Close

Collector – Employment Camp

Publish Date : 02/11/2021
.

செ.வெ.எண்:-07/2021

நாள்:02.11.2021

வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் சார்பில் தொழில்நெறி வழிகாட்டும் கண்காட்சி மற்றும் கருத்தரங்கம் – நிலக்கோட்டை அரசினர் மகளிர் கலைக்கல்லூரியில் மாவட்ட ஆட்சியர் முனைவர் ச.விசாகன், இ.ஆ.ப., அவர்கள் துவக்கி வைத்தார்கள்.

தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை, திண்டுக்கல் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் சார்பில் தொழில்நெறி வழிகாட்டும் கண்காட்சி மற்றும் கருத்தரங்கம், மாவட்ட ஆட்சியர் முனைவர் ச.விசாகன், இ.ஆ.ப., அவர்கள் தலைமையில், நிலக்கோட்டை அரசினர் மகளிர் கலைக்கல்லூரியில் இன்று(02.11.2021) நடைபெற்றது.

மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் ச.விசாகன், இ.ஆ.ப., அவர்கள், தொழில்நெறி வழிகாட்டும் கண்காட்சி மற்றும் கருத்தரங்கினை துவக்கி வைத்து, தொழில்நெறி வழிகாட்டு கையேட்டை வெளியிட்டு தெரிவித்ததாவது:-

திண்டுக்கல் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் சுமார் 2 லட்சம் பதிவுதாரர்கள் வேலை வாய்ப்புக்காக தங்களது பெயர் மற்றும் கல்வித்தகுதியை பதிவு செய்துள்ளார்கள். அனைவருக்கும் வேலைவாய்ப்பு அலுவலகம் மூலம் மட்டுமே அவர்கள் தகுதிக்கேற்ப அரசுப்பணியினை வழங்குவது என்பது இயலாததாகும். எனவே, மத்திய மற்றும் மாநில அரசால் நடத்தப்படும் போட்டித் தேர்வுகளுக்கு பதிவுதாரர்களை தயார் செய்து, அவர்களை நிரந்தர அரசு வேலையில் பணி அமர்த்த வேண்டி வேலைவாய்ப்பு அலுவலகத்தில் தன்னார்வ பயிலும் வட்டம் ஏற்படுத்தப்பட்டு, பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. சிறந்த வல்லுநர்களைக் கொண்டு பயிற்சி வகுப்புகளும், மாதிரித் தேர்வுகளும் நடத்தப்பட்டு வருகின்றன. இதுவரை 65-க்கும் மேற்பட்ட நபர்கள் பல்வேறு போட்டித் தேர்வுகளில் தேர்ச்சி பெற்று தற்போது நிரந்தர அரசுப்பணியில் உள்ளார்கள்.

மேலும், மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலக வளாகத்தில், தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு நடைபெற்ற வேலைவாய்ப்பு முகாம்களில் 131 வேலையளிப்பவர்கள் கலந்துகொண்டு, தங்கள் நிறுவனங்களுக்குத் தேவையான 840 வேலை தேடுபவர்களைத் தேர்வு செய்துள்ளார்கள்.

மேலும், படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் தங்களை தொழில்முனைவோராக முன்னேற்றிக்கொள்ள மாவட்ட தொழில் மையத்தின் மூலம் மானியத்துடன் கூடிய பல்வேறு கடனுதவிகள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. இதன்மூலம் தாங்களும் தொழில்முனைவோராக உயர்ந்து, பிறருக்கும் வேலைவாய்ப்பினை உருவாக்கித் தர இயலும் என மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் ச.விசாகன், இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்கள்.

இந்நிகழ்ச்சியில், மதுரை மண்டல இணை இயக்குநர்(வேலைவாய்ப்பு) திரு.வெ.சுப்பிரமணியன், மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் உதவி இயக்குநர் திருமதி ச.பிரபாவதி, நிலக்கோட்டை அரசினர் மகளிர் கலைக்கல்லூரி முனைவர் து.இராஜேந்திரன், மாவட்ட தொழில் மைய பொது மேலாளர் திரு.சே.மருதப்பன், மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலர் திருமதி ச.காமேஸ்வரி உட்பட பலர் கலந்துகொண்டார்கள்.

செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.