Close

Agricultural GDP

Publish Date : 25/03/2022
.

செ.வெ.எண்:-47/2022

நாள்:25.03.2022

திண்டுக்கல் மாவட்டம்

விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம், மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் ச.விசாகன், இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது.

திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம், மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் ச.விசாகன், இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் இன்று(25.03.2022) நடைபெற்றது. இக்கூட்டத்தில், மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் பேசியதாவது:-

விவசாயிகளின் நலனுக்காக தமிழக அரசு பல்வேறு திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி வருகிறது. அவற்றை விவசாயிகள் அறிந்து நல்லமுறையில் பயன்படுத்தி வேளாண் தொழிலை மேம்படுத்தி, விவசாய பொருட்களை அதிகளவில் உற்பத்தி செய்தி, தங்கள் வாழ்வாதாரங்களை மேம்படுத்திக் கொள்ள வேண்டும்

திண்டுக்கல் மாவட்டத்தில் ஆத்தூர் மற்றும் நிலக்கோட்டை ஆகிய இடங்களில் அரசு நெல் கொள்முதல் நிலையங்கள் செயல்பட்டு வருகின்றன். இந்த நெல் கொள்முதல் நிலையங்களை விவசாயிகள் நல்ல முறையில் பயன்படுத்திக்கொள்ள வேண்டும். அதேபோல் பயிர்க்காப்பீடு திட்டங்களில் அனைத்து விவசாயிகளும் உரிய நேரத்தில் இணைந்து பயன்பெற வேண்டும். தரிசு நிலங்களில் உளுந்து, பாசிப்பயறு போன்ற பயறுவகைப் பயிர்களை சாகுபடி செய்து விவசாயிகள் பயன்பெறலாம். மேலும், விவசாய விளைபொருட்களை மதிப்புக்கூட்டப்பட்ட பொருட்களாக மாற்றி விற்பனை செய்வதன் மூலம் விவசாயிகள் அதிக வருமானம் ஈட்ட முடியும் என மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் ச.விசாகன், இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்தார்.

இக்கூட்டத்தில் விவசாயிகளிடமிருந்து பட்டா பெயர் மாற்றம், தனிப்பட்டா வேண்டுதல், சாலை வசதி வேண்டுதல், விவசாய கடன் வேண்டுதல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுக்களை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் பெற்றுக்கொண்டார். மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் கோரிக்கை மனுக்களை சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் வழங்கி உடன் நடவடிக்கை மேற்கொண்டு தீர்வு காண வேண்டுமென உத்தரவிட்டார்.

இக்கூட்டத்தில், தமிழ்நாடு ஊரக புத்தாக்கத் திட்டம் சார்பில் தமிழ்நாடு வாழ்ந்து காட்டுவோம் திட்டத்தில் திடக்கழிவு மேலாண்மை உற்பத்திக்குழு, வேளாண் உலர் பொருட்கள் உற்பத்திக்குழு, விபூதி உற்பத்திக்குழு, விவசாய உற்பத்தி மகளிர் குழு, விவசாய உற்பத்தியாளர் குழு என 22 விவசாய குழுக்களுக்கு மொத்தம் ரூ.16 இலட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் ச.விசாகன், இ.ஆ.ப., அவர்கள் வழங்கினார்.

முன்னதாக வேளாண்மை உற்பத்தி மற்றும் குறை களையும் குழுக் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் ச.விசாகன், இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் வேளாண்மை பொருட்கள் உற்பத்தியை அதிகரித்தல் மற்றும் விவசாயம், விவசாயிகளின் குறைகளை தீர்ப்பது தொடர்பாக துறை அலுவலர்களுடன் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் ஆலோசனை மேற்கொண்டார்கள்.

இந்நிகழ்ச்சிகளில், கூடுதல் ஆட்சியர்(வளர்ச்சி) திரு.ச.தினேஷ்குமார், இ.ஆ.ப., அவர்கள், மாவட்ட வருவாய் அலுவலர் திருமதி வே.லதா, இணை இயக்குநர் (வேளாண்மை) திரு.எஸ்.பாண்டித்துரை, திண்டுக்கல் மண்டல கூட்டுறவு இணைப்பதிவாளர் திரு.கோ.காந்திநாதன், துணை இயக்குநர் (வேளாண்மை மாநில திட்டம்) திரு.பி.சுருளியப்பன், துணை இயக்குநர் (தோட்டக்கலை) திரு.ஜெ.பெருமாள்சாமி, தமிழ்நாடு ஊரக புத்தாக்கத் திட்டம் திரு.வேல்முருகன், செயற்பொறியாளர் (வேளாண் பொறியியல்துறை) திரு.கிருஷ்ணகுமார், செயற்பொறியாளர்(பொதுப்பணித்துறை) திரு.கோபி, வேளாண்மை துணை இயக்குநர்(விதை ஆய்வு) திரு.மாயக்கிருஷ்ணன் உள்ளிட்ட தொடர்புடைய அலுவலர்கள் மற்றும் விவசாயிகள், பல்வேறு விவசாய சங்கங்களின் தலைவர்கள் கலந்துகொண்டனர்.

செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.