Close

Animal Husbandry-Foot and Mouth Disease Vaccination

Publish Date : 16/12/2021

செ.வெ.எண்:45/2021

நாள்:16.12.2021

விவசாயிகள் தங்கள் கால்நடைகளுக்கு கோமாரி நோய் தடுப்பூசி செலுத்தி, பாதுகாத்துக்கொள்ளலாம் – மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் ச.விசாகன், இ.ஆ.ப., அவர்கள் அறிவுறுத்தல்.

திண்டுக்கல் மாவட்ட கால்நடை பராமரிப்புத்துறை சார்பில் கால்நடைகளுக்கு கோமாரி நோய்(கால் மற்றும் வாய் காணை நோய்) தடுப்பூசி செலுத்தும் பணியானது 13.12.2021 அன்று முதல் திண்டுக்கல் மாவட்டம் முழுவதும் நடைபெற்று வருகிறது.

கால் மற்றும் வாய் காணை நோயானது, குறிப்பாக கலப்பின மாடுகளை அதிகம் தாக்கி கால்நடை வளர்ப்போருக்கு பொருளாதாரம் மற்றும் உற்பத்தி இழப்பை ஏற்படுத்துகிறது. இந்நோயினால் இறப்புகள் குறைவாக இருந்த போதிலும், கறவை மாடுகளில் பால் உற்பத்தி குறைவு, எருதுகளின் வேலைத்திறன் குறைவு, கறவை மாடுகளில் சினை பிடிப்பு தடைபடுவது, இளங்கன்றுகளின் இறப்பு போன்ற பாதிப்புகளினால் ஏற்படும் பொருளாதார இழப்பு அதிகம்.

மேலும் இந்நோய் பொதுவாக குளிர் மற்றும் பனிக்காலம், நோய் பாதிக்கப்பட்ட இடங்களில் இருந்து வாங்கி வரப்பட்ட கால்நடைகள், சுகாதாரமற்ற கால்நடை வளர்ப்பு மற்றும் கால்நடைகளுக்கு தடுப்பூசி போடாமல் இருத்தல் ஆகிய காரணங்களால் இந்நோய் விரைவாக காற்றின் மூலம் பரவும் தன்மை கொண்டது. மேலும் இந்நோய் பாதிக்கப்பட்ட மாடுகளின் பால், உமிழ்நீர்; ஆகியவற்றால் காற்றின் மூலம் மற்றும் தொடர்பு ஏற்படுவதன் மூலம் மற்ற கால்நடைகளுக்கு பரவுகிறது.

எனவே, திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள விவசாயப் பெருமக்கள் தங்களது பசுக்கள், எருதுகள், எருமைகள் மற்றும் 4 மாதத்திற்கு மேற்பட்ட இளங்கன்றுகளுக்கு தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டும். எனவே, தங்களது கால்நடைகளுக்கு கோமாரி நோய் தடுப்பூசி தவறாது செலுத்தி கால்நடைகளை பாதுகாத்துக்கொள்ளலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் ச.விசாகன், இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்கள்.

செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.