Close

Agri Machinery Mela

Publish Date : 18/06/2025
.

செ.வெ.எண்:-58/2025

நாள்:-17.06.2025

திண்டுக்கல் மாவட்டம்

வேளாண் இயந்திரங்கள் மற்றும் கருவிகளின் இயக்கம் மற்றும் பராமரிப்பு, விழிப்புணர்வு முகாமை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் தொடங்கி வைத்து பார்வையிட்டார்.

திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில், வேளாண்மைப் பொறியியல் துறை சார்பில் வேளாண் இயந்திரங்கள் மற்றும் கருவிகளின் இயக்கம், பராமரிப்பு குறித்த விழிப்புணர்வு முகாமை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் இன்று(17.06.2025) தொடங்கி வைத்து பார்வையிட்டார்.

இம்முகாமில் வேளாண் இயந்திரங்கள் மற்றும் கருவிகள் இயக்குதல், பராமரித்தல், செய்யக் கூடியது, செய்யக் கூடாதது, பழுதுகளைக் கண்டறிதல், உதிரிப் பாகங்கள் குறித்த தெளிவுரை, மசகு எண்ணெய் மற்றும் உயவுப் பொருட்கள் பயன்பாடு பற்றி விவசாயிகளுக்கு தெளிவுரை வழங்கப்பட்டது.

வேளாண்மைப் பொறியியல் துறையின் வேளாண் இயந்திரங்களான சோளம் அறுவடை இயந்திரம், துளையிடும் கருவி, விதையிடும் கருவி, தென்னை மட்டை தூளாக்கும் கருவி, இறகு வார்ப்புக் கலப்பை மற்றும் தேங்காய் பறிக்கும் இயந்திரம் குறித்த செயல்விளக்கம் அளிக்கப்பட்டது.

டாம்கோ(Tomco) நிறுவனத்தின் புதிய தொழில்நுட்பமான Mini Excavator இயந்திரத்தை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் இயக்கி செயல்திறன் குறித்து கேட்டறிந்தார். மேலும், தனியார் இயந்திர நிறுவனங்களான Mahindra & Mahindra Tractors, Swaraj Tractors, John Deere Tractors, Tafe மூலம் விவசாயிகளின் உழுவை இயந்திரங்களுக்கு பராமரிப்பு மேற்கொள்ளப்பட்டது. மேலும் VST Power Tillers, Agrimat Power Weeder, Xylem Power Weeder and Southern agro power weeder ஆகிய இயந்திரங்கள் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தன.

இந்தக்கண்காட்சியை ஏராளமான விவசாயிகள் பார்வையிட்டு தகவல்களை அறிந்துகொண்டனர். இதுகுறித்து பெரியகோட்டை விவசாயி திரு.பகவதி தெரிவித்ததாவது:-

வேளாண் பொறியியல் துறை சார்பில் திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற வேளாண் இயந்திரங்கள் மற்றும் கருவிகளின் இயக்கம், பராமரிப்பு குறித்த விழிப்புணர்வு முகாமில் விவசாய பயனாளிகள் ஏராளமானோர் கலந்துகொண்டனர். நான் இதுபோன்ற வேளாண் கண்காட்சிகள் எங்கு நடந்தாலும் சென்று பார்வையிடுவேன். அங்குள்ள புதிய தொழில்நுட்பங்கள், பயிர் சாகுபடி முறைகளை அறிந்து செயல்படுத்துவேன்.

இந்த முகாமில் ஏராளமான வேளாண் கருவிகள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. உழவு இயந்திரம், விதைத்தெளிப்பு கருவி, துளையிடும் கருவி என ஏராளமான கருவிகள் உள்ளன. அவற்றின் செயல்முறை விளக்கத்தையும் நாங்கள் அறிந்துகொண்டோம். சிறிய இயந்திரங்கள் மற்றும் கருவிகளை பராமரித்தல் குறித்தும் அறிந்துகொண்டோம். உழவுக்கு காளைகள் மற்றும் விவசாய பணிக்கான ஆட்கள் பற்றாக்குறையை சமாளிக்க வேளாண் கருவிகள் பெரிதும் பயனுள்ளதாக உள்ளன.

பெரிய அளவிலான வேளாண் இயந்திரங்களை பயன்படுத்துவதற்கு விவசாயிகளுக்கு அரசு சார்பில் மானிய விலையில் வாடகைக்கு விடப்படுகிறது. இதுதவிர வேளாண்கருவிகளை வாங்கிட விவசாயிகளுக்கு மானியம் வழங்கப்படுகிறது. வேளாண் கருவிகளை பயன்படுத்தி உணவு உற்பத்தியை அதிகரிக்க விவசாயிகளும் தயாராக உள்ளனர். விவசாயத்தையும், விவசாயிகளின் வாழ்வாதாரத்தையும் பல்வேறு திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி வரும் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கு, விவசாயிகள் சார்பில் நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறேன், என தெரிவித்தார்.

முகாமில், வேளாண்மை இணை இயக்குநர் திரு.அ.பாண்டியன், செயற்பொறியாளர்(வே.பொ) திரு.ம.சவுந்தரராஜன், தோட்டக்கலை துணை இயக்குநர் திருமதி பா.காயத்ரி, வேளாண்மை விற்பனை மற்றும் வணிகம் துணை இயக்குநர் திருமதி ரெ.உமா, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர்(வேளாண்மை) திரு.நாகேந்திரன், உதவி செயற்பொறியாளர்கள்(வே.பொ) திண்டுக்கல் திரு.த.கண்ணதேவன், பழனி திரு.அ.குமணவேல், கொடைக்கானல் திரு.கணேசன், வேளாண்மைப் பொறியியல் துறையின் உதவிப் பொறியாளர்கள், விவசாய பயனாளிகள், பள்ளி மற்றும் கல்லுாரிகளில் விவசாயக் கல்வி பயிலும் மாணவ, மாணவிகள், தொடக்க வேளாண்மைக் கூட்டுறவு கடன் சங்கங்களின் செயலாளர்கள் என 300-க்கும் அதிகமானோர் கலந்துகொண்டனர்.

செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.

.

.

.

.

.

.

.

.