Close

Collector-Covid-19 vaccination 12.09.2021 mega camp

Publish Date : 11/09/2021
.

செ.வெ.எண்:-15/2021

நாள்:09.09.2021

திண்டுக்கல் மாவட்டத்தில் 12.09.2021 அன்று 1,225 இடங்களில் நடைபெறும் மாபெரும் கொரோனா தடுப்பூசி முகாமில் 1,00,000-க்கும் அதிகமானோருக்கு தடுப்பூசி செலுத்த திட்டம்-
மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் ச.விசாகன், இ.ஆ.ப., அவர்கள் தகவல்.

திண்டுக்கல் மாவட்டத்தில், மாபெரும் கொரோனா தடுப்பூசி முகாம் வருகின்ற 12.09.2021 அன்று 1,225 இடங்களில் நடைபெறவுள்ளது தொடர்பாக திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் ச.விசாகன், இ.ஆ.ப., அவர்கள் தலைமையில், அனைத்து துறை அலுவலர்களுடனான ஆலோசனைக் கூட்டம் இன்று (09.09.2021) நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்ததாவது:-

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள், கொரோனா எனும் கொடிய வைரசை முற்றிலுமாக கட்டுப்படுத்துவதற்கு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்கள். கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் முக்கிய ஆயுதமாக கொரோனா தடுப்பூசி கருதப்படுகிறது. எனவே, பொதுமக்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணியை மும்முரமாக செயல்படுத்த மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்கள் அறிவுறுத்தியுள்ளார்கள்.

திண்டுக்கல் மாவட்டத்தில் கல்லூரிகள், பள்ளிகள், Diploma Courses, Polytechnic Colleges மற்றும் அனைத்து கல்வி நிறுவனங்களில் பணிபுரியும் ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர் அல்லாத பணியாளர்கள், திரையரங்கப் பணியாளர்கள், அங்கன்வாடி மைய ஊழியர்கள், மழலையர் காப்பகங்களின் பொறுப்பாளர்கள் மற்றும் பணியாளர்கள், நீச்சல் குளங்களின் பயிற்சியாளர்கள் மற்றும் 18 வயதுக்கு மேற்பட்ட பயிற்சி பெறுபவர்கள், செயல்பட அனுமதிக்கப்பட்டுள்ள அனைத்து வகை நிறுவனங்களின் பணியாளர்கள் அனைவருக்கும் அருகிலுள்ள அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் தடுப்பூசி முகாம்களில் தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது.

திண்டுக்கல் மாவட்டத்தில், மாபெரும் கொரோனா தடுப்பூசி முகாம் வருகின்ற 12.09.2021 அன்று 1,225 இடங்களில் நடைபெறவுள்ளது.

கொரோனா வைரஸ் நோய்த்தொற்று பரவலை கட்டுப்படுத்தும் அவசியத்தை கருத்தில் கொண்டு பொதுமக்கள் எவ்வித இடர்பாடுகளும் இல்லாமல் தங்குதடையின்றி கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்ளும் பொருட்டு 10.09.2021 மற்றும் 11.09.2021 ஆகிய நாட்களில் வாக்காளர் பட்டியலினைக் கொண்டு 18 வயதிற்கு மேற்பட்ட நபர்களை கணக்கெடுத்து திண்டுக்கல் மாவட்டத்திற்கான கொரோனா தடுப்பூசி இலக்கு 1,00,000-க்கும் அதிகமானோருக்கு செலுத்த திட்டமிடப்பட்டுள்ளது.

அதன்படி, 12.09.2021 அன்று காலை 7.00 மணி முதல் இரவு 7.00 மணி வரை மாபெரும் கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெறவுள்ளது. ஒரு முகாமிற்கு தடுப்பூசி செலுத்துபவர், பதிவேற்றம் செய்பவர் மற்றும் மக்களை ஒருங்கிணைக்கும் அலுவலராக இரண்டு நபர்கள் ஆக மொத்தம் 4,900 அலுவலர்களை நியமித்தும், 8 கொரோனா தடுப்பூசி முகாம்களை கண்காணிக்க ஒரு கண்காணிப்பாளர் வீதம் 154 கண்காணிப்பாளர்களை நியமித்தும், மேற்படி வட்டம் மற்றும் வட்டார அளவில் குழுக்களை அமைத்தும், மேற்படி முகாம் செயல்படுத்தப்படவுள்ளது.

எனவே, திண்டுக்கல் ஊரக / உள்ளாட்சி பகுதிகளில் உள்ள பொதுமக்கள் அனைவரும் இத்திட்டத்தினை பயன்படுத்திக் கொள்ள வேண்டும். திண்டுக்கல் மாவட்டத்தில் கொரோனா பரவலை முற்றிலும் தடுக்க கொரோனா தடுப்பு வழிகாட்டு நெறிமுறைகளை பொதுமக்கள் முழுமையாக கடைப்பிடிக்க வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் ச.விசாகன், இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்கள்.

இக்கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் திருமதி வே.லதா, கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) திரு.ச.தினேஷ்குமார்,இ.ஆ.ப., மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் திரு.சி.மாறன், திண்டுக்கல் வருவாய் கோட்டாட்சியர் திருமதி ம.காசிசெல்வி, தனி வட்டாட்சியர் (பேரிடர் மேலாண்மை) திருமதி அ.சந்தனமேரி கீதா, அனைத்து வட்டாட்சியர்கள், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் உட்பட துறை அலுவலர்கள் பலர் கலந்துகொண்டனர்.

செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.