Close

Animal Husbandry – KCC Scheme-PM KISAN

Publish Date : 09/12/2021

செ.வெ.எண்:-24/2021

நாள்:09.12.2021

கால்நடை வளர்க்கும் விவசாயிகளுக்கான கிசான் கிரெடிட் கார்டு திட்டத்தில் பயன்பெற தகுதியுள்ள விவசாயிகள் விண்ணப்பிக்கலாம் – மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் ச.விசாகன், இ.ஆ.ப., அவர்கள் தகவல்.

பிரதான் மந்திரி கிஷான் சம்மன் நிதி (PM KISAN) திட்டத்தின் மூலம் விவசாயிகள் மற்றும் கால்நடை வளர்ப்போருக்கு கிஷான் கடன் அட்டை வழங்கும் திட்டம் திண்டுக்கல் மாவட்டத்தில் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

இத்திட்டத்தின் கீழ் கால்நடை வளர்ப்போர் விண்ணப்பித்து வங்கிகளின் மூலம் கிசான் கடன் அட்டை பெற்று பயன்பெறலாம். ஒரு கறவை மாட்டிற்கு ரூ.14,000 வீதம் இரண்டு கறவை மாட்டிற்கு ரூ.28,000 வரையும், மேலும் 10 கறவை மாடு வரை “கால்நடை தீவனம் செலவுக்கும், உபகரணங்கள் வாங்குவதற்கும் கடன் அட்டையினை பயன்படுத்தலாம்”.

இதற்கான வட்டி வீதம் ஒரு மாதத்தில் வாங்கிய கடனை திருப்பி செலுத்தினால் வட்டி இல்லை. ஒரு மாதத்திற்கு மேல் 4 சதவீதம் வட்டி, மூன்று மாதத்திற்கு மேல் 10 சதவீதம் வட்டி கணக்கிடப்படும். இந்ததிட்டத்தின் நோக்கம் கால்நடை வளர்க்கும் விவசாயிகள் தனி நபர்களிடம் அதிக வட்டிக்கு பணம் வாங்குவதை தவிர்ப்பதே ஆகும்.

இத்திட்டத்தில் பயன்பெற, ஆதார் கார்டு, பான் கார்டு(PAN CARD), வாக்காளர் அடையாள அட்டை, ஓட்டுநர் உரிமம், வங்கி சேமிப்பு கணக்கு புத்தகம், இரண்டு போட்டோ, நிலஆவணங்கள் -சிட்டா ஆகிய ஆவணங்களுடன், தகுதி வாய்ந்த கால்நடை வளர்ப்போர் தங்களது கிராம ஊராட்சிக்கு அருகில் உள்ள கால்நடை மருந்தக கால்நடை உதவி மருத்துவரை அணுகி, இத்திட்டத்திற்கான விண்ணப்ப படித்தினை பெற்று, முழுவதும் பூர்த்தி செய்து தேவையான ஆவணங்களின் நகல்களை இணைத்து, கால்நடை மருந்தகத்தில் கொடுத்து பயன்பெற்றலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் ச.விசாகன், இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்கள்.

செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.