Close

Collector- Covid 19 Vaccination camp-Collector Inspection

Publish Date : 29/06/2021
.

செ.வெ.எண்:- 40/2021

நாள்:-29.06.2021

திண்டுக்கல் மாவட்டம்

தமிழ்நாடு அரசு சிறப்பு கோவிட்-19 தடுப்பூசி திட்டத்தின் கீழ் பொதுமக்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணியினை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ச.விசாகன், இ.ஆ.ப., அவர்கள் ஆய்வு மேற்கொண்டார்.

திண்டுக்கல் மாவட்டம், சிலுவத்தூர் சாலை மீனாட்சி மஹாலில் பொதுமக்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணியினை இன்று(29.06.2021) மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ச.விசாகன், இ.ஆ.ப., அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு தெரிவித்ததாவது:-

மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்கள், பொதுமக்கள் நலன் கருதி கொரோனா வைரஸ் நோய் பரவலை கட்டுப்படுத்த பல்வேறு தளர்வுகளுடன் ஊரடங்கு அறிவித்துள்ளார்கள். கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் முக்கிய ஆயுதமாக கருதப்படும் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணி திண்டுக்கல் மாவட்டத்தில் மும்முரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

திண்டுக்கல் மாவட்டத்தில் மொத்தம் 86-க்கும் மேற்பட்ட அரசு கோவிட்-19 தடுப்பூசி போடும் மையங்களும், 32 தனியார் கோவிட்-19 தடுப்பூசி போடும் மையங்களும் அமைக்கப்பட்டுள்ளது. இதில் 2,83,425 நபர்களுக்கு முதல் தவணை அரசு கோவிட்-19 தடுப்பூசியும், 54,128 நபர்களுக்கு இரண்டாம் தவணை தடுப்பூசிகளும் என மொத்தம் 3,37,553 நபர்களுக்கு முதல் மற்றும் இரண்டாம் தவணை கோவிட்-19 தடுப்பூசி போடப்பட்டுள்ளது. திண்டுக்கல் மாவட்டத்தில் தொடர்ந்து தடுப்பூசி செலுத்தும் பணி மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில், தற்போது கொரோனா தடுப்பூசி செலுத்தும் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டுள்ளது. அதிகபடியான பொதுமக்களுக்கு தடுப்பூசி செலுத்தும் பணி விரைவாக நடைபெற்று வருகிறது.

கொரோனா வைரஸ் நோய் தொற்றால் பாதிக்கப்பட வாய்ப்பு உள்ளவர்களாக கருதப்படும், செய்தித்தாள் மற்றும் பத்திரிக்கை விநியோகஸ்தர்கள், பால் முகவர்கள், தள்ளுவண்டி வியாபாரிகள், மருந்தக ஊழியர்கள், ஆட்டோ ஓட்டுநர்கள், மளிகை மற்றும் காய்கறி கடை ஊழியர்கள், அரசு மற்றும் தனியார் ஓட்டுநர்கள் / நடத்துனர்கள், மின்சாரத்துறை ஊழியர்கள், ஊரக வளர்ச்சி ஊழியர்கள், இணைய வர்த்தக ஊழியர்கள், அத்தியாவசிய தொழில் துறை பணியாளர்கள், கட்டிட தொழிலாளர்கள், வெளிமாநில தொழிலாளர்கள், அரசுத் துறை பணியாளர்கள், மாநில அரசு போக்குவரத்து ஊழியர்கள், அனைத்து பள்ளி மற்றும் கல்லூரி ஆசிரியர்கள்ஃபேராசிரியர்கள் அனைத்து பத்திரிகை செய்தியாளர்கள் / ஊடகவியலாளர்கள் கொரோனா தடுப்பு பணியில் ஈடுபடும் தன்னார்வலர்கள், மாற்றுத்திறனாளிகள் உள்ளிட்ட அனைவருக்கும் தமிழ்நாடு சிறப்பு கோவிட்-19 தடுப்பூசி செலுத்தும் திட்டத்தின் கீழ் முன்னுரிமை அடிப்படையில் தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள 14 வட்டார சுகாதார மையங்களிலும் தடுப்பூசி செலுத்தும் பணி சுகாதார துறையினரால் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

தமிழக அரசு கோரோனா தொற்று நோய் சிகிச்சை மேற்கொள்ள திண்டுக்கல் மாவட்டத்தில் 10 அரசு மருத்துவமனையில் 1200 படுக்கைகள் மற்றும் 23 தனியார் மருத்துவமனையில் 1587 படுக்கைகள் மற்றும் கொரோனா சிகிச்சை மையத்தில் 1246 படுக்கை வசதிகள் தயார் நிலையில் உள்ளது.

திண்டுக்கல் மாவட்டத்தில் அரசு தலைமை மருத்துவமனையில் 19,809 காய்ச்சல் முகாம்களும், பழனி தலைமை மருத்துவமனையில் 19,844 காய்ச்சல் முகாம்கள் என 39,653 காய்ச்சல் முகாம்கள் நடத்தப்பட்டுள்ளது.

திண்டுக்கல் மாவட்டத்தில் இதுவரை 5,39,677 நபர்களுக்கு கொரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. தற்போது கொரோனா வைரஸ் தொற்று கண்டறியும் பரிசோதனை அதிகளவில் மேற்கொள்ளப்படுகிறது. பரிசோதனை முடிவில் கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பு உள்ளவர்கள் எண்ணிக்கை குறைந்து காணப்படுகிறது. இதனால் திண்டுக்கல் மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு குறைந்து வருகிறது.

கொரோனா பாதிப்பு எண்ணிக்கை வெகுவாக குறைந்து வருவதையடுத்து ஊரடங்கில் பல்வேறு தளர்வுகளை தமிழக அரசு அறிவித்துள்ளது. இந்த தளர்வுகளை பொதுமக்கள் அத்தியாவசிய தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்திக்கொள்ள வேண்டும். பொதுமக்கள் வெளியே செல்லும்போதும், பொது இடங்களிலும், கண்டிப்பாக முகக்கவசம் அணிய வேண்டும். பொதுமக்கள் வீட்டிலும், பணிபுரியும் இடங்களிலும் அடிக்கடி சோப்பை பயன்படுத்தி கைகளை நன்றாக கழுவியும், சமூக இடைவெளியை தவறாமல் கடைபிடித்தும், அவசிய தேவை இல்லாமல் வெளியில் செல்வதைத் தவிர்த்தும், முழு ஒத்துழைப்பு நல்கினால் மட்டுமே இந்த நோய்த் தொற்று பரவலை முற்றிலும் கட்டுப்படுத்த முடியும்.

திண்டுக்கல் மாவட்டத்தில் கொரோனா பரவலை முற்றிலும் தடுக்க கொரோனா தடுப்பு வழிகாட்டு நெறிமுறைகளை பொதுமக்கள் முழுமையாக கடைப்பிடிக்க வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ச.விசாகன், இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியில் வட்டார மருத்துவ அலுவலர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்துகொண்டனர்.

செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.