Close

Children Protection Rally

Publish Date : 17/11/2023
.

செ.வெ.எண்:-34/2023

நாள்: 14.11.2023

திண்டுக்கல் மாவட்டம்

“குழந்தைகளுக்கான நடை“ விழிப்புணர்வு பேரணியை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில், சமூக பாதுகாப்புத்துறை மற்றும் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகம் சார்பில் குழந்தைகளுக்கான நடை விழிப்புணர்வு பேரணியை மாவட்ட மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் இன்று(14.11.2023) கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்ததாவது:-

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள், பெண்கள் மற்றும் பெண் குழந்தைகளுக்காக பல்வேறு திட்டங்களை அறிவித்து தொடர்ந்து செயல்படுத்தி வருகிறார்கள். பெண்கள் உயர்கல்வி கற்று, தங்கள் திறமைகளை வளர்த்துக்கொள்ள வேண்டும் என்பதற்காக 6 முதல் 12-ஆம் வகுப்பு வரை அரசு பள்ளிகளில் படித்து, உயர்கல்வி படிக்கும் பெண்களுக்கு புதுமைப் பெண் திட்டத்தில் மாதம் ரூபாய் 1,000 வழங்கப்படுகிறது. தமிழ்நாடு ஊரக வாழ்வாதார இயக்கத்தின் மூலம் 8-ஆம் வகுப்பு படித்த பெண்களுக்கு தொழிற்பயிற்சிகள் அளிக்கப்படுகிறது. தொழிற்பயிற்சி முடித்தவர்கள் சுயமாக தொழில் தொடங்கிட வங்கிகளில் கடனுதவிகள் பெறுவதற்கான ஆலோசனைகள் வழங்கப்படுகிறது. 2 பெண் குழந்தைகள் உள்ள குடும்பத்தினருக்கு தலா ரூ.25,000 வீதம் ரூ.50,000 வைப்பு நிதியாக வழங்கி வருகிறார்கள். அந்த பெண் குழந்தைகளுக்கு 18 வயது நிரம்பியவுடன் இந்த தொகை வழங்கப்பட்டு வருகிறது.

அந்த வகையில், பெண் குழந்தைகளை பாதுகாக்கவும், பெண் குழந்தைகளுக்கு கற்பிக்கவும் தமிழக அரசு சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. பெண் சிசுக்களை பாதுகாப்பதற்காக கருவில் இருக்கும் பெண் சிசுக்களை பாதுகாத்தல், பிறந்த பெண் குழந்தைகளை பாதுகாத்தல், பெண் குழந்தைகளை பாலியல் தொல்லைகளில் இருந்து பாதுகாத்தல், குழந்தை திருமணத்தை தடுத்து பெண் குழந்தைகளின் ஆரோக்கியத்தை மேம்படுத்தல், பெண் குழந்தைகளுக்கு எதிராக நடைபெறும் குற்றங்களை தடுத்தல் போன்ற பல்வேறு நடவடிக்கைகள் தொடர்பாக பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் இன்று(14.11.2023) “குழந்தைகளுக்கான நடை“ விழிப்புணர்வு பேரணி நடைபெறுகிறது.

பெண் குழந்தைகளுக்கு முழுமையான பாதுகாப்பு கிடைக்க அரசு சார்பில் மேற்கொள்ளப்படும் குழந்தைகள் பாதுகாப்பு நடவடிக்கைகளுக்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும், என மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்தார்.

மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தொடங்கிய “குழந்தைகள் நடை“ விழிப்புணர்வு பேரணி அஞ்சலி ரவுண்டானா வரை சென்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் சென்று முடிவடைந்தது.

இந்நிகழ்ச்சியில், மாவட்ட சமூக நல அலுவலர் திருமதி கோ.புஷ்பகலா, குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் திரு.சிவக்குமார், தொழிலாளர் நலத்துறை உதவி ஆணையாளர் திருமதி ஜீவசிந்து, தன்னார்வலர்கள் பலர் கலந்துகொண்டனர்.

செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.