Breakfast scheme – Inaguration

செ.வெ.எண்:-02/2023
நாள்:-01.03.2023
திண்டுக்கல் மாநகராட்சி நடுநிலைப்பள்ளியில் 1 முதல் 5-ஆம் வகுப்பு வரை மாணவ, மாணவிகளுக்கு காலை உணவு வழங்கும் பணியை மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் ச.விசாகன், இ.ஆ.ப., அவர்கள் தொடங்கி வைத்தார்.
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள், தமிழகத்தில் அரசு தொடக்கப்பள்ளி மாணவ, மாணவிகளுக்கு முதலமைச்சரின் காலை உணவுத் திட்டத்தை 15.09.2022 அன்று மதுரையில் தொடங்கி வைத்தார்கள். அதனைத்தொடர்ந்து, விரிவுபடுத்தப்பட்ட காலை உணவு திட்டத்தை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் சென்னையில் நேற்று (28.02.2023) தொடங்கி வைத்தார்கள்.
அதையடுத்து, திண்டுக்கல் சந்தை ரோட்டில் உள்ள மாநகராட்சி நடுநிலைப்பள்ளியில் 1-ம் வகுப்பு முதல் 5-ம் வகுப்பு வரை மாணவ, மாணவிகளுக்கு காலை உணவு வழங்கும் பணியை மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் ச.விசாகன், இ.ஆ.ப., அவர்கள் இன்று(01.03.2023) மாணவ, மாணவிகளுக்கு உணவு பரிமாறி தொடங்கி வைத்தார். இதன்மூலம் பள்ளி மாணவ, மாணவிகள் 81 பேர் பயன்பெறுகின்றனர்.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்ததாவது:-
திண்டுக்கல் மாவட்டத்தில் முதற்கட்டமாக திண்டுக்கல் மாநகராட்சி பகுதியில் 14 தொடக்கப்பள்ளிகளைச் சேர்ந்த 1,233 மாணவ, மாணவிகள், கொடைக்கானல் ஊராட்சி ஒன்றிய பகுதியில் 34 தொடக்கப்பள்ளிகளைச் சேர்ந்த 1,052 மாணவ, மாணவிகள் என மொத்தம் 48 தொடக்கப்பள்ளிகளைச் சேர்ந்த 2,285 மாணவ, மாணவிகளுக்கு காலை உணவு வழங்கும் பணி தொடங்கப்பட்டு செயல்படுத்தப்பட்டு வருகிறது. தற்போது, இந்தத் திட்டம் விரிவுபடுத்தப்பட்டுள்ளது. அதையடுத்து, திண்டுக்கல் மாநகராட்சி நடுநிலைப்பள்ளியில் 81 மாணவ, மாணவிகளுக்கு முதலமைச்சரின் காலை உணவுத் திட்டத்தில் காலை உணவு இன்று முதல் வழங்கப்படுகிறது என மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில், திண்டுக்கல் மாநகராட்சி ஆணையாளர் திரு.எஸ்.சிவசுப்பிரமணியம், திண்டுக்கல் மாநகராட்சி தலைமைப் பொறியாளர் திரு.நாராயணன், உதவிப்பொறியாளர் திரு.சாமிநாதன், சுகாதார ஆய்வாளர் திரு.கேசவன், தலைமையாசிரியர் திருமதி சாந்தினி, மாநகராட்சி உறுப்பினர்கள் திரு.குலோத்துங்கன், திருமதி சுயாசினி, திருமதி பௌமிதாபர்வீன், திருமதி நித்யா, திருமதி காயத்ரி உட்பட பலர் கலந்துகொண்டனர்.
செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.