Close

Collector Diwali Instruction – Pollution Control

Publish Date : 03/11/2021

செ.வெ.எண்:-10/2021

நாள்:03.11.2021

விபத்து, ஒலி மற்றும் மாசற்ற தீபாவளியை கொண்டாட வேண்டும்-பொதுமக்களுக்கு, மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் ச.விசாகன், இ.ஆ.ப., அவர்கள் வேண்டுகோள்.

தீபாவளி திருநாள் மக்களால் மகிழ்ச்சியுடன் கொண்டாடப்படும் திருநாளாகும். இத்திருநாளில் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் பட்டாசுகளை வெடித்து மகிழ்ச்சியை வெளிப்படுத்துவார்கள். அதேவேளையில், பட்டாசுகளை வெடிப்பதால் நம்மைச் சுற்றியுள்ள நிலம், நீர், காற்று உள்ளிட்டவை பெருமளவில் மாசுபடுகின்றன. பட்டாசு வெடிப்பதால் மேலும், அதிகப்படியான ஒளி மற்றும் காற்று மாசினால் சிறு குழந்தைகள் வயதான பெரியவர்கள் மற்றும் நோய்வாய்ப்பட்ட வயோதிகர்கள், உடலளவிலும், மனதளவிலும் பெரும் பாதிப்புக்கு உள்ளாகிறார்கள்.

பட்டாசு உற்பத்தி மற்றும் விற்பனைக்கு தடை கோரி, மாண்புமிகு உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்ட பொதுநல வழக்கில், மாண்புமிகு உச்ச நீதிமன்றம் தனது 23.10.2018-ஆம் நாளிட்ட ஆணையில், சுற்றுச்சூழலுக்கு உகந்த மூலப் பொருளை பயன்படுத்தி பட்டாசுகளை உற்பத்தி செய்ய வேண்டும் எனவும், வருங்காலத்தில் பசுமை பட்டாசு உற்பத்தி செய்து, விற்பனை செய்ய வேண்டும் எனவும், நிபந்தனைகளை விதித்து, மாண்புமிகு உச்சநீதிமன்றம் தனது 29.10.2021 அன்று மேற்குறிப்பிடப்பட்ட நிபந்தனைகளை, மீண்டும் அறிவுறுத்தியுள்ளது.

மேலும், மாண்புமிகு உச்சநீதிமன்றம் தனது ஆணையில், பட்டாசுகளை வெடிப்பதால், காற்றின் தரம் பாதிக்கப்படுவது குறித்து, போதுமான விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் எனவும், திறந்தவெளியில் குறிப்பிட்ட பகுதிகளில் மட்டுமே பட்டாசுகளை வெடிக்க, மாநில அரசு வலியுறுத்த வேண்டும் எனவும் அறிவித்தியுள்ளது.

மாண்புமிகு உச்சநீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில், தமிழ்நாடு அரசு கடந்த 3 ஆண்டுகளாக, தீபாவளி பண்டிகையன்று காலை 6 மணி முதல் 7 மணி வரையும், இரவு 7 மணி முதல் 8 மணி வரையில் மட்டுமே பொதுமக்களுக்கு பட்டாசுகளை வெடிப்பதற்கு நேரம் நிர்ணயம் செய்து அனுமதி வழங்கியது. இந்த ஆண்டு தீபாவளி பண்டிகை தினத்தன்று கடந்த ஆண்டை போலவே காலை 6 மணி முதல் 7 மணி வரையிலும, இரவு 7 மணி முதல் 8 மணி வரை மட்டுமே பொதுமக்கள் பசுமை பட்டாசுகளை வெடிக்க வேண்டும் என தெரிவிக்கிறார்கள்.

மேலும் பட்டாசுகளை வெடிப்பதால், ஏற்படும் சுற்றுச்சூழல் சீர்கேடு குறித்து, உடல் நலனில் ஏற்படும் பாதிப்புகள் குறித்தும், போதிய அளவில் விழிப்புணர்வு ஏற்படுத்த, தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.

அதன்படி, மாநிலத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் உள்ள பள்ளிகள், கல்லூரிகளில் செயல்பட்டு வரும் தேசிய பசுமை படைகள், பசுமை மன்றங்கள், தன்னார்வ நிறுவனங்கள் மூலம் பொதுமக்களிடையே போதுமான விழிப்புணர்வு ஏற்படுத்த பள்ளிக் கல்வித்துறை, உயர்கல்வித் துறை மற்றும் சிறு,குறு மற்றும் நடுத்தர தொழில் முனைவோர் ஆகியவை துறைகளின் செயலாளர்கள், காவல் துறை இயக்குனர், அனைத்து மாவட்ட ஆட்சியர்கள், சுற்றுச்சூழல் துறை இயக்குனர், மாநகராட்சி ஆணையர்கள் மற்றும் உயர் அதிகாரிகள் ஒத்துழைப்போடு அனைத்து மாவட்டங்களிலும் விழிப்புணர்வு ஏற்படுத்த, தமிழ்நாடு அரசு மாசு கட்டுப்பாட்டு வாரியம் மூலம் தக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

சுற்றுச்சூழல் பாதிப்பு இல்லாமல் பேணிக் காப்பது நம் ஒவ்வொருவரின் கடமையும், பொறுப்பும் ஆகும். இதனை கருத்தில் கொண்டு, பொதுமக்கள் குறைந்த ஒலியுடன், குறைந்த அளவில் காற்று மாசு படுத்தும் தன்மையும் கொண்ட பசுமை பட்டாசுகளை மட்டுமே வெடிக்க வேண்டும்.

பொதுமக்கள் திறந்த வெளியில் ஒன்று கூடி, கூட்டமாக காலை 6 மணி முதல் 7 மணி வரையிலும், இரவு 7 மணி முதல் 8 மணி வரை மட்டுமே பசுமை பட்டாசுகளை வெடிக்க வேண்டும்.

அதிக ஒலி எழுப்பும் தொடர்ச்சியாக வெடிக்கக் கூடிய சரவெடிகளை தவிர்க்க வேண்டும்.

மருத்துவமனைகள், வழிபாட்டுத் தலங்கள் மற்றும் அமைதி காக்க படும் இடங்களில் பட்டாசுகளை வெடிப்பதை தவிர்க்க வேண்டும். குடிசை பகுதிகள் மற்றும் எளிதில் தீப்பற்றக்கூடிய இடங்களுக்கு அருகில் பட்டாசு வெடிப்பதை தவிர்க்க வேண்டும்.

பொதுமக்கள் சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படுத்தாத பட்டாசுகளை அரசு அனுமதித்துள்ள நேரத்தில் உரிய இடங்களில் கூட்டமாக வெடித்து, மாசற்ற தீபாவளி கொண்டாட வேண்டும். அனைவருக்கும் இதையம்கனிந்த மாசற்ற தீபாவளி நல் வாழ்த்துக்கள் என மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் ச.விசாகன், இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்கள்.

செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.