Close

Child Development – Meeting

Publish Date : 01/06/2022
.

செ.வெ.எண்:-60/2022

நாள்:30.05.2022

திண்டுக்கல் மாவட்டம்

திண்டுக்கல் மாவட்டத்தில் ஊட்டச்சத்து குறைபாடுடைய குழந்தைகள் கண்டறியும் பணிகள் தொடர்பான ஆலோசனைக் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் ச.விசாகன், இ.ஆ.ப, அவர்கள் தலைமையில் நடைபெற்றது.

திண்டுக்கல் மாவட்டத்தில் ஊட்டச்சத்து குறைபாடுடைய குழந்தைகள் கண்டறியும் பணிகள் தொடர்பான ஆலோசனைக் கூட்டம், திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் ச.விசாகன், இ.ஆ.ப, அவர்கள் தலைமையில் இன்று(30.05.2022) நடைபெற்றது. கூடுதல் ஆட்சியர்(வளர்ச்சி) திரு.ச.தினேஷ்குமார்,இ.ஆ.ப., அவர்கள் முன்னிலை வகித்தார்.

இக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் பேசியதாவது:-

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் ஊட்டச்சத்து குறைபாடுடைய குழந்தைகளை கண்டறிந்து, மருத்துவ பரிசோதனை மற்றும் தொடர் கண்காணிப்பு பணிகள் மேற்கொள்ள உத்தரவிட்டதன் அடிப்படையில், திண்டுக்கல் மாவட்டத்தில் ஊட்டச்சத்து குறைபாடு மற்றும் மருத்துவ சிகிச்சை தேவைப்படும் குழந்தைகள் கணக்கெடுப்பினை விரைந்து முடிக்க வேண்டும். பெரும்பாலும் மிகவும் ஏழ்மையான நிலையில் உள்ள குழந்தைகள், ஊட்டச்சத்து குறைபாடுடைய குழந்தைகளாக உள்ளன. இக்குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து குறைபாடு உள்ளதா அல்லது மருத்துவ சிகிச்சைகள் தேவைப்படுகிறதா என்பதை கண்டறிய வேண்டும்.

திண்டுக்கல் மாவட்டத்தில் அங்கன்வாடி மையங்களில் ஒரு லட்சத்து 39 ஆயிரம் குழந்தைகள் உள்ளனர். இதில் கிட்டத்தட்ட 32 ஆயிரம் குழந்தைகள் மருத்துவ பரிசோதனை மற்றும் ஊட்டச்சத்து குறைபாடுள்ள குழந்தைகளாக கண்டறியப்பட்டுள்ளது. இதில் 27 ஆயிரம் குழந்தைகள் மிதமான ஊட்டச்சத்து குறைபாடுடைய குழந்தைகளாகவும், 7,700 குழந்தைகள் கடுமையான ஊட்டச்சத்து குறைபாடு மற்றும் மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்பட வேண்டிய குழந்தைகளாகவும் கண்டறியப்பட்டு;ள்ளன. இக்குழந்தைகளுக்கு மருத்துவத்துறையின் மூலம் உடனடியாக மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு, சிகிச்சைகள் மற்றும் அறுவை சிகிச்சை தேவைப்படும் குழந்தைகளுக்கு உடனடியாக சிகிச்சை அளிக்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். மேலும், இக்குழந்தைகுள்கு சிறப்பு உணவுகள் வழங்கும் நடவடிக்கைகளும் மேற்கொள்ள வேண்டும். இதுவரை 165 குழந்தைகளுக்கு அனிமிக்கா உள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது. இக்குழந்தைகளுக்கு உடனடியாக தேவையான மருந்துகள் வழங்கப்பட்டு, மருத்துவ நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

அங்கன்வாடி பணியாளர்கள்தான், பெற்றோர்களுக்கு அடுத்து குழந்தைகளின் இரண்டாம் பெற்றோராக திகழ்பவர்கள். நீங்கள் ஊட்டச்சத்து குறைபாடுடைய குழந்தைகளுக்கு சிறப்பு உணவுகள் கொடுக்கப்படுவதை உறுதி செய்துகொள்ள வேண்டும். மேலும், இக்குழந்தைகள் குறித்து மருத்துவர்களிடம் கலந்தாலோசித்து, தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். அனைவரும் ஒருங்கிணைந்து ஊட்டச்சத்து குறைபாடு; இல்லாத குழந்தைகள் உள்ள மாவட்டமாக திண்டுக்கல் மாவட்டத்தை உருவாக்க முழுமையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் பேசினார்.

இக்கூட்டத்தில், துணை இயக்குநர்(சுகாதாரம்) மரு.மு.வரதரஜன், ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்டம் மாவட்ட திட்ட அலுவலர் திருமதி சி.பூங்கொடி, பூச்சியியல் துறை உதவி இயக்குநர் மரு.நந்தகுமார், மாவட்ட சமூக நலத்துறை அலுவலர் திருமதி சி.புஷ்பகலா உட்பட பலர் கலந்துகொண்டனர்.

செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.