ளன.

திண்டுக்கல் மாவட்டத்தில் 2025-ஆம் ஆண்டு மே மாதம் பெய்ய வேண்டிய சராசரி மழையளவு 78.40 மி.மீட்டர், மே மாதத்தில் பெய்த மழையளவு(26.05.2025 வரை) 77.21 மி.மீட்டர், மே-2025 மாதம் வரை பெய்ய வேண்டிய சராசரி மழையளவு 199.80 மி.மீட்டர், 2025-ஆம் ஆண்டு மே (26.05.2025) மாதம் வரை பெய்த மழையளவு 213.58 மி.மீட்டர், மே மாதம் (01.01.2025 முதல் 26.05.2025 வரை) இயல்பான மழையளவைக் காட்டிலும் 13.78 மி.மீட்டர் கூடுதல் ஆகும்.

திண்டுக்கல் மாவட்டத்தில் 30.05.2025 காலை 6.00 மணி நிலவரப்படி, பாலாறு பொருந்தலாறு அணை (மொத்த உயரம் 65 அடி) நீர்மட்டம் 33.39 அடி, பரப்பலாறு அணை (மொத்த உயரம் 90 அடி) நீர்மட்டம் 76.72 அடி, வரதமாநதி அணை (மொத்த உயரம் 66.47 அடி) நீர்மட்டம் 66.47 அடி, குதிரையாறு அணை (மொத்த உயரம் 79.99 அடி) நீர்மட்டம் 56.87 அடி, குடகனாறு அணை (மொத்த உயரம் 27.07 அடி) நீர்மட்டம் 21.52 அடி, நங்காஞ்சியாறு அணை (மொத்த உயரம் 39.37 அடி) நீர்மட்டம் 28.74 அடி என்ற அளவில் நீர்மட்டம் உள்ளது.

திண்டுக்கல் மாவட்டத்தில் 01.04.2024 முதல் 26.05.2025 வரை யூரியா உரம் விநியோகம் 36,242 மெ.டன், இருப்பு 4,778 மெ.டன், டிஏபி விநியோகம் 8,340 மெ.டன், இருப்பு 1,062 மெ.டன், பொட்டாஷ் விநியோகம் 5,374 மெ.டன், இருப்பு 2,639 மெ.டன், சூப்பர் பாஸ்பேட் விநியோகம் 6,232 மெ.டன், இருப்பு 1,090 மெ.டன், காம்ப்ளக்ஸ் விநியோகம் 38,424 மெ.டன், இருப்பு 6,338 மெ.டன், அம்மோனியம் சல்பேட் மற்றும் அம்மோனியம் குளோரைடு விநியோகம் 618 மெ.டன், இருப்பு 320 மெ.டன், கலப்பு உரங்கள் விநியோகம் 4,574 மெ.டன், இருப்பு 6,338 மெ.டன் என மொத்தம் 99,804 மெ.டன் உரம் விநியோகம் செய்யப்பட்டுள்ளன. 22,565 மெ.டன் உரம் இருப்பு உள்ளன. அதேபோல், விதை உள்ளிட்ட இடுபொருட்கள் தேவையான அளவு இருப்பு உள்ளன.

தமிழக அரசின் திட்டங்களை விவசாயிகள் அறிந்து, நல்ல முறையில் பயன்படுத்தி, வேளாண் தொழிலை மேம்படுத்தி, விவசாய பொருட்களை அதிகளவில் உற்பத்தி செய்து, தங்கள் வாழ்வாதாரங்களை மேம்படுத்திக்கொள்ள வேண்டும், என மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்தார்.

இக்கூட்டத்தில், திண்டுக்கல் மாவட்ட வன அலுவலர் திரு.பு.மு.ராஜ்குமார், இ.வ.ப., கொடைக்கானல் வன அலுவலர் திரு.யோகேஸ்குமார் மீனா, இ.வ.ப., மாவட்ட வருவாய் அலுவலர் திருமதி இரா.ஜெயபாரதி, கூட்டுறவு சங்கங்கள் இணைப்பதிவாளர் திரு.சி.குருமூர்த்தி, இணை இயக்குநர்(வேளாண்மைத்துறை) திரு.அ.பாண்டியன், துணை இயக்குநர்(வேளாண் வணிகம்) திருமதி ரெ.உமா, செயற்பொறியாளர் (நங்காஞ்சியாறு) திரு.பாலமுருகன், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர்(வேளாண்மை) திரு.நாகேந்திரன் உட்பட துறை அலுவலர்கள், விவசாயிகள் பலர் கலந்து கொண்டனர்.

செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.

.

.