Close

Collector GDP

Publish Date : 10/02/2020
2

செ.வெ.எண்:-18/2020 நாள்:10.02.2020
திண்டுக்கல் மாவட்டம்

தேசிய மற்றும் மாநில அளவிலான பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த மாணவ, மாணவிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மு.விஜயலட்சுமி, இ.ஆ.ப., அவர்கள் சான்றிதழ் வழங்கி பாராட்டுகள் தெரிவித்தார்.

திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மு.விஜயலட்சுமி, இ.ஆ.ப., அவர்கள் தலைமையில், மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் இன்று (10.02.2020) நடைபெற்றது. இன்றைய மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் பொதுமக்களிடமிருந்து 403 மனுக்கள் பெறப்பட்டது. இந்த மனுக்கள் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ள சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் உத்தரவிட்டார்.

தமிழக அரசின் உத்தரவின்படி பொதுமக்களின் குறைகளை களைவதற்காகவும், பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை பெற்று உரிய விசாரணை மேற்கொண்டு தகுதியான பயனாளிகளுக்கு அரசின் நலத்திட்ட உதவிகளை வழங்கிட அம்மா திட்ட முகாம், மக்கள் தொடர்பு முகாம், சிறப்பு குறைதீர்க்கும் முகாம், விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் போன்றவை நடத்தப்பட்டு வருகிறது. அதனடிப்படையில் வாரந்தோறும் திங்கள்கிழமைகளில் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் நடத்தப்படுகிறது.

திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்றைய தினம்; நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில், பொதுமக்களிடமிருந்து வரப்பெற்ற மனுக்களை பெற்றுக் கொண்டும், இதற்குமுன் பெறப்பட்ட மனுக்களின் மீதும், எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்தும் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. தகுதியுடைய மனுக்கள் மீது உடன் நடவடிக்கை மேற்கொள்ள, சம்மந்தப்பட்ட அலுவலர்களுக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மு.விஜயலட்சுமி, இ.ஆ.ப., அவர்கள் அறிவுறுத்தினார். மேலும், 03.01.2020 அன்று நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மனு அளித்த திரு.வெங்கடேஷன் என்பவரின் மனு மீது மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தனிக்கவனம் செலுத்தி, உடனடியாக ஆய்வு மேற்கொண்டு தகுதியின் அடிப்படையில் திரு.வெங்கடேஷன் அவர்களுக்கு மாவட்ட மாற்றுத்திறனாளிகளுக்கான விலையில்லா வீட்டுமனை பட்டாவை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் வழங்கினார்.

இன்றைய கூட்டத்தில், தேசிய அளவிலான மும்முறை தாண்டும் தடகள போட்டியில் தொடர்ந்து 3 ஆண்டுகளாக வெள்ளிப்பதக்கம் வென்;ற தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் திண்டுக்கல் மாவட்ட மாணவியர் விளையாட்டு விடுதியைச் சேர்ந்த மாணவி சி.இமயத்தரசிக்கு சான்றிதழ் மற்றும் கேடயத்தினை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் வழங்கி பாராட்டினார்.

அதனைத்தொடர்ந்து, தமிழக பள்ளிக்கல்வித்துறை சார்பில் கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூரில் நடைபெற்ற மாநில அளவிலான குடியரசு தின குழு போட்டிகளில் 14 வயதிற்குட்பட்டோருக்கான கைப்பந்து போட்டியில் தங்கப்பதக்கம் வென்;ற திண்டுக்கல் மாவட்டம், கள்ளிமந்தையம் பிருந்தாவன் மெட்ரிக் பள்ளியைச் சேர்ந்த 10 மாணவிகள், அகில இந்திய அளவில் 13, 14, 16, 17, 19 வயதிற்குட்பட்டோர் பிரிவில் நடைபெற்ற பல்வேறு தடகளப் போட்டிகளில் பரிசுகள் பெற்ற பட்டிவீரன்பட்டி என்.எஸ்.வி.வி. மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியைச் சேர்ந்த 13 மாணவ, மாணவிகள் மற்றும் தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகம் மற்றும் திண்டுக்கல் மாவட்ட நிர்வாகம் ஆகியவை இணைந்து நடத்திய மாவட்ட அளவிலான திறன் மேம்பாட்டு போட்டியில் வெற்றி பெற்ற முதல் மற்றும் இரண்டாம் நிலையில் வெற்றி வெற்ற 13 மாணவ, மாணவியர்கள் என மொத்தம் 37 மாணவ, மாணவியாகளை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மு.விஜயலட்சுமி, இ.ஆ.ப., அவர்கள் பாராட்டினார்.

இக்கூட்டத்தில், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் திருமதி கவிதா, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) திரு.ஆர்.ராஜ்குமார், தனித்துணை ஆட்சியர் (சமூகப் பாதுகாப்புத் திட்டம்) திரு.சிவக்குமார், உதவி இயக்குநர்(ஊராட்சிகள்) திருமதி கங்காதாரணி, மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நல அலுவலர் திருமதி ம.ரோஸ் பாத்திமா மேரி, பிருந்தாவன் மெட்ரிக் பள்ளி தாளாளர் திருமதி கே.ஜெயசெல்வி, பள்ளி முதல்வர் திரு.கே.முத்துவேல் உட்பட அனைத்துத்துறை அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.