Close

Collector-Covid-19 vaccination mega camp-2

Publish Date : 20/09/2021

செ.வெ.எண்:-35/2021

நாள்:19.09.2021

திண்டுக்கல் மாவட்டத்தில் இதுவரை முதல் தவணை கொரோனா தடுப்பூசி 9,99,242 நபர்களுக்கும், இரண்டாவது தவணை தடுப்பூசி 2,30,708 நபர்களுக்கும் என மொத்தம் 12,29,950 நபர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது – மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் ச.விசாகன், இ.ஆ.ப., அவர்கள் தகவல்.

திண்டுக்கல் மாவட்டத்தில், மாபெரும் கொரோனா தடுப்பூசி முகாம் கடந்த 12.09.2021 அன்று நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து இன்று(19.09.2021) மாவட்டம் முழுவதும் இரண்டாம் கட்ட மாபெரும் கொரோனா தடுப்பசி முகாம்கள் நடைபெறுவதை மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் ச.விசாகன், இ.ஆ.ப., அவர்கள், திண்டுக்கல் ஸ்ரீவைத்தியநாதய்யர் நினைவு மண்டபத்தில் நடைபெற்ற முகாமை ஆய்வு மேற்கொண்டு தெரிவித்ததாவது:-

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள், கொரோனா எனும் கொடிய வைரசை முற்றிலுமாக கட்டுப்படுத்துவதற்கு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்கள். கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் முக்கிய ஆயுதமாக கொரோனா தடுப்பூசி கருதப்படுகிறது. எனவே, பொதுமக்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணியை மும்முரமாக செயல்படுத்த மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்கள் அறிவுறுத்தியுள்ளார்கள்.

திண்டுக்கல் மாவட்டத்தில் கல்லூரிகள், பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் அனைத்து கல்வி நிறுவனங்களில் பணிபுரியும் ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர் அல்லாத பணியாளர்கள், திரையரங்கப் பணியாளர்கள், அங்கன்வாடி மைய ஊழியர்கள், மழலையர் காப்பகங்களின் பொறுப்பாளர்கள் மற்றும் பணியாளர்கள், நீச்சல் குளங்களின் பயிற்சியாளர்கள் மற்றும் 18 வயதுக்கு மேற்பட்ட பயிற்சி பெறுபவர்கள், செயல்பட அனுமதிக்கப்பட்டுள்ள அனைத்து வகை நிறுவனங்களின் பணியாளர்கள் அனைவருக்கும் அருகிலுள்ள அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் தடுப்பூசி முகாம்களில் தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது.

திண்டுக்கல் மாவட்டத்தில், மாபெரும் கொரோனா தடுப்பூசி முகாம் 12.09.2021 அன்று நடைபெற்றது. அதனைத்தொடர்ந்து, இன்று(19.09.2021) மாபெரும் கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெறுகிறது. இன்றைய முகாமில் முதல் தவணை தடுப்பூசி 23,147 நபர்களுக்கும், இரண்டாவது தவணை தடுப்பூசி 6,977 நபர்களுக்கும் என மொத்தம் 30,124 நபர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

திண்டுக்கல் மாவட்டத்தில் இதுவரை முதல் தவணை கொரோனா தடுப்பூசி 9,99,242 நபர்களுக்கும், இரண்டாவது தவணை தடுப்பூசி 2,30,708 நபர்களுக்கும் என மொத்தம் 12,29,950 நபர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது என மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் ச.விசாகன், இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்தார்கள்.

இந்த ஆய்வின்போது, மாநகராட்சி ஆணையாளர் திரு.எஸ்.சிவசுப்பிரமணியம், நகர்நல அலுவலர் மரு.இந்திரா உட்பட துறை அலுவலர்கள் பலர் கலந்துகொண்டனர்.

செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.