Agriculture Grievance Day Petition

செ.வெ.எண்:-46/2023
நாள்: 28.04.2023
திண்டுக்கல் மாவட்ட விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம், மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் ச.விசாகன், இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது.
திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம், மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் ச.விசாகன், இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் இன்று(28.04.2023) நடைபெற்றது.
இக்கூட்டத்தில், விவசாயிகள் மற்றும் விவசாய சங்க தலைவர்களின் பொதுவான கோரிக்கைகளை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களிடம் தெரிவித்தனர். மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் கோரிக்கை மனுக்களை பெற்று, சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் வழங்கி, உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள உத்தரவிட்டார். இன்றைய கூட்டத்தில் 65 மனுக்கள் பெறப்பட்டன.
இக்கூட்டத்தில், மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்ததாவது:-
விவசாயிகளின் நலனுக்காக தமிழக அரசு பல்வேறு திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி வருகிறது. திண்டுக்கல் மாவட்டத்தில் விவசாயிகளின் கோரிக்கை மனுக்களில் சப்டிவிசன் செய்யும் பணிகள் விரைந்து மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கடந்த ஓராண்டில் 22,000 மனுக்கள் நிலுவையிலிருந்து 11,000 மனுக்களாக குறைக்கப்பட்டுள்ளது. டிசம்பர் 2022 வரை உள்ள மனுக்களின் மீது வரும் மே மாதம் 15ம் தேதிக்குள் சப் டிவிசன் பணிகள் முடிக்கப்படவுள்ளது. நமது மாவட்டத்தில் இதுவரை 54 நில அளவையர்கள் உள்ளனர். தற்போது 30 நபர்கள் கூடுதலாக நியமிக்கப்படவுள்ளனர். எனவே. வருங்காலங்களில் நில அளவை பணிகள் விரைந்து முடிக்கப்படும். வடமதுரை பகுதியில் உள்ள சிங்கமுத்தான் குளம் பகுதியில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுக்கப்படும்.
தமிழக அரசின் திட்டங்களை விவசாயிகள் அறிந்து நல்ல முறையில் பயன்படுத்தி, வேளாண் தொழிலை மேம்படுத்தி, விவசாய பொருட்களை அதிகளவில் உற்பத்தி செய்து, தங்கள் வாழ்வாதாரங்களை மேம்படுத்திக் கொள்ள வேண்டும். விவசாயிகள் தங்கள் பகுதிகளில் விளைவிக்கக்கூடிய பொருட்கள் மதிப்புக்கூட்டுப் பொருட்களாக மாற்றிட தொழில்நுட்பப் பயிற்சிகளைப் பெற்று அவைகளை செயல்படுத்த வேண்டும். திண்டுக்கல் மாவட்டத்தில் விவசாய பணிகளுக்கு தேவையான அளவு உரங்கள் இருப்பு உள்ளன. எனவே, உரம் தேவைப்படும் பகுதிகளுக்கு தேவையான உரங்கள் விநியோகிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
திண்டுக்கல் மாவட்டத்தில் 9 இடங்களில் நெல் கொள்முதல் நிலையங்களுக்கு மேற்கூரையுடன் கூடிய புதிய கட்டடம் கட்டுவதற்கு மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் அடிக்கல் நாட்டி பணிகளை துவக்கி வைத்துள்ளார்கள். விரைவில் நெல் கொள்முதல் நிலையங்களுக்கு கட்டடங்கள் கட்டி முடிக்கப்படும். விவசாயிகளின் குறைகளை தீர்க்கும் வகையில் கோட்டாட்சியர் அளவில் குறைதீர்க்கும் கூட்டம் நடத்திட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு மாதமும் முதல் வாரத்தில் திண்டுக்கல் கோட்டாட்சியர் அலுவலகத்திலும், இரண்டாவது வாரத்தில் கொடைக்கானல் கோட்டாட்சியர் அலுவலகத்திலும், மூன்றாவது வாரத்தில் பழனி கோட்டாட்சியர் அலுவலகத்திலும் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் காலை 11 மணி முதல் 12 மணி வரை நடைபெறும். இக்கூட்டத்தில் வேளாண்மை தொடர்புடைய கோட்ட அளவிலான அலுவலர்கள் பங்கேற்று விவசாயிகளிடம் பெறப்பட்ட மனுக்களுக்கு தீர்வு காண உள்ளார்கள் என மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்தார்.
இக்கூட்டத்தில், சுற்றுச்சூழல் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் வேடசந்துார் விவசாயி திரு.இராமசாமி அவர்கள் வழங்கிய மஞ்சள் பைகள், பங்கேற்ற விவசாயிகள் மற்றும் அலுவலர்களுக்கு, வழங்கப்பட்டன.
இக்கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் திருமதி வே.லதா, ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் திருமதி திலகவதி, வேளாண்மை இணை இயக்குநர் திருமதி அனுசுயா, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர்(வேளாண்மை) திரு.ரவிச்சந்திரன், கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் திரு.கோ.காந்திநாதன், துணை இயக்குநர்(தோட்டக்கலைத்துறை) திரு.ஜெ.பெருமாள்சாமி, செயற்பொறியாளர் (பொதுப்பணித்துறை நீர்வள ஆதார அமைப்பு) திரு.கோபி, வேளாண் பொறியியல் துறை செயற்பொறியாளர் திரு.கிருஷ்ணகுமார் உட்பட தொடர்புடைய அலுவலர்கள் மற்றும் விவசாயிகள், விவசாய சங்கங்களின் பிரதிநிதிகள் கலந்துகொண்டனர்.
செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.