Close

Collector-Covid 19 Vaccination pregnant – Inspection

Publish Date : 07/07/2021
.

செ.வெ.எண்:-11/2021

நாள்:-07.07.2021

திண்டுக்கல் மாவட்டம்

கர்ப்பிணி பெண்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணியினை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ச.விசாகன், இ.ஆ.ப., அவர்கள் ஆய்வு மேற்கொண்டார்.

திண்டுக்கல் கமலா நேரு அரசு மருத்துவமனையில் கர்ப்பிணி பெண்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணியினை இன்று(07.07.2021) மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ச.விசாகன், இ.ஆ.ப., அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு தெரிவித்ததாவது:-

மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்கள், பொதுமக்கள் நலன் கருதி கொரோனா வைரஸ் நோய் பரவலை கட்டுப்படுத்த பல்வேறு தளர்வுகளுடன் ஊரடங்கு அறிவித்துள்ளார்கள். கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் முக்கிய ஆயுதமாக கொரோனா தடுப்பூசி கருதப்படுகிறது. எனவே, பொதுமக்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணியை மும்முரமாக செயல்படுத்த மாண்புமிகு தமிழக முதுலமைச்சர் அவர்கள் அறிவுறுத்தியுள்ளார்கள். அதன்படி கொரோனா தடுப்பூசி ஏற்கனவே 45 வயது மேற்பட்ட முன்களப் பணியாளர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. தொடர்ந்து 40 வயதிற்கு மேற்பட்டவர்கள், முதியவர்களுக்கு தடுப்பூசி வழங்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து முழு நேர ஊரடங்கு காலத்தில் பணிபுரியும் நபர்களுக்கும், எளிதில் நோய்தொற்று பாதிக்கப்படக்கூடிய பணியாளர்களுக்கும் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணி மேற்கொள்ளப்பட்டது.

திண்டுக்கல் மாவட்டத்தில் மொத்தம் 86-க்கும் மேற்பட்ட அரசு கோவிட்-19 தடுப்பூசி போடும் மையங்களும், 32 தனியார் கோவிட்-19 தடுப்பூசி போடும் மையங்களும் அமைக்கப்பட்டுள்ளது. திண்டுக்கல் மாவட்டத்தில் தொடர்ந்து தடுப்பூசி செலுத்தும் பணி மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில், தற்போது கொரோனா தடுப்பூசி செலுத்தும் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டுள்ளது. அதிகபடியான பொதுமக்களுக்கு தடுப்பூசி செலுத்தும் பணி விரைவாக நடைபெற்று வருகிறது.

கொரோனா வைரஸ் நோய் தொற்றால் பாதிக்கப்பட வாய்ப்பு உள்ளவர்களாக கருதப்படும், செய்தித்தாள் மற்றும் பத்திரிக்கை விநியோகஸ்தர்கள், பால் முகவர்கள், தள்ளுவண்டி வியாபாரிகள், மருந்தக ஊழியர்கள், ஆட்டோ ஓட்டுநர்கள், மளிகை மற்றும் காய்கறி கடை ஊழியர்கள், அரசு மற்றும் தனியார் ஓட்டுநர்கள்/நடத்துனர்கள், மின்சாரத்துறை ஊழியர்கள், ஊரக வளர்ச்சி ஊழியர்கள், இணைய வர்த்தக ஊழியர்கள், அத்தியாவசிய தொழில் துறை பணியாளர்கள், கட்டிட தொழிலாளர்கள், வெளிமாநில தொழிலாளர்கள், அரசுத் துறை பணியாளர்கள், மாநில அரசு போக்குவரத்து ஊழியர்கள், அனைத்து பள்ளி மற்றும் கல்லூரி ஆசிரியர்கள்ஃபேராசிரியர்கள் அனைத்து பத்திரிகை செய்தியாளர்கள்/ஊடகவியலாளர்கள் கொரோனா தடுப்பு பணியில் ஈடுபடும் தன்னார்வலர்கள், மாற்றுத்திறனாளிகள் உள்ளிட்ட அனைவருக்கும் தமிழ்நாடு சிறப்பு கோவிட்-19 தடுப்பூசி செலுத்தும் திட்டத்தின் கீழ் முன்னுரிமை அடிப்படையில் தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. எளிதில் பாதிக்கப்படக்கூடிய தொழிலாளர்களுக்கு சம்மந்தப்பட்ட நிறுவனங்கள் வாயிலாகவும், தொழிலாளர்கள் சார்ந்துள்ள சங்கங்கள் மூலமாகவும் மற்றும் திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள 14 வட்டார சுகாதார மையங்களிலும் தடுப்பூசி செலுத்தும் பணி சுகாதார துறையினரால் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இதனைத்தொடர்ந்து 18 வயதிற்கு மேற்பட்டவர்கள், குழந்தைபேறு முடிந்த தாய்மார்களுக்கு தடுப்பூசி செலுத்தும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. தற்போது கர்ப்பிணி பெண்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

தற்போது கொரோனா வைரஸ் தொற்று கண்டறியும் பரிசோதனை அதிகளவில் மேற்கொள்ளப்படுகிறது. பரிசோதனை முடிவில் கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பு உள்ளவர்கள் எண்ணிக்கை குறைந்து காணப்படுகிறது. இதனால் திண்டுக்கல் மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு குறைந்து வருகிறது.

கொரோனா பாதிப்பு எண்ணிக்கை வெகுவாக குறைந்து வருவதையடுத்து ஊரடங்கில் பல்வேறு தளர்வுகளை தமிழக அரசு அறிவித்துள்ளது. இந்த தளர்வுகளை பொதுமக்கள் அத்தியாவசிய தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்திக்கொள்ள வேண்டும். பொதுமக்கள் வெளியே செல்லும்போதும், பொது இடங்களிலும், கண்டிப்பாக முகக்கவசம் அணிய வேண்டும். பொதுமக்கள் வீட்டிலும், பணிபுரியும் இடங்களிலும் அடிக்கடி சோப்பை பயன்படுத்தி கைகளை நன்றாக கழுவியும், சமூக இடைவெளியை தவறாமல் கடைபிடித்தும், அவசிய தேவை இல்லாமல் வெளியில் செல்வதைத் தவிர்த்தும், முழு ஒத்துழைப்பு நல்கினால் மட்டுமே இந்த நோய்த் தொற்று பரவலை முற்றிலும் கட்டுப்படுத்த முடியும்.

திண்டுக்கல் மாவட்டத்தில் கொரோனா பரவலை முற்றிலும் தடுக்க கொரோனா தடுப்பு வழிகாட்டு நெறிமுறைகளை பொதுமக்கள் முழுமையாக கடைப்பிடிக்க வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ச.விசாகன், இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்தார்.

இந்த ஆய்வின்போது, துணை இயக்குநர் (மருத்துவம், ஊரக நலப்பணிகள் மற்றும் குடும்ப நலம்) மரு.கோ.பூங்கோதை, நகர்நல அலுவலர் மரு.லட்சியவர்ணா மற்றும் மருத்துவ அலுவலர்கள் உடன் இருந்தனர்.

செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.