Animal husbandry – Bird flu
செ.வெ.எண்:-23/2022
நாள்:10.01.2022
பறவைக்காய்ச்சல் தொடர்பாக திண்டுக்கல் மாவட்டத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன – மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் ச.விசாகன், இ.ஆ.ப., அவர்கள் தகவல்.
கேரள மாநிலத்தின், ஆலப்புழா மாவட்டத்தில் வாத்துக்களில் பறவைக்காய்ச்சல் நோய் கண்டறியப்பட்டுள்ளதாக ஒன்றிய அரசு 09.12.2021 அன்று அறிவிப்பு வெளியிட்டுள்ளது. கடந்த ஐந்து வருடங்களில் தமிழ்நாட்டின் அண்டைய மாநிலங்களான கர்நாடகா மற்றும் கேரளா மாநிலங்களில் பறவைக்காய்ச்சல் நோய் கிளர்ச்சி ஏற்பட்ட போதெல்லாம் தமிழக அரசின் துரித நடவடிக்கைகளினாலும் மற்றும் ஏற்கனவே தொடர்ந்து திண்டுக்கல் மாவட்ட கால்நடை பராமரிப்புத்துறையினரால் செயல்படுத்தப்பட்டு வரும் தீவர நோய் கண்காணிப்பு நடவடிக்கைகளால் இதுவரை திண்டுக்கல் மாவட்டத்தில் பறவைக்காய்ச்சல் நோய் கிளர்ச்சி ஏற்படாமல் தடுக்கப்பட்டுள்ளது.
மேலும், திண்டுக்கல் மாவட்டத்திற்கு நீர்நிலைகளைத் தேடி வரும் பறவை இனங்களில் திடீர் / அசாதாரண இறப்பு எதும் உள்ளனவா என ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. கோழிப் பண்ணைகளை தீவிரமாக கண்காணித்து, தீவிர பாதுகாப்பு நடைமுறைகளை (Strict Bio Security Measures) கையாள அறிவுறுத்தப்பட்டுள்ளது. எந்த சூழ்நிலையினையும் எதிர்கொள்ளும் வகையில் திண்டுக்கல் மாவட்டத்தில் ஒரு கால்நடை உதவி மருத்துவர், ஓரு கால்நடை ஆய்வாளர், இரண்டு கால்நடை பராமரிப்பு உதவியாளர்கள் கொண்ட மொத்தம் 42 அதிவிரைவு செயலாக்க குழுக்கள் (Rapid Response Team – RRT) நம் மாவட்டத்தில் அமைக்கப்பட்டுள்ளது. இக்குழுவிற்குத் தேவையான சுய பாதுகாப்பு உபகரணங்கள் (PPE Kits), நோய் தடுப்பு நடவடிக்கைக்குத் தேவையான மருந்துகள் மற்றும் உபகரணங்கள் போதுமான அளவு இருப்பு வைக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் எல்லையோரப் பகுதிகளில் 26 எண்ணிக்கையிலான பறவைக்காய்ச்சல் சோதனை தடுப்புச் சாவடிகளில் கால்நடை பராமரிப்புத் துறையினரால் தமிழகத்திற்குள் உள்ளே நுழையும் வாகனங்களின் டயர் மற்றும் அடிப்பாகங்களில் கிருமி நாசினி கரைசல் தெளிக்கப்பட்டும், கேரளாவில் இருந்து கொண்டு வரும் கோழியின பறவைகள் மற்றும் முட்டைகள் ஏற்றி வரும் வாகனங்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டும் வருகின்றன.
மேலும், திண்டுக்கல் மாவட்டத்தில் பறவைக்காய்ச்சல் நோய் தொடர்பான அனைத்து விதமான விவரங்களுக்கு தொடர்பு கொள்ள திண்டுக்கல் கால்நடை நோய் புலனாய்வு பிரிவு உதவி இயக்குநர், பொறுப்பு அலுவலராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். பறவைக்காய்ச்சல் தொடர்பாக தொலைப்பேசி எண்:0451 -2432800, கைப்பேசி எண்:9445032608 ஆகியவற்றில் தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் ச.விசாகன், இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்கள்.
செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.