Close

Collector -Corona-Awareness week

Publish Date : 09/08/2021
.

செ.வெ.எண்:-16/2021

நாள்:07.08.2021

திண்டுக்கல் மாவட்டம்

கொரோனா விழிப்புணர்வு வாரத்தை முன்னிட்டு நடைபெற்ற பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ,மாணவிகளுக்கு சான்றிதழ்களை மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் ச.விசாகன், இ.ஆ.ப., அவர்கள் இன்று வழங்கினார்கள்.

கொடைக்கானல் நகராட்சி பகுதியில் 18 வயதிற்கு மேற்பட்ட அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் ச.விசாகன், இ.ஆ.ப., அவர்கள் தகவல்.

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்களின் பல்வேறு துரித நடவடிக்கைகளின் காரணமாக தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்துவதை முதன்மை நோக்கமாக கொண்டு தமிழக அரசு முழு வீச்சில் அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொண்டுள்ளது. இந்நிலையில் மூன்றாம் அலை வராமல் தடுக்க தற்போது பல்வேறு நடவடிக்கைகளை தமிழக அரசு தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது.

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின், அவர்கள் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை உயராமல் இருக்க பொதுமக்களிடையே பல்வேறு தொடர் விழிப்புணர்வு பிரச்சாரத்தினை சென்னையில் துவக்கி வைத்து, 01.08.2021 முதல் 07.08.2021 வரை ஒரு வார காலம் பல்வேறு கொரோனா விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை, ஒவ்வொரு நாளும் நடத்துவதற்கு அறிவுறுத்தியுள்ளார்கள்.

அதன்படி, திண்டுக்கல் மாவட்டத்தில், பல்வேறு விதமான விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டன. கொரோனா விழிப்புணர்வு தொடர் பிரச்சாரத்தினை முன்னிட்டு நடைபெற்ற கொரோனா விழிப்புணர்வு தொடர்பான பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவியர்களுக்கு திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று(07.08.2021) நடைபெற்ற நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் ச.விசாகன், இ.ஆ.ப., அவர்கள் பரிசுகள் வழங்கி தெரிவித்ததாவது:-

திண்டுக்கல் மாவட்டத்தில் ஒரு வார காலம் நடைபெற்ற விழிப்புணர்வு நிகழ்ச்சிகளில் கொரோனா துண்டு பிரசுரங்கள், சிற்றேடுகள், டிவிட்டர், முகநூல் மற்றும் இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைதளங்களிலும், தொலைக்காட்சி நேர்காணல் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. அதனைத்தொடர்ந்து கடை வீதிகள், இரயில் நிலையங்கள், பேருந்து நிலையங்கள் போன்ற பொது இடங்களுக்கு வரும் பொதுமக்களிடையே முகக்கவசம் அணியவும், சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்கவும் பல்வேறு விழிப்புணர்வுகள் ஏற்படுத்தப்பட்டது. அதனைத்தொடர்ந்து, வியாபாரிகள் நலச்சங்கங்களின் நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்களிடையே கொரோனா விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. தனியார் மருத்துவமனைகள் மற்றும் இந்திய மருத்துவ சங்கத்தின் மூலம் விழிப்புணர்வு முகாம்கள் நடத்தப்பட்டன.

மாணவ, மாணவியர்களிடையே குறும்படப் போட்டிகள், ஓவியப்போட்டிகள், கொரோனா விழிப்புணர்வு வாசகங்கள் உருவாக்குதல், எப்.எம். வானொலி மூலம் கேள்வி பதில் நிகழ்ச்சிகள், மீம்ஸ் உருவாக்குதல் போன்றவை நடத்தப்பட்டன. கிராமிய கலைஞர்கள் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. நோய் எதிர்ப்புத் தன்மை அதிகரிக்க கபசுர குடிநீர் வழங்கப்பட்டது.

கொரோனா மேலாண்மைக்கான வழிகாட்டு நடைமுறைகளில் குறிப்பிட்டுள்ளபடி, பொது இடங்களில் முகக்கவசம் அணிவது, சமூக இடைவெளியினைக் கடைப்பிடிப்பது, கைகளை அடிக்கடி சோப்பு அல்லது கிருமிநாசினி கொண்டு சுத்தம் செய்வது ஆகியவற்றை பொதுமக்கள் கட்டாயம் பின்பற்ற வேண்டும். நோய்த்தொற்று அறிகுறிகள் தென்பட்டவுடன் அருகிலுள்ள மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை மேற்கொள்ள வேண்டும்.

கொரோனா பரவலை தடுக்க தமிழக அரசு மேற்கொள்ளும் அனைத்து நடவடிக்கைகளுக்கும் பொதுமக்கள் அனைவரும் முழு ஒத்துழைப்பு நல்கி கொரோனா பரவலை முற்றிலும் அகற்ற உதவிட வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் ச.விசாகன், இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்தார்கள்.

கொடைக்கானல் நகராட்சி பகுதியில் 18 வயதிற்கு மேற்பட்ட அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி செலுத்தியதற்காக கொடைக்கானல் வருவாய் கோட்டாட்சியர் திரு.ச.முருகேசன் மற்றும் கொடைக்கானல் நகராட்சி ஆணையாளர் திரு.த.நாராயணன், வட்டார மருத்துவ அலுவலர் மரு.ம.அரவிந்த் கிருஷ்ணன், நகர்புற மருத்துவ அலுவலர் மரு.ல.ஸ்ரீதர் மற்றும் கொரோனா தடுப்பூசி செலுத்துவதில் சிறப்பாக பணியாற்றிய அலுவலர்களுக்கு நற்சான்றிதழ்களை மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் ச.விசாகன், இ.ஆ.ப., அவர்கள் வழங்கினார்கள்.

முன்னதாக துணை இயக்குனர்(சுகாதாரப்பணிகள்) மரு.மு.வரதராஜன் வரவேற்றார். துணை இயக்குநர்(சுகாதாரப்பணிகள்) மரு.கே.ஆர்.ஜெயந்தி நன்றி தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியில், மாவட்ட வருவாய் அலுவலர் திரு.இரா.கோவிந்தராசு, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் திரு.சி.மாறன், திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி முதல்வர் மற்றும் தனி அலுவலர் மரு.கே.கே.விஜயகுமார், தாடிக்கொம்பு வட்டார மருத்துவ அலுவலர் மரு.சீனிவாசன், அரசு செவிலியர் பயிற்சி கல்லூரி முதல்வர் மரு.தி.மகேஸ்வரி, துணை இயக்குநரின் நேர்முக உதவியாளர் திரு.தி.வல்லவன் மற்றும் நலக்கல்வியாளர் திரு.இரா.நாராயணசாமி உட்பட பலர் கலந்துகொண்டனர்.

செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.