Close

Agri Grievance Day Petition

Publish Date : 21/06/2025
.

செ.வெ.எண்: 75/2025

நாள்: 20.06.2025

திண்டுக்கல் மாவட்டம்

விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம், மாவட்ட ஆட்சித்தலைவர் திரு. செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது.

திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம், மாவட்ட ஆட்சித்தலைவர் திரு. செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் இன்று(20.06.2025) நடைபெற்றது.

இன்றையக் கூட்டத்தில், கன்னிவாடி அரசு தொடக்கப்பள்ளி 3-ஆம் வகுப்பு மாணவன் சித்தார்த் பாண்டியன், இயற்கை விவசாயி நம்மாழ்வார் வேடமணிந்து, இயற்கை விவசாயம் குறித்து பேசி விவசாயிகளிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தினார். மாணவர் சித்தார்த் பாண்டியனுக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் பரிசு வழங்கி பாராட்டினார்.

இக்கூட்டத்தில், அக்கரைப்பட்டி தாதன்குளம், கூவனுாத்து செங்குளம், குஜிலியம்பாறை சின்னக்குளம் ஆகியற்றை துார்வாரி மதகுகளை சீரமைக்க வேண்டும், பாப்பன்குளம் மற்றும் தீரன்குளம் ஆகியற்றிலிருந்து வண்டல் மண் எடுக்க விவசாயிகளுக்கு அனுமதி அளிக்க வேண்டும். மா சாகுபடி விவசாயிகளுக்கு மானியம் வழங்க வேண்டும். ஆழ்துளை கிணறு அமைத்துள்ள விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு வழங்க வேண்டும். விவசாயத்திற்கான மும்முனை மின் விநியோகத்தை பகல் நேரத்தில் வழங்கிட வேண்டும். விளாம்பட்டி மட்டப்பாறையில் நேரடி நெல் கொள்முதல் நிலையம் கட்டுமான பணிகள் முடிவடைந்துள்ள நிலையில் மின் இணைப்பு வழங்கி விரைவில் செயல்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என்பது உட்பட பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக 94 மனுக்கள் அளித்தனர். மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் கோரிக்கை மனுக்களை பெற்று, சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் வழங்கி, உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள உத்தரவிட்டார்.

இக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்ததாவது:-

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள், தமிழ்நாட்டில் விவசாயத்தை மேம்படுத்துவதற்காகவும், விவசாயிகளின் நலனுக்காகவும் பல்வேறு திட்டங்களை அறிவித்து தொடர்ந்து செயல்படுத்தி வருகிறார்கள்.

அந்த வகையில், விவசாயிகளின் தேவைகளை நிறைவேற்றவதற்காகவும், அவர்களின் குறைகளை கேட்டறிந்து, தீர்வு காண்பதற்காகவும் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாதந்தோறும் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடத்தப்பட்டு வருகிறது. திண்டுக்கல் மாவட்டத்தில் கடந்த மே மாதம் நடைபெற்ற விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 53 மனுக்கள் பெறப்பட்டதில் 39 மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டன. 14 மனுக்கள் பரிசீலனையில் உள்ளன.

திண்டுக்கல் மாவட்டத்தில் 2025-ஆம் ஆண்டு ஜுன் மாதம் பெய்ய வேண்டிய சராசரி மழையளவு 32.30 மி.மீட்டர், ஜுன் மாதத்தில் பெய்த மழையளவு (17.06.2025 வரை) 3.87 மி.மீட்டர், ஜுன்-2025 மாதம் வரை பெய்ய வேண்டிய சராசரி மழையளவு 232.10 மி.மீட்டர், 2025-ஆம் ஆண்டு ஜுன் (17.06.2025) மாதம் வரை பெய்த மழையளவு 222.74 மி.மீட்டர், ஜுன் மாதம் (01.01.2025 முதல் 17.06.2025 வரை) இயல்பான மழையளவைக் காட்டிலும் 9.36 மி.மீட்டர் குறைவு ஆகும்.

