Close

Collector- Covid 19- Mega Camp

Publish Date : 09/05/2022

செ.வெ.எண்:-12/2022

நாள்: 07.05.2022

திண்டுக்கல் மாவட்டம்

திண்டுக்கல் மாவட்டத்தில் கொரோனா வைரஸ் பரவரை தடுக்க நாளை(08.05.2022) மெகா தடுப்பூசி முகாம்கள் 3000 இடங்களில் நடைபெறுகிறது – மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் ச.விசாகன், இ.ஆ.ப., அவர்கள் வெளியிட்டார்.

இந்தியாவில் கோவிட்-19 நோய்த்தொற்றானது ஜனவரி மாதம் ஏற்பட்ட மூன்றாம் அலைக்குப் பிறகு குறைந்து நாளொன்றுக்கு 500 நபர்களுக்கு குறைவாக இருந்துவந்த நிலையில் கடந்த ஒரு வாரமாக நோய்த்தொற்று மீண்டும் அதிகரித்து நாளொன்றுக்கு 3000-க்கும் அதிகமானோர் பாதிக்கப்படுகின்றனர்.

டெல்லி, மகாராஷ்டிரா, உத்தரபிரதேசம் போன்ற மாநிலங்களில் நோய்த்தொற்று தொடர்ந்து அதிகரித்து வருகிறது. ஜனவரி மாதம் ஏற்பட்ட மூன்றாம் அலையின்போது நோய்த்தொற்று அதிகரித்த போதும், கோவிட் தொற்றால் இறந்தவர்களின் எண்ணிக்கை மிகவும் குறைவாக இருந்தது. இதற்கு முக்கிய காரணம் பொதுமக்களின் ஒத்துழைப்புடன் அதிக அளவில் இரண்டு தவணை கோவிட் தடுப்பூசி செலுத்தப்பட்டதே ஆகும். எனினும் திண்டுக்கல் மாவட்டத்தில் 12 வயது முதல் 18 வயது வரை உள்ள சிறார்கள் மற்றும் 18 வயதிற்கு மேற்பட்டவர்களில் 3.2 லட்சம் நபர்கள் இன்னும் இரண்டாம் தவணை தடுப்பூசி செலுத்திக் கொள்ளாமல் உள்ளனர்.

திண்டுக்கல் மாவட்டத்தில் 05-05-2022 வரை 15 வயதிற்கு மேற்பட்டவர்களில் முதல் தவணை தடுப்பூசி 18,27,257 (99.8 சதவீதம்) நபர்களுக்கும், இரண்டாவது தவணை தடுப்பூசி 15,94,154 (87.1 சதவீதம்) நபர்களுக்கும் செலுத்தப்பட்டுள்ளது. இத்துடன் 25,407 நபர்களுக்கு முன்னெச்சரிக்கை தவணை செலுத்தப்பட்டுள்ளது. மேலும் 15 வயது முதல் 18 வயது வரை உள்ள சிறார்களில் இதுவரை 81,353 (81.2 சதவீதம்) சிறார்களுக்கு முதல் தவணை தடுப்பூசி மற்றும் 61,460 (61.3 சதவீதம்) சிறார்களுக்கு இரண்டாம் தவணை தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. மேலும் 12 வயது முதல் 14 வயது வரை உள்ள சிறார்களில் இதுவரை 59,010 (93.1 சதவீதம்) சிறார்களுக்கு முதல் தவணை தடுப்பூசி மற்றும் 36,014(56.8 சதவீதம்) சிறார்களுக்கு இரண்டாம் தவணை தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

எனினும் திண்டுக்கல் மாவட்டத்தில் தற்போது வரை 3.2 லட்சம் நபர்கள் இரண்டாம் தவணை செலுத்துவதற்குரிய தவணை தேதி கடந்த பின்னும் இரண்டாம் தவணை தடுப்பூசி செலுத்தாமல் உள்ளனர். இதில் 15 வயது முதல் 18 வயதிற்குட்பட்ட 20,000 சிறார்கள் மற்றும் 12 வயது முதல் 14 வயதிற்குட்பட்ட23,000 சிறார்கள் இரண்டாம் தவணை தடுப்பூசி செலுத்திக் கொள்ளாமல் உள்ளனர். மேலும் 15 வயது முதல் 18 வயதிற்குட்பட்ட 18,000 சிறார்கள் மற்றும் 12 வயது முதல் 14 வயதிற்குட்பட்ட 4,000 சிறார்கள் முதல் தவணைசெலுத்திக் கொள்ளாமல் உள்ளனர்.

கோவிட்-19 தடுப்பூசி முதல் மற்றும் இரண்டாம் தவணை தடுப்பூசி செலுத்தாமல் விடுபட்ட நபர்களுக்காக நாளை (08-05-2022) தமிழ்நாடு முழுவதும் ஒரு இலட்சம் மெகா தடுப்பூசி முகாம்கள் காலை 7 மணி முதல் இரவு 7 மணி வரை நடத்தப்பட இருக்கிறது. அதன்படி திண்டுக்கல் மாவட்டத்தில் நாளை 3,000-க்கும் மேற்பட்ட இடங்களில் தடுப்பூசி முகாம்கள் நடத்தப்பட உள்ளன. இம்முகாமினை பயன்படுத்தி பொதுமக்கள் அனைவரும் தவறாமல் தங்களது தவணைக்குரிய தடுப்பூசி செலுத்திக்கொண்டு, நோய்த்தொற்றின் கடுமையான பாதிப்புகளில் இருந்து தங்களை பாதுகாத்துக்கொள்ள வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் ச.விசாகன், இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்.

செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.