Close

Collector – Covid-19 Vaccination for 12-14 age children

Publish Date : 16/03/2022
.

செ.வெ.எண்:-26/2022

நாள்:16.03.2022

திண்டுக்கல் மாவட்டம்

12 முதல் 14 வயதிற்குட்பட்ட சிறார்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணி – மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் ச.விசாகன், இ.ஆ.ப., அவர்கள் தொடங்கி வைத்தார்.

திண்டுக்கல் மாவட்டத்தில் 12 முதல் 14 வயதிற்குட்பட்ட சிறார்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணியை மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் ச.விசாகன், இ.ஆ.ப., அவர்கள், திண்டுக்கல் மாநகராட்சி மேயர் திருமதி இளமதி ஜோதி பிரகாஷ் முன்னிலையில் திண்டுக்கல் பழனி சாலையில் உள்ள காந்திஜி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் இன்று(16.03.2022) தொடங்கி வைத்து, பார்வையிட்டார்கள். பின்னர் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்ததாவது:-

தமிழ்நாட்டில் கோவிட்-9 தடுப்பூசியானது 16.01.2021-ஆம் தேதி முதல் தகுதியுடைய அனைவருக்கும் செலுத்தப்பட்டு வருகிறது. திண்டுக்கல் மாவட்டத்தில் 15.03.2022 தேதிப்படி முதல் தவணை தடுப்பூசி 17,97,277 (98.2 சதவீதம்) நபர்களுக்கும், இரண்டாவது தவணை தடுப்பூசி 14,96,926 (81.8 சதவீதம்) நபர்களுக்கும் செலுத்தப்பட்டுள்ளது. இத்துடன் 16,728 நபர்களுக்கு முன்னெச்சரிக்கை தவணை செலுத்தப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் 15 முதல் 18 வயது வரை உள்ள சிறார்களுக்கு தடுப்பூசி செலுத்தும் பணி 03.01.2022 தேதி முதல் தொடங்கப்பட்டது. திண்டுக்கல் மாவட்டத்தில் இதுவரை 78,457 சிறார்களுக்கு முதல் தவணை தடுப்பூசி மற்றும் 53,756 சிறார்களுக்கு இரண்டாம் தவணை தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

இந்திய அரசு, தற்போது 12 முதல் 14 வயது வரை உள்ள சிறார்களுக்கு கொரோனா தடுப்பூசி வழங்க ஒப்புதல் அளித்துள்ளது. அதன்படி, திண்டுக்கல் மாவட்டத்தில் 12 முதல் 14 வயது வரை உள்ள சிறார்களுக்கு தடுப்பூசி செலுத்தும் பணி இன்று தொடங்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து திண்டுக்கல் மாவட்டத்தில் 12 முதல் 14 வயது வரை உள்ள 63,400 சிறார்களுக்கு அவர்கள் பயிலும் பள்ளிகளில் மருத்துவக் குழுக்கள் மூலம் தடுப்பூசி செலுத்தப்படவுள்ளது. 12 முதல் 14 வயது வரை உள்ள சிறார்களுக்கு கோர்பிவேக்ஸ் (CORBEVAX) தடுப்பூசி 0.5 மில்லி வழங்கப்பட உள்ளது. முதல் தவணை செலுத்தி 28 நாட்களுக்கு பிறகு இரண்டாவது தவணை செலுத்தப்பட உள்ளது என மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் ச.விசாகன்,இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியில், துணை இயக்குநர்(சுகாதாரப்பணிகள்) மரு.மு.வரதராஜன், மாநகர் நல அலுவலர் மரு.இந்திரா, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் திரு.சீ.கருப்புசாமி உட்பட பலர் கலந்துகொண்டனர்.

செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.