Agriculture Engineering- Solar Pump
செ.வெ.எண்:-59/2022
நாள்: 20.06.2022
திண்டுக்கல் மாவட்டம்
மானிய விலையில் சூரிய சக்தி பம்பு செட்டுகள் அமைத்திட விவசாயிகளிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் ச.விசாகன், இ.ஆ.ப., அவர்கள் தகவல்.
தமிழக அரசு, வேளாண்மைப் பொறியியல் துறையின் மூலம், முதலமைச்சரின் சூரிய சக்தி பம்பு செட்டுகள் திட்டத்தின் கீழ் மின் இணைப்பு இல்லாத பாசன ஆதாரமுள்ள விவசாயிகளுக்கு 10 குதிரை திறன் வரையிலான மின் கட்டமைப்புடன் சாராத தனித்து சூரிய சக்தியால் இயங்கும் பம்பு செட்டுகள் 70 சதவீத மானியத்தில் அமைக்கும் திட்டம் (40 சதவீதம் தமிழக அரசின் மானியம் மற்றும் 30 சதவீதம் ஒன்றிய அரசின் மானியம்) 2021 – 2022 ஆம் ஆண்டு முதல் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
இத்திட்டத்தின் கீழ் முதல் தவணையாக 2000 சூரிய சக்தியால் இயங்கும் பம்பு செட்டுகள் ரூ.43.556 கோடி மானியத்தில் அமைக்க நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
புதிதாக ஏற்படுத்தப்படும் பாசனத்திற்கான கிணறுகள் நில நீர் பாதுகாப்பான குறுவட்ட பகுதிகளில் (Safe Firka) இருத்தல் வேண்டும். இதர பகுதிகளில் ஏற்கனவே உள்ள பாசன ஆதாரத்தில் டீசல் என்ஜின் பயன்படுத்தி வரும் பட்சத்தில் அதற்கு மாற்றாக இத்திட்டத்தின் கீழ் சூரிய சக்தியால் இயங்கும் பம்பு செட்டுகளை அமைத்துக் கொள்ளலாம்.
தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் மூலம் இலவச மின் இணைப்புக்கோரி ஏற்கனவே விண்ணப்பித்துள்ள விவசாயிகள் மூதுரிமையை துறக்க வேண்டிய அவசியமில்லை.
இத்திட்டத்தின் கீழ் சூரிய சக்தி பம்பு செட்டுகளை அமைக்க விரும்பும் விவசாயிகள், இலவச மின் இணைப்பு கோரி தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தில் பதிவு செய்ய வேண்டிய அவசியமில்லை.
மேலும் பாசன நீரினை சிக்கனமாக பயன்படுத்தும் பொருட்டு, இத்திட்டத்தின் கீழ் சூரிய சக்தியால் இயங்கும் பம்பு செட்டுகளை அமைத்திட, வேளாண்மைப் பொறியியல் துறை உபகோட்டங்களில் விண்ணப்பம் அளிக்கும் போது சூரிய சக்தியால் இயங்கும் பம்பு செட்டுகளை நுண்ணீர் பாசன அமைப்புடன் இணைத்திட உறுதிமொழி அளித்திட வேண்டும்.
வேளாண் பணிகளுக்கு ஆற்றுப்படுகை மற்றும் நீர் நிலைகளில் இருந்து 200 மீட்டருக்குள், கான்கீரிட் காரை இடப்படாத கால்வாய்களிலிருந்து 50 மீட்டருக்குள், நிலத்தடி நீரை இறைப்பதற்கு வேண்டுமானால் பொதுப்பணித்துறையிடமிருந்து தடையில்லாச் சான்று பெற வேண்டும். மேற்படி தொலைவு வரம்பிற்குள் உள்ள நீர் ஆதாரங்களுக்கு சூரிய சக்தியால் இயங்கும் பம்பு செட்டுகளை அமைத்திட விண்ணப்பிக்கும் பொழுது பொதுப்பணித்துறையின் தடையில்லாச் சான்றினை இணைத்திட வேண்டும்.
மேலும் இத்திட்டத்தின் கீழ் ஆதிதிராவிட மற்றும் பழங்குடியின பிரிவினைச் சார்ந்த சிறு மற்றும் குறு விவசாயிகளுக்கு கூடுதலாக 20 சதவீத மானியம் வழங்கப்படுகிறது.
மானிய விலையில், தனித்து சூரிய சக்தியால் இயங்கும் பம்பு செட்டுகள் அமைக்கவிருப்பமுள்ள விவசாயிகள் பழனி, உதவிசெயற்பொறியாளர் (வே.பொ) – 9842129504, திண்டுக்கல், உதவிசெயற்பொறியாளர் (வே.பொ) – 9600686500 மற்றும் கொடைக்கானல், உதவிசெயற்பொறியாளர் (வே.பொ) – 8248168906 அலுவலர்களை தொடர்பு கொண்டு பயன்பெறுமாறு திண்டுக்கல், மாவட்ட ஆட்சியர் அவர்கள் கேட்டுக் கொண்டார். மேலும், விவரத்தை pmkusum.tn.gov.in என்ற இணையதளத்திலிருந்த அறிந்து கொள்ளலாம் என திண்டுக்கல் மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் ச.விசாகன், இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்.
செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.