Close

AGRICULTURE-TNMSGCF

Publish Date : 17/12/2021

செ.வெ.எண்:-50/2021

நாள்:17.12.2021

‘தமிழ்நாடு விவசாய நிலங்களில் நீடித்த பசுமைப் போர்வைக்கான இயக்கம்” என்ற புதிய வேளாண் காடுகள் வளர்ப்புத் திட்டத்தில், விவசாயிகளுக்கு 2.51 இலட்சம் மரக்கன்றுகள் இலவசமாக வழங்கப்படவுள்ளது – மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் ச.விசாகன், இ.ஆ.ப., அவர்கள் தகவல்.

விவசாயிகளுக்கு ஆண்டு முழுவதும் கூடுதல் வருமானமும் வேலைவாய்ப்பும் கிடைக்கச் செய்வதோடு மட்டுமில்லாமல் தமிழ்நாட்டின் சுற்றுப்புறச் சூழலை பாதுகாத்திடவும், விவசாய நிலங்களில் நிரந்தர பசுமை சூழ்நிலையினை உருவாக்குவதற்கும் ‘தமிழ்நாடு விவசாய நிலங்களில் நீடித்த பசுமைப் போர்வைக்கான இயக்கம்”(TNMSGCF) தொடங்கப்பட்டு மரக்கன்றுகள் விவசாயிகளுக்கு வழங்கப்பட்டு விவசாய நிலங்களின் வரப்புகளிலும் மற்றும் குறைந்த செறிவில் விவசாய நிலங்களிலும் நடவு செய்யப்பட்டு மரம் சார்ந்த விவசாயம் ஊக்குவிக்கப்படுகிறது.

இத்திட்டம் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்களால் 16.11.2021 அன்று துவக்கி வைக்கப்பட்டது. தேக்கு, ஈட்டி, மகோகனி, மருது, மலைவேம்பு, நாவல், பெருநெல்லி, செம்மரம், புங்கன், வேங்கை மற்றும் சந்தனம் உள்பட பல்வேறு தரமான மரக்கன்றுகள் வழங்கப்படவுள்ளது.

தமிழ்நாடு அரசு வனத்துறையின் கீழ் திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள வன விரிவாக்க மைய அரசு நாற்றங்கால்களில் தேக்கு, குமிழ், மகோகனி, மலைவேம்பு, புளி, சந்தனம், செம்மரம் கன்றுகள் உற்பத்தி செய்யப்பட்டு, விவசாயிகளுக்கு வழங்குவதற்கு தயாராக உள்ளன. கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டத்தில் நடப்பாண்டில் தேர்வு செய்யப்பட்டுள்ள கிராமத்தினைச் சேர்ந்த விவசாயிகள் மற்றும் இதர கிராமங்களைச் சேர்ந்த விவசாயிகள் மரக்கன்றுகளைப் பெறுவதற்கு உழவன் செயலி மூலமாகவோ அல்லது அருகிலுள்ள வேளாண்மை விரிவாக்க மையத்திலோ பதிவு செய்து வேளாண்மைத் துறையின் பரிந்துரையின்படி கன்றுகள் பெறுவதற்கான உத்தரவு நகலினை பெற்றுத் தேவையான மரக்கன்றுகளை வனவிரிவாக்க மையம், மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்திலுள்ள தமிழ்நாடு வனத்துறையின் நாற்றாங்காலிருந்து இலவசமாகப் பெற்றுக்கொள்ளலாம். மரக்கன்றுகள் விநியோகம் ‘வரப்பு நடவுமுறை” எனில் ஏக்கருக்கு 40 மரக்கன்றுகளுக்கு மிகாமலும், விவசாய நிலங்களில் நடவு செய்ய ஏக்கருக்கு 200 மரக்கன்றுகளுக்கு மிகாமலும் வழங்கப்படும்.

திண்டுக்கல் மாவட்டத்தில் 2,51,700 மரக்கன்றுகள் வழங்கப்பட உள்ளது. மரக்கன்றுகளை பராமரித்திட விவசாயிகளுக்கு ஊக்கத் தொகையாக உயிருடன் உள்ள மரக்கன்று ஒன்றுக்கு ஒவ்வொரு ஆண்டும் ரூ.7/-வீதம் மூன்று ஆண்டுகளுக்கு ரூ.21/- வழங்கப்படும். மரக்கன்றுகள் அனைத்தும் மழைநீரைப் பயன்படுத்தி டிசம்பர் மாதத்திற்குள் நடவு செய்வதற்குரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும். நடப்பட்ட மரக்கன்றுகள் வருவாய்த்துறையின் அடங்கல் பதிவேட்டில் பதிவு செய்திடவும் களப்பணியாளர் மூலம் நடவடிக்கை எடுக்கப்படும்.

இத்திட்டத்தில் விருப்பமுள்ள அனைத்து விவசாயிகளும் சேர்ந்து பயன்பெறலாம். சிறு, குறு விவசாயிகள், பெண் விவசாயிகள், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடி இன விவசாயிகளுக்கும் முன்னுரிமை அளிக்கப்படும்.

இத்திட்டத்தின் வாயிலாக விவசாயிகளின் நிலங்களில் மரக்கன்றுகள் வளர்க்கப்படுவதால் விவசாயிகளுக்கு எதிர்காலத்தில் ஒரு நிரந்தர வைப்புத் தொகை கிடைப்பதுடன் விவசாய நிலங்களின் மண் வளமும் மேம்படுவதோடு, மாநிலத்தின் பசுமைப் பரப்பும், சுற்றுச்சூழலும் மேம்படுத்தப்படுகிறது.

எனவே, ஆர்வமுள்ள விவசாயிகள் இத்திட்டத்தில் விண்ணப்பித்து பயன்பெறலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் ச.விசாகன், இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்கள்.

செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.