Close

Coffee with collector

Publish Date : 26/08/2025
.

செ.வெ.எண்:-97/2025

நாள்:-25.08.2025

திண்டுக்கல் மாவட்டம்

‘‘Coffee with Collector’ – திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த இளம்தொழில் முனைவோர்களுடனான கலந்துரையாடல் நிகழ்ச்சி மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது.

திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில் ஒவ்வொரு வாரமும் திங்கட்கிழமை பிற்பகல் ‘Coffee with Collector’ எனும் கலந்துரையாடல் நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. கடந்த 30.06.2025 அன்று முதல் 18.08.2025 வரை எட்டு நிகழ்ச்சிகள் நடைபெற்றுள்ளன. இந்நிகழ்ச்சிகளில் இதுவரை பள்ளி மற்றும் கல்லூரிகளைச் சார்ந்த 200 மாணவ/மாணவியர் மற்றும் பிறதுறைகளைச் சார்ந்த 25 நபர்கள் கலந்து கொண்டுள்ளனர்.

இன்று (25.08.2025) ஒன்பதாவது நிகழ்வாக திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த இளம்தொழில் முனைவோர்களுடன் ‘Coffee with Collector’ எனும் கலந்துரையாடல் நிகழ்ச்சி திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது. திண்டுக்கல் மாவட்டத்தில் புதிய தொழில்கள் தொடங்குதல், புத்தாக்கம், தொழில்களில் புதுமைகளைப் புகுத்துதல், தொழில் வளர்ச்சி, ஏற்கனவே மேற்கொள்ளப்பட்டு வரும் தொழில்களை புதிய உத்திகள் மற்றும் சிந்தனைகள் மூலமாக மேம்பாடு அடையச் செய்தல், புதிய நிறுவனங்களை நிறுவுதல், சந்தை வாய்ப்புகள் மற்றும் திண்டுக்கல் மாவட்டத்திற்கு சிறப்பாக பங்களிப்பை வழங்குவதற்கான திட்டங்கள் வகுத்தல் சார்ந்து கலந்துரையாடல் நடைபெற்றது. நிகழ்ச்சியில் கலந்துகொண்ட இளம்தொழில்முனைவோர்கள் வேளாண்மை, இயற்கை விவசாயம், சுற்றுலா மேம்பாடு, சிறு/குறு/நடுத்தர தொழில்களை வளர்ச்சி அடையச் செய்தல், பள்ளி/கல்லூரி மாணவ/மாணவியரிடையே மென்திறன்களை வளர்த்தல், ஆங்கில தொடர்புத்திறன் வகுப்புகளை நடத்துதல், அதற்கான சிறிய கலைத்திட்டம் உருவாக்குதல் உள்ளிட்ட தங்கள் திட்டங்கள் குறித்து விரிவான கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டனர். மேலும், விவசாயம் தொடர்பான வளர்ச்சிக்காக கிராமங்களைத் தத்தெடுக்க விரும்புவதாகவும், கிராமப் பகுதிகளில் உள்ள மகளிரின் உற்பத்திப் பொருட்களின் வணிகம்/விற்பனைக்கு உதவிட தயாராக இருப்பதாகவும் தெரிவித்தனர். இதற்காக வெப்சைட் டிசைனிங், விழிப்புணர்வு வீடியோக்களை எவ்வித கட்டணமும் இன்றி தயார் செய்து வழங்கிட தயாராக உள்ளதாகவும் தெரிவித்தனர்.

மாவட்ட ஆட்சியர் அவர்கள் பேசுகையில், திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள மலைப்பகுதிகளில் வாழும் பழங்குடியினரை மேம்படுத்தும் நோக்கில் திட்டங்கள் வகுக்கவும், அரசுப் பள்ளிகளுக்கு உதவிடும் வண்ணம் திட்டமிடவும் கேட்டுக்கொண்டார். மேலும், மாவட்ட தொழில் மையம், தொழில் வழிகாட்டி மையம், தமிழ்நாடு தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம் மூலம் மேற்கொள்ளப்பட்டு வரும் நடவடிக்கைகள் குறித்து விரிவாக எடுத்துரைத்தார்.

இந்நிகழ்ச்சியில் உதவி ஆட்சியர் (பயிற்சி) மரு.வினோதினி, இ.ஆ.ப., மாவட்ட தொழில் மைய பொது மேலாளர் திரு.பூ.சு.கமலக்கண்ணன், தமிழ்நாடு புத்தாக்கம் மற்றும் புத்தொழில் இயக்க மதுரை வட்டார மைய ஒருங்கிணைப்பாளர் திரு.க.சக்திவேல், தொழில் வழிகாட்டி நிறுவனத்தைச் சார்ந்த திரு.ப.ராஜவேல், தமிழ்நாடு தொழில்முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவன மாவட்டத் திட்ட மேலாளர் திரு.அ.சையதுஅப்துல்காதர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.