Collector Inspection -Nilakottai Agri Schemes

செ.வெ.எண்:-08/2021
நாள்: 06.07.2021
திண்டுக்கல் மாவட்டம்
நிலக்கோட்டை பகுதிகளில் வேளாண்மை தொடர்பான பல்வேறு திட்டப்பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ச.விசாகன், இ.ஆ.ப., அவர்கள் ஆய்வு மேற்கொண்டார்.
திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை பகுதிகளில் வேளாண்மை தொடர்பான பல்வேறு திட்டப்பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ச.விசாகன், இ.ஆ.ப., அவர்கள் இன்று(06.07.2021) ஆய்வு மேற்கொண்டார்.
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள், தமிழகத்தில் வேளாண்மையை மேம்படுத்தும் வகையில் வேளாண்மை பணிகளுக்கு முக்கியத்துவம் அளித்து வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை சார்பில் பல்வேறு திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி வருகிறார். அந்த வகையில் திண்டுக்கல் மாவட்டத்தில் நடைபெற்று வரும் வேளாண் பணிகள் குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தொடர்ந்து ஆய்வு மேற்கொண்டு வருகிறார்.
திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை வட்டம், மட்டப்பாறை, விளாம்பட்டி, மாலையகவுண்டன்பட்டி, ஜம்புதுறைகோட்டை ஆகிய பகுதியில் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் இன்று ஆய்வு மேற்கொண்டார். மட்டப்பாறை கிராமத்தில் இயந்திரம் மூலம் நெல் நடவுப் பணிகளை ஆய்வு செய்தார். நெல் நடவு இயந்திரத்தின் பயன்பாடு குறித்து விவசாயிகளிடம் கேட்டறிந்தார். அதற்கு விவசாயிகள், இயந்திரம் மூலம் நெல் நடவுப் பணிகள் மேற்கொள்வதால் நடவுப் பணிக்கான ஆட்கள் பற்றாக்குறை பிரச்சனைக்கு தீர்வு கிடைக்கிறது. குறைந்த தொழிலாளர்களை பயன்படுத்தி அதிக அளவிலான பரப்பளவில் நடவுப் பணிகள் மேற்கொள்ள முடிகிறது. மேலும் சமஇடைவெளி விட்டு இயந்திரம நாற்று நடவு செய்யப்படுவதால் எலி தொல்லையில் இருந்து பயிர்கள் பாதுகாக்கப்படுகிறது. இதனால் 20 சதவீதம் கூடுதல் மகசூல் கிடைக்கிறது, என்று விவசாயிகள் தெரிவித்தனர்.
இதனைத்தொடர்ந்து, விளாம்பட்டி கிராமத்தில் கட்டப்பட்டு வரும் ஒருங்கிணைந்த வேளாண்மை விரிவாக்க அலுவலக கட்டடப் பணிகளை பார்வையிட்டார். தொடர்ந்து நிலக்கோட்டையில் கட்டி முடிக்கப்பட்ட வேளாண்மை விரிவாக்க அலுவலக கட்டடத்தை பார்வையிட்டார். பின்னர் தோட்டக்கலைத்துறை சார்பில் மாலையகவுண்டன்பட்டியில் அமைக்கப்பட்டுள்ள பசுமைக்குடில் மற்றும் ஜம்புதுரைகோட்டையில் நாவல் மற்றும் டிராகன் பழம் சாகுபடி தொடர்பான பணிகளை ஆய்வு மேற்கொண்டு, விவசாயிகளிடம் அவர்களின் தேவைகளை கேட்டறிந்தார்.
விவசாயிகளுக்கு வேளாண்மை தொடர்பான பணிகள் மற்றும் அரசு வழங்கும் மானிய திட்டங்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் அறிவுறுத்தினார்.
இந்த ஆய்வின்போது, வேளாண்மைத்துறை இணை இயக்குநர் திரு.பாண்டித்துரை, தோட்டக்கலைத்துறை துணை இயக்குநர் பெருமாள்சாமி, நிலக்கோட்டை வட்டாட்சியர் திரு.சுப்பையா உட்பட தொடர்புடைய அலுவலர்கள் உடனிருந்தனர்.
செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.