Monday – Grievance Day Petition-21/03/2022

செ.வெ.எண்:-39/2022
நாள்:21.03.2022
திண்டுக்கல் மாவட்டம்
திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் ச.விசாகன், இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது.
திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் ச.விசாகன், இ.ஆ.ப., அவர்கள் தலைமையில், மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் இன்று (21.03.2022) நடைபெற்றது.
தமிழக அரசின் உத்தரவின்படி, பொதுமக்களின் குறைகளை களைவதற்காகவும், பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை பெற்று உரிய விசாரணை மேற்கொண்டு, தகுதியான பயனாளிகளுக்கு அரசின் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டு வருகிறது. அதனடிப்படையில், வாரந்தோறும் திங்கள் கிழமைகளில் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம், மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் கொரோனா வைரஸ் பரவல் தடுப்பு நிலையான வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றி நடத்தப்படுகிறது.
இன்றைய மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் பொதுமக்களிடமிருந்து 183 மனுக்கள் பெறப்பட்டன. பொதுமக்களிடமிருந்து மனுக்களை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் பெற்றுக் கொண்டார்கள். மேலும், பெறப்பட்ட மனுக்களில், தகுதியுடைய மனுக்கள் மீது உடன் நடவடிக்கை மேற்கொள்ள, சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு, மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் ச.விசாகன், இ.ஆ.ப., அவர்கள் அறிவுறுத்தினார்கள்.
தொடர்ந்து. மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் நலத்திட்ட உதவிகளாக மின்சாரம் தாக்கி இறந்த குஜிலியம்பாறையை சேர்ந்த திலகவதி அவர்களின் குடும்பத்தினருக்கு மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் பொது நிவாரண நிதியிலிருந்து தலா ரூ.1 இலட்சம் நிவாரண நிதிக்கான காசோலையும், குஜிலியம்பாறை கூடலூர் கிராம நிர்வாக அலுவலராகப் புணிபுரிந்து வந்த திரு.க.மதிவாணன் என்பரும் ஆத்தூர் வட்டம், பாளையங்கோட்டை கிராம உதவியாளராகப் பணிபுரிந்து வந்த திரு.சு.தங்கவேல் என்பரும் கொரோனா நோய் தடுப்பு பணியின் போது கொரோனா நோயால் பாதிக்கப்பட்டு, கடந்த 2021-ஆம் ஆண்டில் உயிரிழந்தமைக்காக நிவாரணம் வழங்கிட திண்டுக்கல் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களால் அரசுக்கு பரிந்துரை செய்யப்பட்டதன்பேரில், அப்பணியாளர்களின் குடும்பத்தினருக்கு முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து தலா ரூ.25 இலட்சம் நிவாரண நிதிக்கான காசோலைகளையும், திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கடந்த 14.03.2022 அன்று நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் அன்று பெறப்பட்ட ஆத்தூர் வட்டம் அம்பாத்துறை மற்றும் கீழக்கோட்டை கிராமங்ளில் வீட்டுமனைப்பட்டா கோரி மனுக்கள் மீது தீர்வு காணப்பட்டு இன்றைய தினம் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் ஆத்தூர் வட்டத்திற்குட்பட்ட கீழக்கோட்டை திரு.ஆண்டவர் மற்றும் அம்பாத்துறை திரு.தனசேகரன் என்பவருக்கும் தலா ரூ.36,000/- மதிப்பீட்டிலான இலவச வீட்டுமனை பட்டா, ஆத்தூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் ஈப்பு ஓட்டுநராகப் பணிபுரிந்து வரும் திரு.க.பாண்டி என்பருக்கு 20 ஆண்டுகள் எவ்வித விபத்தின்றி பணிபுரிந்தமைக்கு 4 கிராம் எடையுள்ள தங்கப்பதக்கமும், மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் சார்பில் முதுகு தண்டுவடம் பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளிகள் 12 நபர்களுக்கு பிரத்தியோகமாக வடிவமைக்கபட்ட இணைப்பு சக்கரம் பொருத்தப்பட்ட ஸ்கூட்டி தலா ரூ.97,777/- மதிப்பீட்டிலும், பார்வையற்ற மாற்றுத்திறனாளிகள் மற்றும் செவித்திறன் பாதிக்கப்பட்ட மாற்றுத்திறானளிகள் 100 நபர்களுக்கு தலா ரூ.13,000/- மதிப்பிலான ஸ்மார்ட்போன் என மொத்தம் ரூ.24,73,324/- மதிப்பீட்டிலான நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் ச.விசாகன், இ.ஆ.ப., அவர்கள் வழங்கினார்கள்.
இக்கூட்டத்தில், கூடுதல் ஆட்சியர்(வளர்ச்சி) திரு.ச.தினேஷ்குமார்,இ.ஆ.ப., மாவட்ட வருவாய் அலுவலர் திருமதி வே.லதா, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர்(பொது) திரு.இரா.அமர்நாத், தனித்துணை ஆட்சியர்(சமூக பாதுகாப்புத் திட்டம்) திரு.எல்.ராஜசேகர், உதவி ஆணையர்(கலால்)(பொ) திரு.சு.சண்முகம் உட்பட துறை அலுவலர்கள் பலர் கலந்துகொண்டார்கள்.
செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.