Close

CM Insurance Scheme

Publish Date : 28/09/2021
.

செ.வெ.எண்:-52/2021

நாள்:-27.09.2021

முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டுத்திட்டத்துடன் ஒருங்கிணைந்த பிரதம மந்திரி மக்கள் ஆரோக்கிய திட்டத்தின் கீழ் 10 பயனாளிகளுக்கு மருத்துவ காப்பீட்டு அடையாள அட்டைகளை மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் ச.விசாகன், இ.ஆ.ப., அவர்கள் வழங்கி, இத்திட்டத்தின் கீழ் சிறப்பாக பணிபுரிந்த அலுவலர்களுக்கு பாராட்டு மற்றும் நினைவு பரிசு சான்றிதழ்களை வழங்கினார்

திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பில், முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டுத்திட்டத்துடன் ஒருங்கிணைந்த பிரதம மந்திரி மக்கள் ஆரோக்கிய திட்டத்தின் கீழ் 10 பயனாளிகளுக்கு மருத்துவ காப்பீட்டு அடையாள அட்டைகளை இன்று (27.09.2021) மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் ச.விசாகன், இ.ஆ.ப., அவர்கள் வழங்கி, இத்திட்டத்தின் கீழ் சிறப்பாக பணிபுரிந்த அலுவலர்கள் மற்றும் பணியாளர்களுக்கு பாராட்டுச் சான்றிதழ்களை வழங்கி தெரிவித்ததாவது:-

உயிர் காக்கும் மருத்துவ கிசிச்சைகளை கட்டணமில்லாமல் ஏழை மற்றும் குறைந்த வருவாய் பெறும் பொதுமக்கள் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற வேண்டும் என்ற உயரிய நோக்குடன் உயிர்காக்கும் உயர் கிசிச்சைக்கான முதலமைச்சர் கலைஞர் காப்பீட்டுத்திட்டம் 23.07.2009 அன்று தமிழக அரசால் தொடங்கப்பட்டது. ஒன்றிய அரசின் பிரதம மந்திரி மக்கள் ஆரோக்கிய திட்டம், விரிவான மருத்துவக் காப்பீட்டுத்திட்டத்தின் கீழ் 23.09.2018 முதல் ஒருங்கிணைந்து செயல்படுத்தப்பட்டு வருகிறது.

மாண்புமிகு தமிழக முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்களின் அறிவுறத்தலின்படி, கொரோனா சிகிச்சை இத்திட்டத்தின்கீழ் இணைக்கப்பட்டு, திண்டுக்கல் மாவட்டத்தில் 984 நோயாளர்கள் சிகிச்சை பெற்று பயனடைந்துள்ளனர். சிகிச்சை பெற்றவர்களுக்காக ரூ.10,23,64,460/- (பத்து கோடியே இருபத்து மூன்று இலட்சத்து அறுபத்து நான்காயிரத்து நானுற்று அறுபது மட்டும்) வழங்கப்பட்டுள்ளது.

இத்திட்டத்தின் கீழ் ஒரு குடும்பம் ஒரு ஆண்டிற்கு ரூ.5 லட்சம் வரை கட்டணமின்றி சிகிச்சை பெற வழிவகை செய்யப்பட்டுள்ளது. இத்திட்டத்தில் பயன்பெற பயனாளிகளின் ஆண்டு வருமானம் ரூ.72 ஆயிரத்திற்கும் குறைவாக இருத்தல் வேண்டும். இத்திட்டத்தில் மொத்தம் 1,450 மருத்துவ மற்றும் 38 பரிசோதனைகளும், அதனோடு தொடர்புடைய 154 தொடர் சிகிச்சைகளும், 8 உயர் அறுவை சிகிச்சைகளும் சேர்க்கப்பட்டுள்ளன. இத்திட்டத்தில் வரைமுறைப்படுத்தப்பட்ட சிகிச்சைகள் அனைத்தும் திட்டம் தொடங்கப்பட்ட நாள் முதல் அங்கீகரிக்கப்பட்ட அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகள் அனைத்திலும் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

திண்டுக்கல் மாவட்டத்தில் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையும், 12 அரசு மருத்துவமனைகளும், 41 தனியார் மருத்துவமனைகளும் இத்திட்டத்தில் அங்கீகரிக்கப்பட்டுள்ளன.

2021-2022-ம் ஆண்டில் அரசு மருத்துவமனைகளில் 1902 நோயாளர்கள் சிகிச்சை பெற்று பயனடைந்துள்ளனர். முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத்திட்டத்தின் மூலம் சிகிச்சை பெற்றவர்களுக்காக, ரூ.1,90,66,650/- (ரூபாய் ஒரு கோடியே தொண்ணுறு இலட்சத்து அறுபத்து ஆறாயிரத்து அறுநூற்று ஐம்பது மட்டும்) வழங்கப்பட்டுள்ளது.

மேலும், தனியார் மருத்துவனைகளில் 5,178 நோயாளர்கள் சிகிச்சை பெற்று பயனடைந்துள்ளனர். இத்திட்டத்தின் மூலம் சிகிச்சை பெற்றவர்களுக்காக ரூ.17,54,40,637/- (ரூபாய் பதினேழு கோடியே ஐம்பத்து நான்கு இலட்சத்து நாற்பதாயிரத்து அறுநூற்று முப்பத்து ஏழு மட்டும்) வழங்கப்பட்டுள்ளது.

மேலும், திண்டுக்கல் மாவட்டத்தில் இத்திட்டத்தின்கீழ், 4,88,080 குடும்பங்களுக்கு மருத்துவக்காப்பீட்டு திட்ட அட்டை வழங்கப்பட்டுள்ளது. மேலும், விதவைகள், ஆதரவற்றவர்கள், வயது முதிர்வு ஓய்வு ஊதியம் பெறுபவர்கள், முகாம் வாழ் இலங்கை தமிழர்கள், முகாம்களுக்கு வெளியே வசிக்கும் பதிவு செய்த இலங்கை தமிழர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு வருமான வரம்பு இல்லை.

இத்திட்டத்தின் கீழ் இன்றைய தினம் 10 பயனாளிகளுக்கு மருத்துவ காப்பீட்டு அடையாள அட்டைகள் வழங்கப்பட்டுள்ளது. மேலும், இத்திட்டத்தின் கீழ் சிறப்பாக பணிபுரிந்த காப்பீட்டு ஒருங்கிணைப்பாளர்கள், வார்டு மேலாளர்கள் ஆகியோர்களை ஊக்குவிக்கும் பொருட்டு, பாராட்டுச் சான்றிதழ்கள் வழங்கப்பட்டுள்ளது. மேலும், இத்திட்டத்தின் கீழ் பயன்பெற்ற 5 பயனாளிகளை கௌரவிக்கும் பொருட்டு, சிறப்பு பரிசு வழங்கப்பட்டது. ஏழை, எளியோர்கள் மருத்துவ ரீதியாக சிகிச்சை பெற்று பயன்பெறும் வகையில் இத்திட்டம் சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. எனவே, இதனை பொதுமக்கள் அறிந்து கொண்டு பயன்பெறலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் ச.விசாகன், இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியில், மாவட்ட வருவாய் அலுவலர் திருமதி வே.லதா, இணை இயக்குநர் (நலப்பணிகள்) மரு.எஸ்.அன்புச்செல்வன், மாவட்ட திட்ட அலுவலர் (CMCHIS) திரு.இரா.விஜய் ஆனந்த் உட்பட துறை அலுவலர்கள் பலர் கலந்துகொண்டனர்.

செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.