Close

Collector Inspection at Thottanuthu Gram Panchayat

Publish Date : 08/01/2022
.

.

செ.வெ.எண்:-17/2022

நாள்:07.01.2022

தோட்டனூத்து கிராமத்தில் புதியதாக இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம் அமைக்க நடைபெற்று வரும் பணிகள் மற்றும் சாணார்பட்டி பகுதியில் நடைபெற்று வரும் வளர்ச்சி திட்டப்பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் ச.விசாகன், இ.ஆ.ப., அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்கள்

திண்டுக்கல் மாவட்டம், திண்டுக்கல் கிழக்கு வட்டம், தோட்டனூத்து கிராமத்தில் ரூ.17.17 கோடி மதிப்பீட்டில் இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம் அமைக்க நடைபெற்று வரும் பணியினை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ச.விசாகன், இ.ஆ.ப., அவர்கள், கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) திரு.ச.தினேஷ்குமார்,இ.ஆ.ப., அவர்கள் முன்னிலையில் இன்று (07.01.2022) நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்கள்.

இலங்கை தமிழர் அகதிகள் முகாம்களில் வசிப்பவர்களுக்கு நிரந்தர குடியிருப்புகள் கட்டும் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. அதுவும் 120 நாட்களில் பணிகளை முடிக்க வேண்டும் என அறிவித்து பணிகள் விரைந்து மேற்கொள்ளப்பட்டு வருகிறது. முகாம்களில் வசிப்பவர்களுக்கு, நிரந்தரமான வீடுகள், குழந்தைகளுக்கு கல்வி, வேலைவாய்ப்பு, தொழில் மற்றும் அடிப்படை தேவைகளை நிறைவேற்ற பல்வேறு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

திண்டுக்கல் மாவட்டத்தில், முதற்கட்டமாக தோட்டனூத்து, அடியனூத்து மற்றும் கோபால்பட்டி ஆகிய மூன்று இலங்கை அகதிகள் முகாம்களை ஒருங்கிணைத்து, தோட்டனூத்து கிராமத்தில் ரூ.17.17 கோடி மதிப்பீட்டில் 321 வீடுகள் கட்டி புதியதாக இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாம் அமைக்க பணிகள் நடைபெற்று வருகிறது. ஒவ்வொரு வீடும் தலா ரூ.4.75 லட்சம் மதிப்பில் கட்டப்படுகிறது. மேலும், சுகாதார வசதி, சாலை வசதி என உள்கட்டமைப்பு வசதிகள் அமைக்க ரூ.30 கோடி நிதி தனியாக ஒதுக்கீடு செய்யப்பட்டு பணிகள் நடைபெற்று வருகிறது. பணிகளை விரைந்து முடிக்க தகுந்த அறிவுரைகளை வழங்கினார்கள்.

அதனை தொடர்ந்து, திண்டுக்கல் மாவட்டம் திண்டுக்கல் கிழக்கு வட்டம், சாணார்பட்டி வட்டம், தவசிமடையில் கிராமம், விடுதலைப்பட்டியில் ரூ.10.545 லட்சம் மதிப்பீட்டில் கட்டிமுடிக்கப்பட்ட ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி சுற்றுசுவர் மற்றும் ரூ.5.00 லட்சம் மதிப்பீட்ல் கட்டப்பட்டு வரும் சமையல் அறை, அஞ்சுகுழிப்பட்டி பகுதியில் ரூ.4.60 இலட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் தடுப்பணையினை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ச.விசாகன், இ.ஆ.ப., அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்கள்.

இந்த ஆய்வின் போது, திண்டுக்கல் கிழக்கு வட்டாட்சியர் திருமதி.சந்தனமேரி கீதா, உதவி பொறியாளர் திரு.யு.முருகன், திண்டுக்கல் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் திரு.எஸ்.கிருஷ்ணன், திரு.டி.மலரவன் உட்பட தொடர்புடைய அலுவலர்கள் உடனிருந்தனர்.

செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலகம், திண்டுக்கல்