Close

Collector- Corona Inspection

Publish Date : 08/10/2021
.

...

செ.வெ.எண்:-18/2021

நாள்:07.10.2021

மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் ச.விசாகன், இ.ஆ.ப., அவர்கள், திண்டுக்கல் பேகம்பூர் மற்றும் நத்தம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட பல்வேறு ஊராட்சி மன்றத் தலைவர்களுடன் 100 சதவீதம் கொரோனா தடுப்பூசி செலுத்துவதன் அவசியம் குறித்து ஆலோசனை மேற்கொண்டார்கள்.

திண்டுக்கல் மாவட்டத்தில் அனைத்து பகுதிகளிலும் தகுதியுள்ள பொதுமக்களுக்கு, கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணி மிக வேகமாக நடைபெற்று வருகிறது. திண்டுக்கல் மாவட்டத்தில் இதுவரை 14 இலட்சத்திற்கும் மேற்பட்டவர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. குறிப்பாக, கிராம பகுதிகளில், பொதுமக்களிடையே தடுப்பூசி அனைவருக்கும் செலுத்தப்பட வேண்டும் என்பதற்காக, பல்வேறு விழிப்புணர்வு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

அதனடிப்படையில், மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் ச.விசாகன், இ.ஆ.ப., அவர்கள், நத்தம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஊராட்சி மன்றத் தலைவர்கள் திரு.வி.நல்லியப்பன்(வேலம்பட்டி), திரு.ஜெயப்பிரகாஷ்(புன்னம்பட்டி) மற்றும் வார்டு உறுப்பினர்கள் ஆகியோருடன் இன்று (07.10.2021) ஆலோசனை மேற்கொண்டார்கள்.

அதனைத்தொடர்ந்து, செந்துறை ஊராட்சி மன்ற அலுவலகத்தில் ஊராட்சி மன்றத் தலைவர் திரு.கு.சவரிமுத்து, சிறுகுடி ஊராட்சி மன்றத்தலைவர் திருமதி வீ.கோகிலவாணி, சேத்தூர் ஊராட்சி மன்றத் தலைவர் திரு.ப.சுப்பிரமணியம், குடவிப்பட்டி ஊராட்சி மன்றத் தலைவர் திருமதி அ.ராஜேஸ்வரி, அப்பகுதி ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் மற்றும் ஊராட்சி செயலர்கள் ஆகியோருடன் மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் ச.விசாகன், இ.ஆ.ப., அவர்கள் 100 சதவீதம் கொரோனா தடுப்பூசி செலுத்த வேண்டியதன் அவசியம் குறித்து, ஆலோசனை செய்து, கூட்டத்தில் தெரிவித்ததாவது:-

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள், தமிழகம் முழுவதும் தகுதியுள்ள அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி செலுத்த வேண்டும், கொரோனா வைரஸ் பரவாமல் முற்றிலுமாக தடுக்க வேண்டும் என்ற அடிப்படையில் செயல்பட்டு வருகிறார்கள். நமது திண்டுக்கல் மாவட்டத்தில் கொரோனா தடுப்பூசி போடும் பணி வெகு சிறப்பாக நடைபெற்று வருகிறது. ஒரு சில கிராமங்களில் தடுப்பூசி போடும் பணி குறைவாக உள்ளது. தடுப்பூசி போடுவதால் உடலுக்கு எந்தக்கேடும் ஏற்படாது. ஊராட்சி மன்றத்தலைவர்கள் மற்றும் உறுப்பினர்கள் வீடுவீடாகச் சென்று, கொரோனா தடுப்பூசி போடாதவர்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.

