Close

Collector-District Industries Centre, Dindigul – UYEGP

Publish Date : 21/07/2020

செ.வெ.எண்:-20/2020

நாள்:21.07.2020

திண்டுக்கல் மாவட்டம்

திண்டுக்கல் மாவட்டத்தில் தொழில் துவங்க மானியத்துடன் கூடிய வங்கிக் கடன் பெற தொழில் முனைவோர்கள் விண்ணப்பிக்கலாம் – மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மு.விஜயலட்சுமி, இ.ஆ.ப., அவர்கள் தகவல்.

————————————————————————————————————————————-

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள கிராமப்புற மற்றும் நகர்ப்புற படித்த இளைஞர்கள் தாங்கள் வசிக்கும் பகுதியிலேயே சுயதொழில் தொடங்கி பொருளாதாரத்துடன் வாழ்க்கைத் தரத்தையும் உயர்த்த வேண்டும் என்ற எண்ணத்தில், தமிழக அரசின் சார்பில் படித்த வேலை வாய்ப்பற்ற இளைஞர்களுக்கான வேலை வாய்ப்பு உருவாக்கும் திட்டம் (யுஒய்இஜிபி), திண்டுக்கல் மாவட்ட தொழில் மைய அலுவலகம் மூலம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

இத்திட்டத்தில் வியாபாரம் மற்றும் சேவை தொழில்களுக்கு 25% அரசு மானியத்துடன் ரூ.5 லட்சம் வரை கடன் பெற பரிந்துரைக்கப்படும். உற்பத்தி நிறுவனங்கள் ரூ.10 லட்சம் வரை கடன் பெற விண்ணப்பிக்கலாம். அதிகபட்ச மானியத் தொகை ரூ.1.25 லட்சம் ஆகும். தொழில் தொடங்க ஆர்வம் உள்ள தொழில் முனைவோர்கள் குறைந்த பட்சம் 8ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 18 வயது முதல் 35 வயது வரை இருக்க வேண்டும். சிறப்புப் பிரிவினரான பெண்கள், முன்னாள் இராணுத்தினர், பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், தாழ்த்தப்பட்டோர் ஆகிய பிரிவினர் 45 வயது வரை விண்ணப்பிக்கலாம். விண்ணப்பதாரர் மூன்று ஆண்டுகளுக்குக் குறையாமல் திண்டுக்கல் மாவட்டத்தில் வசிப்பவராக இருக்க வேண்டும். குடும்ப ஆண்டு வருமானம் ரூ.5,00,000-க்கு மிகாமல் இருக்க வேண்டும்.

இத்திட்டத்தின் கீழ் விண்ணப்பம் செய்பவர்களுக்கு, தொழில் நுட்பம் மற்றும் பொருளாதார ரீதியில் செயல்படத்தக்க திட்டங்களுக்கு, திட்ட மதிப்பீட்டில் 90 முதல் 95 விழுக்காடு வரை வங்கிக்கடன் வழங்க வங்கிகளுக்கு பரிந்துரை செய்;யப்படும். திட்ட முதலீட்டில் 5 முதல் 10 விழுக்காடு வரை விண்ணப்பதாரர்களின் பங்களிப்பாக இருக்க வேண்டும். இத்திட்டத்தின்கீழ் பயன்பெற www.msmeoneline.tn.gov.in/uyegp என்ற இணையதளத்தின் வாயிலாக மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும்.

எனவே திண்டுக்கல் மாவட்டத்தில் தொழில் தொடங்க ஆர்வமுள்ள தொழில் முனைவோர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளலாம். மேலும் விபரங்களுக்கு திண்டுக்கல் மாவட்டத் தொழில் மைய பொது மேலாளரை நேரிலோ அல்லது 0451-2471609,0451-2470893 என்ற அலுவலகத் தொலைபேசியிலோ தொடர்பு கொண்டு தெரிந்து கொள்ளலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மு.விஜயலட்சுமி, இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்.

—————————————————————————————————————————————————————————————-

செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.,

—————————————————————————————————————————————————————————————-