Agri Grievance Day Petition Meeting (28/10/2021)

செ.வெ.எண்:-62/2021
நாள்:-28.10.2021
விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் ச.விசாகன், இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது.
திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம், மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் ச.விசாகன், இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் இன்று(28.10.2021) நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்ததாவது:-
தமிழகம் முழுவதும் கிராமங்களில் வசிக்கும் விவசாயிகளின் விபரங்களை கணக்கெடுத்து மத்திய, மாநில அரசுகளின் விவசாயம் சார்ந்த திட்டங்களை பயன்படுத்தி கொள்வதற்காக, கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. இதற்காக ஒவ்வொரு ஆண்டும் 2,500 கிராமங்கள் தேர்வு செய்யப்பட்டு, அங்குள்ள விவசாயிகளின் விபரங்களை பெற்று, அந்த கிராமங்களில் விவசாயத்திற்காக மத்திய, மாநில அரசுகளில் திட்டங்கள் செயல்படுத்தப்பட உள்ளன. 5 ஆண்டுகளின் முடிவில் அனைத்து கிராம விவசாயிகளும் மத்திய, மாநில அரசுகளில் திட்டங்களால் பயன் அடைய வேண்டும் என்பதே இத்திட்டத்தின் நோக்கமாகும்.
மக்காச்சோளப் பயிரில் மகசூல் இழப்பை ஏற்படுத்தும் தாய் அந்துப்பூச்சி இலையின் அடிப்பகுதியில் 1000 முதல் 1,500 வரை முட்டைகளை இடுகிறது. முட்டையிலிருந்து வெளிவரும் புழுக்கள் முதுலில் இலையின் அடிப்பகுதியில் சுரண்டி சேதப்படுத்தும். இதனால் பயிர்கள் பச்சையம் இறந்து, இலைகள் வெண்மையாக காணப்படும். இப்புழுக்கள் ஒரு செடியிலிருந்து அடுத்த செடிக்கு பரவும். இப்புழுக்கணின் ஆயுள்காலம் 30 நாட்கள் ஆகும்.
இதனால் ஒரே வகையான பயிர்களை சாகுபடி செய்யலாமல் பயிர் சுழற்சி முறையை கையாள வேண்டும். பயிர் சாகுபடிக்கு பின்னர் இனக்கவர்ச்சி பொறிகளை ஹெக்டேருக்கு 12 என்ற எண்ணிக்கையில் அமைத்து, ஆண் அந்துப்பூச்சிகளை கவர்ந்து அழிக்கலாம். சூரியகாந்தி, எள், தட்டைப்பயறு போன்ற பயிர்களை வரப்பு பயிர்களாகவும், பயிர் வகை பயிரான உழுந்தை ஊடுபயிராகவும் விதைக்க வேண்டும். 20 முதல் 25 நாட்கள் உள்ள பயிருக்கு உயிரியல் பூஞ்சான் கொல்லியான பிவேரியாபேசியானா 50 கிராம், வேம்பு சார்ந்த அசாடிராக்டின் 20 மில்லியை 10 லிட்டர் தண்ணீரில் கலந்து, முதல் தெளிப்பு மேற்கொள்ள வேண்டும். 40 முதல் 45 நாட்கள் உள்ள பயிருக்கு குளோரான்டிரானிவிடிரோல் 4 மிலிலியை 10 லிட்டர் தண்ணீரில் கலந்து, பயிரின் குறுக்கு பகுதியில் தெளிக்க வேண்டும். விதைப்பிற்கு முன் பிவேரியாபேசியானா என்ற விதை நேர்த்தி மருந்தை ஒரு கிலோ விதைக்கு 10 கிராம் வீதம் கலந்து விதைக்க வேண்டும். இவ்வாறு மக்காச்சோளப் பயிர்களை தாக்கும் அமெரிக்கன் படைப்புழுக்களை, வேளாண்துறை அலுவலர்களின் முறையான ஆலோசனைகளை பின்பற்றி அழிக்கலாம்.
நடப்பு சம்பா 2021 பருவதத்திற்கான நெற்பயிரை காப்பீடு செய்ய 1 ஏக்கருக்கு ரூ.446.62, மற்றும் மக்காச்சோளப்பயிரை காப்பீடு செய்ய 1 ஏக்கருக்கு பிரீமியம் ரூ.385.50 ஆகும். பிரீமியம் செலுத்த கடைசி நாள் நெல் பயிருக்கு 15.12.2021 மற்றும் மக்காச்சோளத்திற்கு 15.11.2021 தேதி ஆகும். காப்பீடு நிறுவனம் அக்ரிகல்சுரல் இன்சூரன்ஸ் கம்பெனி லிட், ஆத்தூர் வட்டாரத்தில் நெற்பயிருக்கு ஆத்தூர், அய்யம்பாளையம் மற்றும் சின்னாளப்பட்டி குறுவட்டத்தின்கீழ் வரும் அனைத்து வருவாய் கிராமங்களிலும், மக்காச்சோளத்திற்கு ஆத்தூர் குறுவட்டத்தின் கீழ் வரும் அனைத்து வருவாய் கிராமங்களிலும் இத்திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. உடனே உங்கள் அருகாமையில் உள்ள பொது சேவை மையங்கள் அல்லது தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள் அல்லது வர்த்தக வங்கிகளை அணுகி பிரதம மந்திரியின் புதுப்பிக்கப்பட்ட பயிர் காப்பீடு திட்டத்தில் இணைந்து பயன்பெறலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் ச.விசாகன், இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்தார்கள்.
இக்கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் திருமதி வே.லதா அவர்கள், கூடுதல் ஆட்சியர்(வளர்ச்சி) திரு.ச.தினேஷ்குமார், இ.ஆ.ப., அவர்கள், இணை இயக்குநர் (வேளாண்மை) திரு.எஸ்.பாண்டித்துரை, துணை இயக்குநர் (வேளாண்மை மாநில திட்டம்) திரு.பி.சுருளியப்பன், துணை இயக்குநர் (தோட்டக்கலை) திரு.ஜெ.பெருமாள்சாமி உள்ளிட்ட தொடர்புடைய அலுவலர்கள் மற்றும் ஏராளமான விவசாயிகள் கலந்துகொண்டார்கள்.
செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்