Collector Agri GDP

செ.வெ.எண்:-60/2021
நாள்:-30.09.2021
விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் ச.விசாகன், இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது.
திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் இன்று (30.09.2021) மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் ச.விசாகன், இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்ததாவது:-
தமிழகம் முழுவதும் கிராமங்களில் வசிக்கும் விவசாயிகளின் விபரங்களை கணக்கெடுத்து மத்திய, மாநில அரசுகளின் விவசாயம் சார்ந்த திட்டங்களை பயன்படுத்தி கொள்வதற்காக, கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. இதற்காக ஒவ்வொரு ஆண்டும் 2500 கிராமங்கள் தேர்வு செய்யப்பட்டு, அங்குள்ள விவசாயிகளின் விபரங்களை பெற்று, அந்த கிராமங்களில் விவசாயத்திற்காக மத்திய, மாநில அரசுகளில் திட்டங்கள் செயல்படுத்தப்பட உள்ளன. 5 ஆண்டுகளின் முடிவில் அனைத்து கிராம விவசாயிகளும் மத்திய, மாநில அரசுகளில் திட்டங்களால் பயன் அடைய வேண்டும் என்பதே இத்திட்டத்தின் நோக்கமாகும்.
இதற்காக வேளாண் மற்றும் உழவர் நலத்துறை இயக்குநர் அலுவலகம் முதற்கட்டமாக ஆத்தூர் வட்டாரத்தில் உள்ள 7 பஞ்சாயத்துகள் தேர்வு செய்யப்பட்டன. அதன்படி, மணலூர், என்.பஞ்சம்பட்டி, போடிகாமன்வாடி, ஆத்தூர், வக்கம்பட்டி, பித்தாளைப்பட்டி, பாளையங்கோட்டை உள்ளிட்ட பஞ்சாயத்துகள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. மேற்கண்ட கிராமங்களில் உள்ள சிறு, குறு விவசாயிகள், ஆதிதிராவிட விவசாயிகள் மற்றும் பெண் விவசாயிகள் தங்ளது விபரங்களை ஆத்தூர் வட்டார வளர்ச்சி அலுவலகத்தை தொடர்பு கொண்டு அதற்கான படிவத்தை பூர்த்தி செய்து கொடுத்து பயன்பெறலாம்.
மேலும், திண்டுக்கல் மாவட்டத்தில் விவசாயிகள் பயன்பெறும் வகையில் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தினால் இந்திய அரசின் பரவலாக்கப்பட்ட நெல் கொள்முதல் திட்டத்தின்கீழ் (கரீப் மார்கெட்டிங் பருவம் 2021-2022) நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் சிறக்கப்பட்டு 01.10.2021 முதல் நெல் கொள்முதல் நடைபெற உள்ளது. விவசாயிகள் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் காத்திருக்காமல் எளிதில் பதிவு செய்து கொண்டு நெல் விற்பனை செய்வதற்கு ஏதுவாக எதிர்வரும் கொள்முதல் பருவம் 2021-2022-ல் விவசாயிகள் “https://tncsc-edpc.in/” என்ற இணையதளத்தில் தங்களது கைப்பேசி எண்ணினை பதிவு செய்து, கைப்பேசி எண்ணிற்கு வரும் OTP-யை உள்ளீடு செய்து, தங்களது பெயர், ஆதார் எண், புல எண், வங்கிக் கணக்கு, IFSC எண், சாகுபடி விவரம்(சொந்தம் / குத்தகை), சர்வே எண், மொத்த சாகுபடி பரப்பு, சாகுபடி செய்யப்பட்ட பரப்பு, மாவட்டம், கிராமம், உத்தேச மகசூல் உள்ளிட்ட விவரங்களை எளிய முறையில் பதிவேற்றம் செய்து, கொள்முதல் செய்ய வேண்டிய தேதியினை முன்பதிவு செய்திட வழிவகை செய்யப்பட்டுள்ளது.
மேலும், மேற்கண்டுள்ள இணையதளத்தில் பதிவு செய்யப்பட்டவுடன், விவசாயிகளின் நிலம் இருக்கும் கிராமங்களின் அடிப்படையில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டு, இணைய வழியின் மூலமாகவே கிராம நிர்வாக அலுவலரின் ஒப்புதல் பெறப்படும்.
