Close

Co-optex Diwali sales

Publish Date : 22/10/2021
.

.

செ.வெ.எண்:-45/2021

நாள்:22.10.2021

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பட்டு, பருத்தி கைத்தறி ரகங்களுக்கு 30 சதவீதம் சிறப்புத் தள்ளுபடி வழங்கப்படுகிறது–மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் ச.விசாகன், இ.ஆ.ப., அவர்கள் கோ-ஆப்டெக்ஸ் விற்பனை நிலையத்தில் தீபாவளி விற்பனையை துவக்கி வைத்து தகவல்.

திண்டுக்கல் அண்ணா வணிக வளாக மையத்தில் உள்ள கோ-ஆப்டெக்ஸ் விற்பனை நிலையத்தில், மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் ச.விசாகன், இ.ஆ.ப., அவர்கள் இன்று(22.10.2021) தீபாவளி பண்டிகை சிறப்பு விற்பனையினை, குத்துவிளக்கு ஏற்றி துவக்கி வைத்து தெரிவித்ததாவது:-

கோ-ஆப்டெக்ஸ், என அனைவராலும் அழைக்கப்படும் தமிழ்நாடு கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கம், 1935-ஆம் ஆண்டில் துவக்கப்பட்டு, தொடர்ந்து 86 ஆண்டுகளாக தமிழ்நாட்டிலுள்ள கைத்தறி நெசவாளர்களுக்கும், வாடிக்கையாளர்களுக்கும் சிறப்பான முறையில் சேவை புரிந்து வருகிறது. இந்தியாவில் உள்ள கைத்தறி நிறுவனங்களிலேயே முதன்மை நிறுவனமாக கோ-ஆப்டெக்ஸ் திகழ்வதற்கு நெசவாளர்களின் ஒத்துழைப்பும், வாடிக்கையாளர்களின் பேராதரவும் தான் முக்கிய காரணம் ஆகும்.

கைத்தறி ரகங்களின் விற்பனையை அதிகரிக்க தமிழக அரசு ஆண்டு தோறும் பண்டிகை காலங்களில் 30 சதவீதம் சிறப்பு தள்ளுபடி வழங்கி வருகிறது. எதிர்வரும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பட்டு, பருத்தி கைத்தறி ரகங்களுக்கு 30 சதவீதம் சிறப்புத் தள்ளுபடி வழங்கப்படுகிறது. பண்டிகையை முன்னிட்டு பல வண்ணங்களில் வாடிக்கையாளர்களைக் கவரும் வண்ணம் பலவித வடிவமைப்புகளில் மென் பட்டு சேலைகள், பருத்தி சேலைகள், படுக்கை விரிப்புகள், தலையணை உறைகள் மற்றும் நவீன காலத்திற்கு உகந்தமான இரகங்கள் தீபாவளி பண்டிகைக்காக தருவிக்கப்பட்டுள்ளது.

மேலும், பாரம்பரிய ரகங்களை புதுப்பிக்கும் விதமாக செட்டிநாடு சேலைகள், கைத்தறி சுங்கடி சேலைகள், நவகக்கிரஹா காட்டன் சேலைகள், மதுரை, தஞ்சாவூர் காட்டன் சேலைகள், பரமக்குடி 1000 புட்டா சேலைகள், ஏற்றுமதி இரகங்கள் ஆகியவை பண்டிகைக்காக தருவிக்கப்பட்டுள்ளன. மேலும், நவீன யுக ஆடவர்களை கவரும் விதமாக லினன்ஃபருத்தி (Linen / Cotton) சட்டைகள், தூய பருத்தி சட்டைகள், பாலிகாட்டன் சட்டைகள், நைட்டிகள் மற்றும் குர்தீஸ் இரகங்கள் கண்களைக் கவரும் வண்ணங்களில் வாடிக்கைளாளர்களுக்காக தருவிக்கப்பட்டுள்ளது. கோ-ஆப்டெக்ஸ் ஜவுளி இரகங்களை மின் வணிக வலைதளமான www.cooptex.com என்ற இணைய தளத்தின் மூலமும் பெற்றுக் கொள்ளலாம்.

மதுரை மண்டலத்தின் கட்டுப்பாட்டில் இயங்கி வரும் 17 விற்பனை நிலையங்களின் மூலம் 2021-22-ஆம் ஆண்டிற்கு விற்பனை குறியீடாக ரூ.20 கோடி இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. திண்டுக்கல் மாவட்டத்தில் மூன்று விற்பனை நிலையங்களின் விற்பனை குறியீடாக முறையே ரூ.2.45 கோடி நிர்ணயிக்கப்பட்டுள்ளது. திண்டுக்கல் விற்பனை நிலையத்தில் சென்ற ஆண்டு தீபாவளி விற்பனை ரூ.69.61 இலட்சங்கள் ஆகும். நடப்பு ஆண்டு 2021-22-ல் விற்பனை குறியீடாக ரூ.1.20 கோடி நிர்ணயிக்கப்பட்டுள்ளது என மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் ச.விசாகன், இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்தார்கள்.

இவ்விழாவில், மண்டல மேலாளர் திரு.ஆர்.மோகன்குமார், மேலாளர் (தணிக்கை) திரு.ஜே.நாகராஜன், மேலாளர் (வ மற்றும் உ) திரு.எஸ்.ஞானப்பிரகாசம், உதவி விற்பனையாளர் திரு.எஸ்.அருண் உட்பட பலர் கலந்துகொண்டார்கள்.

செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.