Close

Bavanishagar Training

Publish Date : 25/02/2022
.

..

செ.வெ.எண்:-46/2022

நாள்:24.02.2022

அரசு அலுவலர்கள் பொதுமக்களின் கோரிக்கைகளை நிறைவேற்றுவதில் மிகவும் அக்கறையுடனும், பொறுப்புடனும், அரசின் விதிகளுக்குட்பட்டு செயல்பட வேண்டும் – திண்டுக்கல் ஆர்.வி.எஸ். பொறியியல் கல்லூரியில் நடைபெற்ற அரசு அலுவலர்களுக்கான அடிப்படை பயிற்சி துவக்க விழாவில் மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் ச.விசாகன், இ.ஆ.ப., அவர்கள் வேண்டுகோள்.

திண்டுக்கல் மாவட்ட அரசுத்துறை அலுவலர்களுக்கு, பவானிசாகர் அரசு அலுவலர் பயிற்சி நிலையம் சார்பில் 37 நாட்கள் நடைபெறும் அடிப்படை பயிற்சி(13-வது அணி) துவக்க விழா திண்டுக்கல் ஆர்.வி.எஸ். பொறியியல் கல்லூரியில் இன்று(24.02.2022) நடைபெற்றது. விழாவில், மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் ச.விசாகன், இ.ஆ.ப., அவர்கள் பயிற்சியினை துவக்கி வைத்து தெரிவித்ததாவது:-

அரசுப்பணி என்பது மக்கள் பணியாகும் என்பதை உணர்ந்து அரசுப் பணியாளர்கள் செயல்பட வேண்டும். பொதுமக்களிடமிருந்து பெறும் கோரிக்கை மனுக்கள் மீது சட்டத்திற்குட்பட்டு விரைந்து சரியாக செயல்பட வேண்டும். அரசுப் பணியாளர்கள், தாம் அரசுப் பணியில் சேர்ந்தவுடன், மிகவும் பணிவுடன் செயல்பட வேண்டும். அரசுப்பணி என்பது இறைவன் நமக்கு அளித்த மிகப்பெரிய வாய்ப்பாகும். இதனை மனதிற்கொண்டு பணியாளர்கள் தங்களை முழு ஈடுபாட்டுடன், தங்களது பணியில் செயல்பட வேண்டும். தங்களுக்கு பணியின்போது சவால்கள் ஏற்படும்போது, அதனை சாதுரியமாக, யாருக்கும் எவ்வித பாதிப்பும் இன்றி, சட்ட விதிகளுக்குட்பட்டு திறமையாக கையாள வேண்டும். பல்வேறு காரணங்களுக்காக அரசு அலுவலகங்களை நாடி வரும் பொதுமக்களிடம் கனிவுடன் நடந்துகொள்ள வேண்டும்.

அரசுப்பணியாளர்கள் அரசு விதிமுறைகளை நன்கு தெரிந்துகொள்ள வேண்டும். அந்த விதிமுறைகளுக்குட்பட்டு நேர்மறையான செயல்பாடுகளில் விரைந்து செயல்பட வேண்டும். எந்தவொரு மனு மீதும் தீர்வு காணும் வகையில் முனைப்புடன் செயல்பட வேண்டும்.

படித்த இளைஞர்களை தொழில்முனைவோர் ஆக்கும் வகையில் அரசின் தொழில் கடன் திட்டங்கள் மற்றும் அதில் வழங்கப்படும் மானியங்கள் குறித்து விளக்கம் அளித்து அவர்கள் தொழில்முனைவோர்களாக ஆக்கிட ஊக்கப்படுத்த வேண்டும். தொழில் கடனுக்கு 25 சதவீதம் வரை அரசு மானியம் வழங்கப்படுகிறது. இதுதவிர பயிர்க்கடன், கால்நடை வளர்ப்பு என்று பல்வேறு கடன் திட்டங்கள் செயல்படுத்தப்படுகிறது என்பதை தொழில் முனைவோர்களுக்கு, படித்த இளைஞர்களுக்கு தெரியப்படுத்த வேண்டும்.

அரசு அலுவலகங்களை நாடி வரும் பொதுமக்களின் கோரிக்கைகளை நிறைவேற்றுவதில் அரசு அலுவலர்கள் மிகுந்த அக்கறையுடனும், பொறுப்புடனும், கவனமுடனும் செயல்பட வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் ச.விசாகன், இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்தார்கள்.

இந்த பயிற்சி முகாமில் ஏராளமான அரசு அலுவலர்கள் பயிற்சி பெறுகின்றார்கள். துவக்க விழா நிகழ்ச்சியில், பவானிசாகர் அரசு அலுவலர் பயிற்சி நிலைய கணக்கு அலுவலர் திரு.ஜி.ரவி வரவேற்புரையாற்றினார்கள். திண்டுக்கல் ஆர்.வி.எஸ். பொறியியல் கல்லூரி இயக்குநர் முனைவர் கிருஷ்ணகுமார், மாவட்ட வருவாய் அலுவலர் மற்றும் பவானிசாகர் அரசு அலுவலர் பயிற்சி நிலைய முதல்வர் திரு.அ.சாதனைக்குறள் ஆகியோர் வாழ்த்துறை வழங்கினார்கள். பவானிசாகர் அரசு அலுவலர் பயிற்சி நிலைய திண்டுக்கல் மையம் ஒருங்கிணைப்பாளர் மாவட்ட வருவாய் அலுவலர்(ஓய்வு) திரு.கா.ரசீத் அலி நன்றி தெரிவித்தார்கள்.

செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.