ஒதுக்கீடு செய்யப்பட்ட நேரடி நெல் கொள்முதல் நிலையத்தின் பெயர், நெல் விற்பனை செய்யப்படும் நாள், நேரம் ஆகிய விவரங்கள் விவசாயிகளின் அலைபேசி எண்ணிற்கு குறுஞ்செய்தி மூலமாக அனுப்படும். விவசாயிகள் தாங்கள் பெற்ற குறுஞ்செய்தியின் அடிப்படையில் நீண்ட நேரம் காத்திருக்காமல் குறித்த காலத்தில் நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் தாங்கள் விளைவித்த நெல்லை விற்பனை செய்யலாம். ஒருவேளை சம்பந்தப்பட்ட கிராம நிர்வாக அலுவலரால் ஒப்புதல் செய்யபடாதபட்சத்தில் சம்பந்தப்பட்ட கொள்முதல் அதிகாரி (தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம்) சம்மந்தப்பட்ட கொள்முதல் நிலையத்தை நேரடியாக ஆய்வு செய்து ஒப்புதல் அளிப்பார். இவ்வாறு e-DPC முறையின் மூலம் நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் பதிவு செய்து இணையத்தில் ஒப்புதல் பெற்ற விவசாயி நேரடியாக நெல் கொள்முதல் நிலையத்தில் நெல் மூட்டைகளை விற்பனை செய்து பயன்பெறலாம். இந்த இணையவழி பதிவுத் திட்டத்திற்கு அனைத்து விவசாயிகளும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.
நடப்பு சம்பா 2021 பருவதத்திற்கான நெற்பயிரை காப்பீடு செய்ய 1 ஏக்கருக்கு ரூ.446.62, மற்றும் மக்காச்சோளப்பயிரை காப்பீடு செய்ய 1 ஏக்கருக்கு பிரீமியம் ரூ.385.50 ஆகும். பிரீமியம் செலுத்த கடைசி நாள் நெல் பயிருக்கு 15.12.2021 மற்றும் மக்காச்சோளத்திற்கு 15.11.2021 தேதி ஆகும். காப்பீடு நிறுவனம் அக்ரிகல்சுரல் இன்சூரன்ஸ் கம்பெனி லிட், ஆத்தூர் வட்டாரத்தில் நெற்பயிருக்கு ஆத்தூர், அய்யம்பாளையம் மற்றும் சின்னாளப்பட்டி குறுவட்டத்தின்கீழ் வரும் அனைத்து வருவாய் கிராமங்களிலும், மக்காச்சோளத்திற்கு ஆத்தூர் குறுவட்டத்தின் கீழ் வரும் அனைத்து வருவாய் கிராமங்களிலும் இத்திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. உடனே உங்கள் அருகாமையில் உள்ள பொது சேவை மையங்கள் அல்லது தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள் அல்லது வர்த்தக வங்கிகளை அணுகி பிரதம மந்திரியின் புதுப்பிக்கப்பட்ட பயிர் காப்பீடு திட்டத்தில் இணைந்து பயன்பெறலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் ச.விசாகன், இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்தார்கள்.
இக்கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் திருமதி வே.லதா அவர்கள், கூடுதல் ஆட்சியர்(வளர்ச்சி) திரு.ச.தினேஷ்குமார், இ.ஆ.ப., அவர்கள், உதவி ஆட்சியர் (பயிற்சி) திருமதி சி.பிரியங்கா, இ.ஆ.ப., அவர்கள், இணை இயக்குநர் (வேளாண்மை) திரு.ளு.பாண்டித்துரை, செயற்பொறியாளர் (பொதுப்பணித்துறை) திரு.கோபி, துணை இயக்குநர் (வேளாண்மை மாநில திட்டம்) திரு.P.சுருளியப்பன், துணை இயக்குநர் (தோட்டக்கலை) திரு.து.பெருமாள்சாமி உள்ளிட்ட தொடர்புடைய அலுவலர்கள் மற்றும் ஏராளமான விவசாயிகள் கலந்துக் கொண்டனர்.
செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்