Close

Collector Inspection – Athoor Panchayat Union – Development Works

Publish Date : 30/08/2025
.

செ.வெ.எண்:- 104/2025

நாள்: 28.08.2025

திண்டுக்கல் மாவட்டம்

திண்டுக்கல் மாவட்டத்தில் ஆத்தூர் ஊராட்சி ஒன்றியத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சித்திட்டப்பணிகளை மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

திண்டுக்கல் மாவட்டத்தில், பிள்ளையார்நத்தம், கலிக்கம்பட்டி, முன்னிலைக்கோட்டை, ஆத்தூர், சித்தேரவு, போடிகம்மன்வாடி ஆகிய ஊராட்சிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு வளர்ச்சித்திட்டப் பணிகளை மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.செ.சரவணன்,இ.ஆ.ப., அவர்கள் இன்று(28.08.2025) நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

பிள்ளையார் நத்தம் ஊராட்சியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித்திட்டத்தின் கீழ் ரூ.4.96 இலட்சம் மதிப்பீட்டில் வரத்து கால்வாய் அமைக்கும் பணிகளை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

கலிக்கம்பட்டி ஊராட்சியில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின்கீழ் ரூ.7.42 இலட்சம் மதிப்பீட்டில் ஆழப்படுத்தி சீரமைக்கப்பட்ட சாலைக்குளத்தையும், கலிக்கம்பட்டி ஊராட்சி, கோட்டைப்பட்டியில் ரூ.17.25 இலட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்ட அங்கன்வாடி மையத்தை பார்வையிட்டார்.

மாவட்ட தொழில் மையம் மூலம் மரச்செக்கு அமைப்பதற்கு ரூ.5.00 லட்சம் கடன் உதவிகள் பெற்று அதில் 25 சதவீதம் மானியம் தற்சமயம் அந்த இயந்திரத்தை பயன்படுத்தி கடலை எண்ணெய், தேங்காய் எண்ணெய், நல்லெண்ணெய் மூன்று விதமான எண்ணெயை உற்பத்தி செய்யப்படுகிறது. மாதம் 1500 இருந்து 1700 லிட்டர் எண்ணெய் இதன் மூலம் உற்பத்தி செய்து விற்பனை செய்யப்படுகிறது. இதற்கு மகளிர் சுய உதவி குழு, துளசி குழு மூலம் மூலப் பொருள்கள் வாங்குவதற்கு ரூபாய் 50,000 கடனாக பெற்று அதன் மூலம் இயற்கை முறையில் செக்கில் எண்ணெய் உற்பத்தி செய்து சுற்றி இருக்கும் கிராமங்களில் விற்பனை செய்து வருவதை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

கலிக்கம்பட்டி ஊராட்சியில் நியாயவிலைக் கடையில் இருப்பு பொருட்கள் மற்றும் பொதுமக்களுக்கு வழங்கப்படும் பொருட்களின் தரம் குறித்து பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

முன்னிலைக்கோட்டை ஊராட்சியில் முதலமைச்சரின் வீடுகள் மறுகட்டுமானத் திட்டத்தின்கீழ் 2001-ஆம் ஆண்டிற்கு முன்பு கட்டப்பட்ட தொகுப்பு வீடுகளை தற்பொழுது சீரமைத்து தலா ரூ.2.40 இலட்சம் மதிப்பீட்டில் 26 வீடுகள் ஆத்துார் தொகுதியில் மறுகட்டுமானம் செய்யப்பட்டு வருவதை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

முன்னிலைக்கோட்டை ஊராட்சி, அரியநல்லூர் கிராமத்தில் கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தில் கட்டப்பட்டுவரும் வீட்டினை மாவட்ட ஆட்சித்தலைவர் அவா்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். மேலும் ஆத்தூரில் கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் தலா ரூ.3.5 இலட்சம் மதிப்பீட்டில் 2024-25 ல் 1257 வீடுகள் மற்றும் 2025-26 ல் 441 வீடுகள் கட்டப்பட்டு வருகிறது. தொடர்ந்து 2024-25 ல் (i) 651 வீடுகள் மற்றும் 2024-25 (ii) 148 வீடுகள் சீரமைக்கப்பட்டது. அதனைத்தொடர்ந்து அங்கன்வாடி மையத்தை ஆய்வு செய்து குழந்தைகளுக்கு வழங்கப்பட்டுவரும் மதிய உணவினை பார்வையிட்டு உண்டு ஆய்வு மேற்கொண்டார்.

போடிக்காமன்வாடியில் மகாத்மா காந்தி சாலை மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் ரூ.241.83 இலட்சம் மதிப்பீட்டில் நிறைவடைந்த 3.95 கி.மீ. நரசிங்கபுரம் ராஜவாய்க்கால் சாலையினை பார்வையிட்டார். சித்தரெவு கிராமத்தில் ரூ.1345.66 இலட்சம் மதிப்பீட்டில் 10.51 கி.மீ. மருதாநதி வடக்கு கால்வாய் சாலை பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளதை பார்வையிட்டு ஆய்வு செய்தார்கள்.

அதனைத்தொடர்ந்து நத்தம் காவேரி கூட்டு குடிநீர் திட்டத்தின் கீழ் அய்யன்கோட்டை புதூர் கிராமத்திற்கு 30,000 லிட்டர் குடிநீர் வழங்குவதற்கு புதிதாக அமைக்கப்பட்ட பைப் லைனை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

இந்த ஆய்வின்போது, ஆத்தூர் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் முருகன், திருமதி பத்மாவதி, உதவி நிர்வாக பொறியாளர் அபிஸ்குமார் மற்றும் துறை அலுவலர்கள் பலர் உடனிருந்தனர்.

செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.