Close

Collector- Covid19-Control room – Collector Inspection

Publish Date : 29/06/2021
.

செ.வெ.எண்:-33/2021

நாள்: 25.06.2021

திண்டுக்கல் மாவட்டம்

திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் 24 மணி நேரம் செயல்படும் கோவிட்-19 கட்டுப்பாட்டு அறையை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ச.விசாகன், இ.ஆ.ப., அவர்கள் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் 24 மணி நேரம் செயல்படும் கோவிட்-19 கட்டுப்பாட்டு அறையை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ச.விசாகன், இ.ஆ.ப., அவர்கள் இன்று(25.06.2021) பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு தெரிவித்ததாவது:-

திண்டுக்கல் மாவட்டத்தில் கொரோனா வைரஸ் நோய் பரவலை தடுக்கும் வகையில் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் அலுவலர்களால் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கொரோனா வைரஸ் தொற்று குறித்த சந்தேகங்கள், மருத்துவ சிகிச்சை தொடர்பான புகார்களை தெரிவிக்க திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் 24 மணி நேரம் செயல்படும் கோவிட்-19 கட்டுப்பாட்டு அறை செயல்பட்டு வருகிறது. இந்த கட்டுப்பாட்டு அறையை தொடர்புகொள்ள 0451-1077, 0451-2460320 என்ற தொலைபேசி எண்களிலும், 8300342973 மற்றும் 7598866000 என்ற அலைபேசி எண்களிலும் பொதுமக்கள் தொடர்பு கொள்ளலாம்.

அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் உள்ள காலி படுக்கை விவரம், தடுப்பூசி செலுத்துதல் விவரம், இ-பாஸ், வருவாய்த்துறை, காவல்துறை, ஆக்சிஜன் வசதி, ஆம்புலன்ஸ் சேவை மற்றும் மருத்துவ ஆலோசனைகள் தொடர்பாக கட்டுப்பாட்டு அறைக்கு கடந்த 22.05.2021 முதல் 24.06.2021 வரை 1286 தொலைப்பேசி அழைப்புகள் வரப்பட்டு, அந்த அழைப்புகள் அனைத்திற்கும் தீர்வு காணப்பட்டுள்ளன.

தமிழக அரசு கொரோனா தொற்று நோய் சிகிச்சை மேற்கொள்ள திண்டுக்கல் மாவட்டத்தில் 10 அரசு மருத்துவமனையில் 1200 படுக்கைகள் மற்றும் 23 தனியார் மருத்துவமனையில் 1587 படுக்கைகள் மற்றும் கொரோனா சிகிச்சை மையத்தில் 1246 படுக்கை வசதிகள் தயார் நிலையில் உள்ளது. திண்டுக்கல் மாவட்டத்தில் அரசு தலைமை மருத்துவமனையில் 19,809 காய்ச்சல் முகாம்களும், பழனி தலைமை மருத்துவமனையில் 19,844 காய்ச்சல் முகாம்கள் என 39,653 காய்ச்சல் முகாம்கள் நடத்தப்பட்டுள்ளது. இதுவரை திண்டுக்கல் மாவட்டத்தில் 5,39,677 நபர்களுக்கு கொரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

திண்டுக்கல் மாவட்டத்தில் மொத்தம் 86-க்கும் மேற்பட்ட அரசு கோவிட்-19 தடுப்பூசி போடும் மையங்களும், 32 தனியார் கோவிட்-19 தடுப்பூசி போடும் மையங்களும் அமைக்கப்பட்டுள்ளது. இதில் 2,83,425 நபர்களுக்கு முதல் தவணை அரசு கோவிட்-19 தடுப்பூசியும், 54,128 நபர்களுக்கு இரண்டாம் தவணை தடுப்பூசிகளும் என மொத்தம் 3,37,553 நபர்களுக்கு முதல் மற்றும் இரண்டாம் தவணை கோவிட்-19 தடுப்பூசி போடப்பட்டுள்ளது.

பொதுமக்கள் வெளியே செல்லும்போது பொது இடங்களிலும், கண்டிப்பாக முகக்கவசம் அணிய வேண்டும். பொதுமக்கள் வீட்டிலும், பணிபுரியும் இடங்களிலும் அடிக்கடி சோப்பை பயன்படுத்தி கைகளை நன்றாக கழுவியும், சமூக இடைவெளியை தவறாமல் கடைபிடித்தும், அவசிய தேவை இல்லாமல் வெளியில் செல்வதைத் தவிர்த்தும், முழு ஒத்துழைப்பு நல்கினால் மட்டுமே இந்த நோய்த் தொற்று பரவலை முற்றிலும் கட்டுப்படுத்த முடியும். திண்டுக்கல் மாவட்டத்தில் கொரோனா பரவலை முற்றிலும் தடுக்க கொரோனா தடுப்பு வழிகாட்டு நெறிமுறைகளை பொதுமக்கள் முழுமையாக கடைப்பிடிக்க வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ச.விசாகன், இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்.

இந்த ஆய்வின்போது, மாநில திட்ட அலுவலர் திரு.ச.கந்தசாமி, மருத்துவ அலுவலர்கள் உட்பட தொடர்புடைய அலுவலர்கள் பலர் கலந்துகொண்டனர்.

செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.