Close

Agriculture-regarding selling of fertilizers

Publish Date : 22/11/2021

செ.வெ.எண்:-52/2021

நாள்:19.11.2021

ரசாயன உரங்களை அதிக விலைக்கு விற்பனை செய்தால்
கடும் நடவடிக்கை எடுக்கப்படும் – மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் ச.விசாகன், இ.ஆ.ப., அவர்கள் எச்சரிக்கை.

திண்டுக்கல் மாவட்டத்தில் நடப்பு ரபி பருவத்தில் தற்சமயம் நவம்பர் 2021 மாதத்திற்கு யூரியா – 1,750 டன், டிஏபி – 600 டன், பொட்டாஷ் – 200 டன், காம்பளக்ஸ் – 3,000 டன் தேவையாய் உள்ளது. இதில் தற்பொழுது யூரியா – 1,780 டன், டிஏபி – 640 டன், பொட்டாஷ் – 490 டன், காம்பளக்ஸ் – 4,840 டன் தனியார் மற்றும் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்களில் போதிய அளவில் இருப்பு வைக்கப்பட்டுள்ளது.

கடந்த இரு தினங்களில் வேளாண் துறை மேற்கொண்ட நடவடிக்கை காரணமாக திண்டுக்கல் மாவட்டத்திற்கு யூரியா உரமானது 1,620 டன் (ஸ்பிக் – 800, எம்.எப்.எல். – 820 மெ.டன்கள்) ஒதுக்கீடு செய்யப்பட்டு, திண்டுக்கல் மற்றும் பழனி ரயில் நிலையங்கள் வாயிலாக, மாவட்டத்தின் பல்வேறு வட்டாரங்களுக்கு முன்னுரிமை அடிப்படையில், பிரித்தளிக்கப்பட்டு தட்டுப்பாடின்றி உரங்கள் கிடைத்திடவும், அதிகபட்ச சில்லரை விலைக்கு (MRP) (யூரியா – 45 கிலோ மூட்டை அச்சிடப்பட்ட MRP – ரூ.266.50) மிகாமல் உரங்களை தகுதியுடைய பயனாளிகளுக்கு விற்பனை செய்திடவும், நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

உரக்கட்டுப்பாட்டு ஆணை 1985 உட்பிரிவு 5, அத்தியாவசிய பண்டங்கள் சட்டம் 1955 பிரிவு 3-ன் படி மான்ய விலையிலான இரசாயன உரங்களை மத்திய அரசினால் நிர்ணயிக்கப்பட்ட விலைக்குள் விற்பனை முனைய கருவி மூலம் பயனாளியின் ஆதார் எண், அலைபேசி எண் மற்றும் கைரேகை பெற்று விற்பனை மேற்கொள்ளுதல் வேண்டும்.

மேற்குறிப்பிடப்பட்ட சட்ட விதிகளில் ஏதேனும் விதி மீறல்கள் கண்டறியப்படின் (அதிகபட்ச விலைக்கு(MRP) மேல் உரங்களை விற்றால்) சம்பந்தப்பட்ட தனியார் மற்றும் கூட்டுறவு உர விற்பனை மையங்கள் மீது கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு உர உரிமம் ரத்து செய்யப்படும் என மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் ச.விசாகன், இ.ஆ.ப., அவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளார்கள்.

செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.