Close

Balakrishnapuram Bridge Inspection

Publish Date : 21/10/2021
.

செ.வெ.எண்:- 42/2021

நாள்:- 21.10.2021

திண்டுக்கல் மாவட்டம்

திண்டுக்கல் பாலகிருஷ்ணாபுரம் பகுதியில் ரூ.59.8 கோடி மதிப்பீட்டில் நடைபெற்று வரும் மேம்பாலம் கட்டும் பணியினை விரைவுபடுத்தி மார்ச் மாதத்திற்குள் பணிகளை முடிக்க வேண்டும் – மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் ச.விசாகன், இ.ஆ.ப., அவர்கள், நெடுஞ்சாலைத்துறை அலுவலர்களுக்கு அறிவுறுத்தல்.

திண்டுக்கல் பாலகிருஷ்ணாபுரம் பகுதியில் ரூ.59.8 கோடி மதிப்பீட்டில் நடைபெற்று வரும் மேம்பாலம் கட்டுமான பணிகளை, திண்டுக்கல் மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் ச.விசாகன், இ.ஆ.ப., அவர்கள், நாடாளுமன்ற உறுப்பினர் திரு.ப.வேலுச்சாமி அவர்கள் முன்னிலையில் இன்று(21.10.2021) நேரில் பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டு, தெரிவித்ததாவது:-

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள், தமிழகத்தின் முன்னேற்றத்திற்காக தமிழகம் முழுவதும் பல்வேறு வளர்ச்சிப் பணிகளை மேற்கொண்டு வருகிறார்கள். அதன்படி, திண்டுக்கல் மாவட்டத்திற்கு தேவையான அடிப்படை வசதிகள் மற்றும் வளர்ச்சிப் பணிகள் உள்ளிட்டவைகளை தமிழக அரசின் கவனத்திற்கு எடுத்து சென்று, வளர்ச்சிப் பணிகளை மேம்படுத்துவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. மேலும், தமிழக அரசால் செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்கள் அனைத்தும் மாவட்டத்தின் கடைகோடி பகுதியில் வசிக்கும் மக்களுக்கும் கிடைக்க செய்யும் வகையில் சிறப்பாக நிர்வாகம் நடைபெற்று வருகிறது.

திண்டுக்கல் மாவட்டத்தில் பொதுமக்களின் அடிப்படை தேவைகளை நிவர்த்தி செய்வதற்கென, பொதுமக்களின் கோரிக்கைகள் மட்டுமன்றி, பல்வேறு வளர்ச்சித் திட்டப்பணிகளும் துரிதமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

திண்டுக்கல் பாலகிருஷ்ணாபுரம் பகுதியில் வசிக்கும் பொதுமக்கள், திண்டுக்கல் – பழனி, திண்டுக்கல் – கரூர், திண்டுக்கல் – திருச்சி ஆகிய 3 ரயில்வே கிராசிங்குகளை கடந்து செல்வதற்கு சிரமப்படுவதால், அந்தப்பகுதியில் பொதுமக்களின் வசதிக்காகவும், போக்குவரத்து நெரிசலை தவிர்க்கும் பொருட்டும், பாலகிருஷ்ணாபுரத்தில் மேம்பாலம் கட்டும் பணி நடைபெற்று வருகிறது. பாலம் கட்டும் பணியினை விரைந்து முடிப்பதற்காக அலுவலர்களுடன் தொடர்ந்து ஆலோசனை நடத்தி, பணிகள் விரைவுப்படுத்தப்பட்டுள்ளது. பாலப்பணிகள் தொடர்பாக அலுவலர்களுடன் இன்று ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

பாலகிருஷ்ணாபுரம் பாலம் ரூ.59.8 கோடி மதிப்பீட்டில் 1,040 மீட்டர் நீளத்தில் அமைக்கப்பட்டு வருகிறது. தற்போது பாலம் கட்டுமான பணிகள் 80 சதவீதம் நிறைவடைந்துள்ளது. தமிழ்நாடு மின்சார வாரியம் மற்றும் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் தொடர்புடைய பணிகள் மற்றும் மீதமுள்ள பாலப் பணிகளை கூடுதல் பணியாட்களை நியமித்து, வரும் மார்ச் மாதத்திற்குள் பணிகளை விரைந்து முடிக்க நெடுஞ்சாலைத்துறை அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது என திண்டுக்கல் மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் ச.விசாகன், இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்தார்கள்.

ஆய்வின்போது, மாவட்ட வருவாய் அலுவலர் திருமதி வே.லதா, திண்டுக்கல் வருவாய் கோட்டாட்சியர் திருமதி ம.காசிசெல்வி, திண்டுக்கல் மாநகராட்சி ஆணையாளர் திரு.எஸ்.சிவசுப்பிரமணியம், நெடுஞ்சாலைத்துறை உதவி கோட்டப்பொறியாளர் திரு.பி.கண்ணன், உதவிப் பொறியாளர் திரு.வி.பாரத், திண்டுக்கல் வட்டாட்சியர்(கிழக்கு) திரு.சு.சரவணன் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர்,திண்டுக்கல்.