Close

Buyer – Seller meeting

Publish Date : 29/12/2021
.

...

செ.வெ.எண்:-73/2021

நாள்: 28.12.2021

விவசாயிகள் மற்றும் பண்ணைக்கருவிகள் விற்பனை பிரதிநிதிகள் கூட்டம் – மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் ச.விசாகன், இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது.

திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் இன்று (29.12.2021) விவசாயிகள் மற்றும் பண்ணைக்கருவிகள் விற்பனை பிரதிநிதிகள் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் ச.விசாகன், இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்ததாவது:-

சிறு குறு விவசாயிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில் தமிழ்நாடு அரசு கூட்டுப்பண்ணைய திட்டத்தை செயல்படுத்துகிறது. விவசாயத்தில் தனிநபர் சாகுபடி முறைக்கு பதிலாக கூட்டுப்பண்ணைய முறையை கடைபிடிப்பதன் மூலம், உற்பத்தி அதிகரிப்பதோடு மட்டுமல்லாமல், சிறந்த வணிக வருமானமும் ஈட்ட வாய்பள்ள திட்டம் கூட்டுப்பண்ணைய திட்டமாகும்.

விவசாயிகள் வேளாண் தொழில்நுட்பத்தை சிறந்த முறையில் பின்பற்றிடவும் பயிர் உற்பத்தி செலவை குறைத்திடவும் கூட்டுப்பண்ணையம் மற்றும் கூட்டு கொள்முதல் மூலம் லாபத்தை அதிகரித்திடவும் கூட்டுப்பண்ணைய திட்டம் உதவுகிறது.

2017-18-ம் ஆண்டில் மாநில அளவில் 2 லட்சம் விவசாயிகள் பயனடையும் வகையில் முன்னோடி திட்டமாக கூட்டுப்பண்ணைய திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. குறைந்த பட்சம் 100 விவசாயிகளை உறுப்பினர்களாக கொண்டு 2000 உழவர் உற்பத்தியாளர் குழுக்கள் தமிழகம் முழுவதும் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

2017-18-ம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட இத்திட்டத்தில், திண்டுக்கல் மாவட்டத்தில் சென்ற ஆண்டு வரை வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை மூலம் 955 உழவர் ஆர்வலர் குழுக்களும், 191 உழவர் உற்பத்தியாளர் குழுக்களும் அமைக்கப்பட்டு, ரூ.9 கோடியே 55 இலட்சம் மானியத்தில் பண்ணைக் கருவிகளை விவசாயிகள் பெற்று பயனடைந்துள்ளனர். தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறை மூலம் 435 உழவர் ஆர்வலர் குழுக்களும் 117 உழவர் உற்பத்தியாளர் குழுக்களும் அமைக்கப்பட்டு ரூபாய் 5 கோடியே 85 இலட்சம் மானியத்தில் பண்ணைக் கருவிகள் வழங்கப்பட்டுள்ளது.

அதன் தொடர்ச்சியாக நடப்பு நிதி ஆண்டில் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறையின் மூலம் 5 உழவர் உற்பத்தியாளர் குழுக்களும் தோட்டக்கலைத்துறை மூலம் 25 உழவர் உற்பத்தியாளர் குழுக்களும் அமைக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு குழுவிற்கும் ரூபாய் 5 இலட்சம் வீதம் ரூ.150 இலட்சம் பண்ணை இயந்திரங்கள் வாங்குவதற்கு தொகுப்புநிதியாக வழங்கப்படவுள்ளது. இத்திட்டத்தின் கீழ் குழுக்களின் பிரதிநிதிகள், விற்பனை பிரதிநிதிகளுடன் கலந்துரையாடி, இயந்திரங்களின் தரம் மற்றும் பயன்பாடு குறித்து கேட்டு அறிந்து, விலையை நிர்ணயம் செய்து பயன்பெற்றிட ஏதுவாக இக்கூட்டம் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

விவசாயிகள் வேளாண் தொழில்நுட்பத்தை சிறந்த முறையில் பின்பற்றுவதை உறுதி செய்திடவும், பயிர் உற்பத்தி செலவை குறைத்திடவும், கூட்டுப்பண்ணையம் கூட்டு கொள்முதல் மற்றும் கூட்டு வணிகம் மூலம் லாபத்தை அதிகரித்திடவும் கூட்டுப்பண்ணைய திட்டம் உதவுகிறது. இவ்வாறு மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் ச.விசாகன், இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்தார்கள்.

முன்னதாக, மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் அமைக்கப்பட்டியிருந்த பண்ணை இயந்திரம் மற்றும் உபகரணங்கள் குறி;த்த கண்காட்சியினை மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் ச.விசாகன், இ.ஆ.ப., அவர்கள் துவக்கி வைத்தார்கள்.

இக்கூட்டத்தில், இணை இயக்குநர் (வேளாண்மை) திரு.எஸ்.பாண்டித்துரை, துணை இயக்குநர் (வேளாண்மை மாநில திட்டம்) திரு.பி.சுருளியப்பன், துணை இயக்குநர் (தோட்டக்கலை) திரு.ஜெ.பெருமாள்சாமி, துணை இயக்குநர் (வேளாண்மை) திரு.பெ.ரவிபாரதி, உதவி பொறியாளர் (வேளாண்மை பொறியியல்) திரு.சகாயராஜ், உள்ளிட்ட தொடர்புடைய அலுவலர்கள் மற்றும் ஏராளமான விவசாயிகள் கலந்துகொண்டார்கள்.

செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.