Close

Amma Two Wheeler Scheme Press Release

Publish Date : 11/06/2020

செ.வெ.எண்:-09/2020 நாள்:11.06.2020
திண்டுக்கல் மாவட்டம்

பணிபுரியும் மகளிர்கள் மானிய விலையில் அம்மா இருசக்கர வாகனம் பெற தகுதியுடையவர்கள் விண்ணப்பிக்கலாம் மாவட்ட ஆட்சித்தலைவர்
திருமதி மு.விஜயலட்சுமி, இ.ஆ.ப., அவர்கள் தகவல்.

நகர்ப்புறம் மற்றும் கிராமப்புற பகுதிகளில் பணிக்குச் செல்லும் மகளிர் மற்றும் சிறு வணிகம் செய்யும் மகளிர் நலன் கருதி அவர்களின் வசதிக்காக தமிழக அரசு “அம்மா இரு சக்கர வாகன திட்டத்தினை” 2017-18-ஆம் ஆண்டு முதல் செயல்படுத்தி வருகிறது.
தற்போது 2020-2021-ஆம் ஆண்டிற்கு அம்மா இருசக்கர வாகனத்திட்டத்தின் கீழ் மானியம் பெறுவதற்கு தகுதி வாய்ந்த மகளிர் பயனாளிகளிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 18 முதல் 45 வயது வரையுள்ளவர்கள், வருட வருமானம் ரூ.2,50,000ஃ-க்குள் உள்ளவர்கள், சிறப்பு காலமுறை ஊதியத்தின்படி ஊதியம் பெற்று வரும் அங்கன்வாடி, சத்துணவு மையங்களில் பணிபுரியும் அமைப்பாளர்கள், சமையலர்கள் மற்றும் உதவியாளர்கள், கூட்டுறவு சங்கங்கள் நியாயவிலை கடைகள், நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள், ஊரக உள்ளாட்சி அமைப்புகள் ஆகியவற்றில் பணிபுரியும் மகளிர் பணியாளர்கள் மற்றும் அனைத்து அரசு துறைகளில் சிறப்பு காலமுறை ஊதியத்தின் கீழ் பணிபுரியும் மகளிர் பணியாளர்கள் ஆகியோர் இந்த திட்டத்தில் பயனடைய தகுதியுடையவர்கள். கல்வித் தகுதி தேவையில்லை.

பணிபுரியும் அல்லது சுயதொழில் செய்யும் மகளிர் மாற்றுத்திறனாளி பயனாளிகளுக்கு 25 சதவீதம் கூடுதல் தொகை ரூ.6,250/-ஐ சேர்த்து மொத்த மானியத்தொகை ரூ.31,250ஃ- வழங்கப்படும். ஒரு குடும்பத்தில் ஒரு நபர் மட்டுமே இத்திட்டத்தின் மூலம் பயனடையலாம் அம்மா இருசக்கர வாகன திட்டத்தின் கீழ் ஏற்கனவே மானியம் பெற்றவர்கள் மீண்டும் விண்ணப்பம் செய்ய தகுதியற்றவர்கள் ஆவார். 125 CC திறனுக்கு மிகாத ஆட்டோ கியர் அல்லது கியர் இல்லாத இருசக்கர வாகனங்களை பயனாளிகள் சொந்த நிதியிலிருந்தோ அல்லது வங்கிகள் மற்றும் ரிசர்வ் வங்கியால் அங்கீகரிக்கப்பட்ட நிதி நிறுவனங்கள் வழங்கும் கடன் மூலமாகவோ வாங்கிக் கொள்ளலாம். இருசக்கர வாகனம் மோட்டார் வாகன பதிவு சட்டத்தின் கீழ் பதிவு செய்ய தகுதி வாய்ந்ததாக இருத்தல் வேண்டும். இருசக்கர வாகனத்தின் விலையில் 50 சதவீதம் அல்லது ரூ.25,000/- இதில் எது குறைவோ அந்த தொகை மானியமாக வழங்கப்படும். இத்திட்டத்தின் மூலமாக பெறப்படும் வாகனத்தை 3 ஆண்டுகளுக்கு வேறு நபருக்கு விற்கவோ பெயர் மாற்றம் செய்யவோ கூடாது. இந்த அம்மா இருசக்கர வாகன திட்டத்திற்கென உள்ள பிரத்யேகமான விண்ணப்ப படிவத்தில் மட்டுமே பயனாளிகள் விண்ணப்பித்தல் வேண்டும். விண்ணப்ப படிவங்களை மாநகராட்சி அலுவலகம், நகராட்சி அலுவலகம், பேரூராட்சி அலுவலகங்கள் மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலகங்களில் எவ்வித கட்டணமும் இன்றி பெற்றுக் கொள்ளலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை பயனாளிகள் வசிக்கும் தொடர்புடைய மாநகராட்சி அலுவலகம், நகராட்சி அலுவலகங்கள், பேரூராட்சி அலுவலகங்கள் மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலகங்களில் நேரிலோ அல்லது பதிவு அஞ்சல் மூலமாகவோ சமர்ப்பிக்கலாம்.

விண்ணப்பங்களுடன், வயது சான்று(18 முதுல் 45 வயது வரை), இருப்பிட சான்று, சாதிச்சான்று(எஸ்சி, எஸ்டி பயனாளிகளுக்கு), வருமான சான்று( பணிபுரியும் நிறுவனம் வழங்கும் சான்று அல்லது சுயதொழில் புரிவோர் அளிக்கும் சுய சான்று), பணிபுரிவதற்கான சான்று(நிறுவன தலைமை வழங்குவது அல்லது சுயதொழில் சான்று), முன்னுரிமை பெறும் இனங்களில் அது குறித்த சான்று, ஓட்டுநர் உரிமம் அல்லது பழகுநர் உரிமம், பாஸ்போர்ட் புகைப்படம், மாற்றுத்திறனாளி அடையாள அட்டை ஆகியவற்றை இணைத்து விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பங்கள் தொடர்புடைய உள்ளாட்சி அமைப்பு அலுவலர்களால் கள ஆய்வு மூலம் சரிபார்க்கப்பட்டு மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தலைமையில் அமைக்கப்பட்ட குழு மூலம் பயனாளிகள் தேர்வு செய்யப்படுவர். வாகனம் வாங்குவதற்கு அனுமதி உத்தரவு கிடைக்கப்பட்ட பின்னரே பயனாளிகள் வாகனங்களை புதியதாக வாங்குதல் வேண்டும். தகுதிவாய்ந்த மகளிர் உரிய காலத்திற்குள் விண்ணப்பித்து இத்திட்டத்தில் பயன் பெறலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மு.விஜயலட்சுமி, இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்.

செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலகம், திண்டுக்கல்