திண்டுக்கல் மாவட்டத்தில் 20.06.2025 காலை 6.00 மணி நிலவரப்படி, பாலாறு பொருந்தலாறு அணை (மொத்த உயரம் 65 அடி) நீர்மட்டம் 32.38 அடி, பரப்பலாறு அணை (மொத்த உயரம் 90 அடி) நீர்மட்டம் 75.70 அடி, வரதமாநதி அணை (மொத்த உயரம் 66.47 அடி) நீர்மட்டம் 66.47 அடி, குதிரையாறு அணை (மொத்த உயரம் 79.99 அடி) நீர்மட்டம் 56.61 அடி, குடகனாறு அணை (மொத்த உயரம் 27.07 அடி) நீர்மட்டம் 20.08 அடி, நங்காஞ்சியாறு அணை (மொத்த உயரம் 39.37 அடி) நீர்மட்டம் 28.28 அடி, மருதாநதி அணை(மொத்த உயரம் 74 அடி) நீர்மட்டம் 54.25 அடி என்ற அளவில் நீர்மட்டம் உள்ளது.

திண்டுக்கல் மாவட்டத்தில் 01.04.2025 முதல் 17.06.2025 வரை யூரியா உரம் விநியோகம் 440 மெ.டன், இருப்பு 4423.222 மெ.டன், டிஏபி விநியோகம் 220 மெ.டன், இருப்பு 1013.005 மெ.டன், பொட்டாஷ் விநியோகம் 198 மெ.டன், இருப்பு 1971.450 மெ.டன், சூப்பர் பாஸ்பேட் விநியோகம் 324 மெ.டன், இருப்பு 1191.585 மெ.டன், காம்ப்ளக்ஸ் விநியோகம் 400 மெ.டன், இருப்பு 5646.760 மெ.டன், அம்மோனியம் சல்பேட் மற்றும் அம்மோனியம் குளோரைடு விநியோகம் 102 மெ.டன், இருப்பு 94.410 மெ.டன், கலப்பு உரங்கள் விநியோகம் 54 மெ.டன், இருப்பு 94.410 மெ.டன் என மொத்தம் 1738 மெ.டன் உரம் விநியோகம் செய்யப்பட்டுள்ளன. 14,434.842 மெ.டன் உரம் இருப்பு உள்ளன. அதேபோல், விதை உள்ளிட்ட இடுபொருட்கள் தேவையான அளவு இருப்பு உள்ளன.

தமிழ்நாடு அரசின் திட்டங்களை விவசாயிகள் அறிந்து, நல்ல முறையில் பயன்படுத்தி, வேளாண் தொழிலை மேம்படுத்தி, விவசாய பொருட்களை அதிகளவில் உற்பத்தி செய்து, தங்கள் வாழ்வாதாரங்களை மேம்படுத்திக்கொள்ள வேண்டும், என மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்தார்.

இன்றையக் கூட்டத்தில், தமிழ்நாடு உணவு பதப்படுத்துதல் மற்றும் வேளாண் ஏற்றுமதி ஊக்குவிப்பு கழகம்(TNAPEX) திண்டுக்கல் மாவட்ட ஒருங்கிணைப்ாபளர் திரு.தீபன்சக்கரவர்த்தி வேளாண்மை பொருட்களை ஏற்றுமதி செய்தல் மற்றும் மதிப்புக்கூட்டப்பட்ட பொருட்களாக மாற்றுதல் குறித்து விவசாயிகளுக்கு விளக்கம் அளித்தார்.

இக்கூட்டத்தில், திண்டுக்கல் மாவட்ட வன அலுவலர் திரு.பு.மு.ராஜ்குமார், இ.வ.ப., கொடைக்கானல் வன அலுவலர் திரு.யோகேஸ்குமார் மீனா, இ.வ.ப., உதவி ஆட்சியர்(பயிற்சி) மரு.ச.வினோதினி பார்த்திபன், இ.ஆ.ப., கூட்டுறவு சங்கங்கள் இணைப்பதிவாளர் திரு.சி.குருமூர்த்தி, இணை இயக்குநர்(வேளாண்மைத்துறை) திரு.அ.பாண்டியன், தோட்டக்கலைத்துறை துணை இயக்குநர் திருமதி காயத்ரி, செயற்பொறியாளர் (நங்காஞ்சியாறு) திரு.பாலமுருகன், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர்(வேளாண்மை) திரு.நாகேந்திரன் உட்பட துறை அலுவலர்கள், விவசாயிகள் பலர் கலந்து கொண்டனர்.

செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.

.

.

.

.