Close

C.M. Trophy – Sports Inauguration

Publish Date : 13/09/2024
.

செ.வெ.எண்:-25/2024

நாள்:-10.09.2024

திண்டுக்கல் மாவட்டம்

முதலமைச்சர் கோப்பைக்கான மாவட்ட அளவிலான விளையாட்டுப் போட்டிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் தொடங்கி வைத்தார்.

திண்டுக்கல் மாவட்ட விளையாட்டு மைதானத்தில், முதலமைச்சர் கோப்பைக்கான மாவட்ட அளவிலான விளையாட்டுப் போட்டிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள், பழனி சட்டமன்ற உறுப்பினர் திரு.இ.பெ.செந்தில்குமார் முன்னிலையில் இன்று(10.09.2024) தொடங்கி வைத்தார்.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்ததாவது:-

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள், கல்விக்கு மட்டும் மல்லாமல் விளையாட்டிற்கும் முக்கியத்துவம் அளித்து, மாணவ, மாணவிகள், இளைஞர்களின் விளையாட்டுத் திறனை ஊக்குவித்திடும் வகையில் விளையாட்டுத் துறைகளில் பல்வேறு சிறப்புத் திட்டங்களை தொடர்ந்து செயல்படுத்தி வருகிறார்கள். தமிழ்நாட்டில் பல்வேறு சர்வதேச மற்றும் தேசிய அளவிலான விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்று வருகிறது. இதன், மூலம், தமிழ்நாட்டில் இளைஞர்கள் மற்றும் மாணவ, மாணவியர்கள் பெருமளவில் விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்று சாதனை புரிந்து வருகிறார்கள்.

இளைய சமுதாயத்தினரின் அறிவு வளர்ச்சியை மட்டுமல்லாது அவர்களது உடல் வளர்ச்சி, மன வளர்ச்சி, உடல் நலம் ஆகியவற்றையும் பேணி பாதுகாக்க வேண்டியதன் அவசியத்தை கருத்தில் கொண்டு, கல்விக்கு அளிக்கும் முக்கியத்துவத்தை விளையாட்டிற்கும் அளிக்க வேண்டும் என்ற உயரிய நோக்கில், பல்வேறு திட்டங்களை தமிழக அரசு அறிவித்து செயல்படுத்தி வருகிறது.

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் ஆட்சி பொறுப்பேற்ற பின்பு செஸ் ஒலிம்பியாட் போட்டி மாமல்லபுரத்தில் நடத்தப்பட்டது. தொடர்ந்து கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டுப்போட்டிகள், முதலமைச்சர் கோப்பைக்கான விளையாட்டு போட்டிகள், பேரறிஞர் அண்ணா விரைவு சைக்கிள் போட்டிகள், பேரறிஞர் அண்ணா மராத்தான் போட்டிகள், அரசு ஊழியர்களுக்கான விளையாட்டுப் போட்டிகள், மாற்றுத்திறனாளிகளுக்கான விளையாட்டுப் போட்டிகள், நீச்சல் கற்பித்தல் பயிற்சி முகாம் மற்றும் கோடைகால பயிற்சி முகாம்கள் நடைபெற்று வருகிறது.

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை சார்பில் முதலமைச்சர் கோப்பைக்கான மாவட்ட அளவிலான விளையாட்டுப் போட்டிகள்-2024, இன்று(10.09.2024) தொடங்கி 24.09.2024 வரை நடத்தப்படுகிறது.

பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள், பொதுமக்கள், அரசு ஊழியர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் ஆகிய ஐந்து பிரிவுகளில் பல்வேறு வகையான விளையாட்டுப் போட்டிகள் ஆண், பெண் இருபாலரும் பங்கேற்கும் வகையில், மாவட்ட அளவில் 27 விளையாட்டுக்கள், 53 வகைகளில் மாவட்ட, மண்டலம் மற்றும் மாநில அளவில் போட்டிகள் நடத்தப்பட உள்ளன. இணையதளத்தின் வாயிலாக பதிவு செய்தவர்கள் மட்டுமே போட்டிகளில் கலந்து கொள்ள அனுமதிக்கப்படுவர்.

போட்டிகளில் கலந்து கொள்ள வருபவர்கள் தங்களது ஆதார் நகல், பிறந்த தேதி சான்று, பள்ளி மற்றும் கல்லூரியில் பயில்வதற்கான சான்று (Bonafide or ID card), மற்றும் வங்கி கணக்கு புத்தகத்தின் முதல் பக்க நகல், அரசு ஊழியர்கள் (பணிபுரியும் அடையாள அட்டை), மாற்றுத்திறனாளிகள் (மாற்றுத்திறனாளிகளுக்கான அடையாள அட்டை), பொதுப் பிரிவு (இருப்பிட சான்று) ஆகியவற்றை கண்டிப்பாக கொண்டு வருதல் வேண்டும். மேலும் போட்டிகளில் கலந்து கொள்ளும் வீரர், வீராங்கனைகள் அனைவரும் கண்டிப்பாக விளையாட்டுச் சீருடை மற்றும் காலணியுடன் பங்கேற்க வேண்டும்.

திண்டுக்கல் மாவட்ட அளவிலான பல்வேறு போட்டிகளில் பங்கேற்க மொத்தம் 21,626 வீரர், வீராங்கனைகள் தங்கள் பெயர்களை பதிவு செய்துள்ளனர். போட்டிகள் தொடக்க நாளான இன்று(10.09.2024) பள்ளி மாணவ, மாணவிகளுக்கான தடகளம், கேரம், கூடைப்பந்து மற்றும் கிரிக்கெட், பள்ளி மற்றும் கல்லுாரி மாணவ, மாணவிகளுக்கான நீச்சல், மேஜைப்பந்து, பள்ளி மாணவிகளுக்கான ஹாக்கி, பள்ளி மாணவர்களுக்கான கபாடி ஆகிய போட்டிகள் தொடங்கி வைக்கப்பட்டுள்ளன. இன்றையதினம் மட்டும் 550 வீரர், வீராங்கனைகள் பல்வேறு போட்டிகளில் பங்கேற்கின்றனர்.

தமிழ்நாடு அரசின் சார்பில் பல்வேறு விளையாட்டுப் போட்டிகள் தொடர்ந்து நடைபெறுவதால் திண்டுக்கல் மாவட்டத்தினைச் சேர்ந்த இளைஞர்கள் மற்றும் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் ஒவ்வொரு வரும் தங்கள் திறனுக்கேற்ற விளையாட்டினை தேர்ந்தெடுத்து அதில் தங்கள் திறனை மேம்படுத்திக் கொண்டு, சர்வதேச மற்றும் தேசிய அளவிலான விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்று வெற்றிபெற்று மாவட்டத்திற்கு பெருமை சேர்க்க வேண்டும், என மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்தார்.

மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் தடகளப் போட்டியில் வெற்றி பெற்ற வீரர்களுக்கு வாழ்த்து தெரிவித்து, போட்டிகளில் பங்கேற்கவுள்ள விளையாட்டு வீரர்கள், வீராங்கனைகள் சாதனைப்படைக்க வாழ்த்துக்களை தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியில், திண்டுக்கல் வருவாய் கோட்டாட்சியர் திரு.சக்திவேல், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் திரு.அ.கொ.நாகராஜபூபதி, மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நல அலுவலர் திரு.ஆர்.சிவா, திண்டுக்கல் மேற்கு வட்டாட்சியர் திரு.ஜெயபிரகாஷ், பயிற்சியாளர்கள், விளையாட்டு வீரர் மற்றும் வீராங்கனைகள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.