மாவட்ட நிர்வாகம், அனைவருக்கும் தடுப்பூசி செலுத்த வேண்டும் என்பதில் முனைப்பாக செயல்பட்டு வருகிறது. இதற்கு தடுப்பூசி போடாத கிராமப்புற பொதுமக்கள் தாங்களாக முன்வந்து தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும். தடுப்பூசி குறித்து யாரும் பயப்படத் தேவையில்லை. தடுப்பூசி போடுபவர்கள் அசைவம் சாப்பிட்டுக் கொள்ளலாம். நீங்கள் அனைவரும் கிராமப்புற மக்களிடம் தடுப்பூசி போட்டால் உயிரிழப்புகள் தடுக்கப்படும் என்பதை எடுத்துக் கூற வேண்டும்.

நமது மாவட்டத்தில் அனைத்து கிராமப்புற பகுதிகளில் கொரோனா தொற்று முழுமையாக அகற்றப்பட வேண்டும் என்பதற்காக மாவட்ட நிர்வாகம் பிற துறைகளுடன் இணைந்து சிறப்பாக செயல்பட்டு வருகிறது. குறிப்பாக தடுப்பூசி போடுபவர்கள் தங்களுக்குள் ஏதேனும் சந்தேகம் இருந்தால் அருகிலுள்ள மருத்துவ அலுவலர்களிடமோ, மருத்துவர்களிடமோ நேரில் சென்று இதுகுறித்து கேட்டுத் தெரிந்துகொள்ளலாம். உங்களுக்கு ஏதேனும் உடல் ரீதியான பிரச்சனைகள் இருந்தால், மருத்துவர்களை அணுகி அதுகுறித்து கேட்டுத் தெரிந்துகொள்ள வேண்டும்.

மாவட்ட நிர்வாகம், அனைத்து பகுதிகளிலும் உள்ள கிராம மக்களுக்கு தடுப்பூசி போட தயாராக உள்ளது. பொதுமக்கள் அதற்கு ஒத்துழைக்க வேண்டும். கிராமங்களில் உள்ள சுகாதாரப் பணியாளர்கள், ஊராட்சி மன்றப் பகுதிகளில் பல்வேறு நிலைகளில் உள்ள மக்கள் பிரதிநிதிகளுடன் இணைந்து வீடுவீடாகச் சென்று தடுப்பூசி போடுவதன் அவசியம் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்திட வேண்டும். பொதுமக்களும் என்னுடைய கோரிக்கையாக இதை ஏற்றுக்கொண்டு தடுப்பூசி செலுத்திக்கொள்ள முன்வர வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் ச.விசாகன், இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்தார்கள்.

முன்னதாக, திண்டுக்கல் பேகம்பூர் பள்ளிவாசலில், பள்ளிவாசல் நிர்வாகிகளுடன் அனைவரும் கொரோனா தடுப்பூசி செலுத்த வேண்டியதின் அவசியம் குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் ச.விசாகன், இ.ஆ.ப., அவர்கள் ஆலோசனை மேற்கொண்டு, தடுப்பூசி செலுத்தாதவர்களிடம் பள்ளிவாசல் நிர்வாகிகள் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் எனவும் நிர்வாகிகளிடம் தெரிவித்தார்கள்.

இந்நிகழ்ச்சிகளில், திண்டுக்கல் மாநகராட்சி ஆணையாளர் திரு.எஸ்.சிவசுப்பிரமணியன், மாநகர்நல அலுவலர் மரு.பி.இந்திரா, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் திரு.அண்ணாதுரை, திரு.வி.உதயகுமார், நத்தம் வட்டாட்சியர் திருமதி விஜயலட்சுமி, வட்டார மருத்துவ அலுவலர் திரு.சேக்அப்துல்லா, பேகம்பூர் பள்ளிவாசல் நிர்வாகிகள் நாட்டாண்மை திரு.என்.எம்.பி.காஜாமைதீன், திரு.நிஷாஅகமது கான், செயலாளர் திரு.எம்.ஏ.கமல்பாட்ஷா, பொருளாளர் திரு.முகமது இஸ்மாயில் உட்பட அலுவலர்கள் பலர் கலந்துகொண்டார்கள்.

செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.